Wednesday, September 13, 2023

அற்புதம் நிறைந்த மூன்றுஸ்ரீராமர் திருத்தலங்கள்...

அற்புதம் நிறைந்த மூன்று
ஸ்ரீராமர் திருத்தலங்கள்...
சயன நிலையில் ஸ்ரீராமர் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆதி ஜெகனாத பெருமாள் கோவில் 

திருப்புல்லாணி ராமநாதபுரம் அருகே 8 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது. 108 வைணவ ஸ்தலங்களில் இது ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது. அதில் பள்ளிகொண்ட சயன நிலையில் ராமர் காட்சியளிக்கிறார். இவ்வூரில் தர்ப்பையில் படுத்திருந்ததால் இப்படியான அமைப்பு இக்கோவிலில் காணப்படுகிறது. மற்ற கோவில்களில் பெருமாள் மட்டுமே இவ்வாறு காட்சியளிப்பார். ராமர் கோவில்களில் இந்த கோவிலில் மட்டுமே இப்படி ராமர் சயன நிலையில் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அருள்மிகு முடிகொண்டான் 
ராமர் ஆலயம் :

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை போகும் வழியில் உள்ளது மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டான். ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல் தலையில் மகுடத்துடன் காணபப்டுகிறார் ராமர். பரத்வாஜர் தவம் செய்த இடம் முடிகொண்டான். மூலவர் ராமர், சீதை, லக்ஷ்மணர் மட்டுமே. ஸ்ரீராமர் இலங்கை செல்லும் வழியில், பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை இலங்கையிலிருந்து திரும்பும் போது ஏற்பதாக உறுதி கொடுத்தார். இந்தக் கோவிலில் மூலவர் ஆஞ்சநேயர் இல்லை. ராமரின் வருகை பற்றி பரதரிடம் முன்கூட்டியே தெரிவிப்பதற்காக ஆஞ்சநேயர் போய்விட்டார் என்பது புராணம். ஸ்ரீராமரை அரசராக உடனே பார்க்க பரத்வாஜர் ஆசைப்பட, பரத்வாஜர் ராமனுக்கு முடிசூட்ட, ஸ்ரீராமர் மகுடத்துடன் இங்கு கிழக்கு நோக்கி தரிசனம் தருவதாக ஐதீகம். ஹனுமாருக்கு தனியாக வெளியே ஒரு சன்னதி உள்ளது. பரத்வாஜர் ராமனுக்கு முடிசூடியதை பார்க்காததால் அனுமார் கோபித்து வெளியே நிற்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். ரங்கநாதருக்கு இங்கு தெற்கு நோக்கி சன்னதி உள்ளது இந்த ஆலயந்தின் மிகப்பெரிய கோவில் குளம் ஸ்ரீ ராம தீர்த்தம் உள்ளது.சுவாமிக்கு பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் ராம நவமி திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

அருள்மிகு பருத்தியூர் ராமர் ஆலயம் :

திருவாரூர் மாவட்டம் கொடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணி தவம் இருந்த இடம், ராம லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். தெற்கு நோக்கியுள்ள சன்னதியில் பரவசமூட்டும் பருத்தியூர் ராம பரிவாரம். ராமாயண சொற்பொழிவுகள் செய்து நூற்றிற்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது. ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்பதில் அவருக்கு சிறு வயது முதல் ஆசை. ஆலயங்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்ரீ ராமரே கனவில் வந்து, தடாகம் அமைக்குமாறு கேட்க, ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று இருக்கும் போது தடாகம் கட்ட உத்தரவு வருகிறதே என்று வியந்தார். குளம் கட்ட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். ராம பக்தரான சாஸ்திரிக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. தடாகம் கட்ட நிலம் வாங்கி, ஆட்களை வைத்து செடி கொடிகளை களைந்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தன இந்த பழமை வாய்ந்த அழகிய விக்ரஹங்கள். பாரதமெங்கும் ராமர் கதை சொல்லி, ராமநாம பாராயணம் செய்து, ராமர் மேல் சங்கீதங்கள் பாடி, தன் இஷ்டதெய்வத்திற்கு ஒரு அழகான கோவிலை அமைத்தார். இக்கோவிலில் வரதராஜர், மகாலட்சுமி, விஸ்வநாதர், விசாலாக்ஷி உள்ளன. தில்லைவிளாகம் போல் இங்கும் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம். இந்த ஆலயத்தின் கோவில் குளம் ஸ்ரீ கோதண்டராம தீர்த்தம். வேதம், இசை, கதாசொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கோவிலில் சுவாமிக்கு நாமஸ்மரணம், துவாதச பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து வேண்டுவது வழக்கம். இங்கு சன்னதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிக சக்திவாய்ந்தது, விசேஷமானது. இந்த கோவிலில் பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, ஹனுமார்ஜெயந்தி பண்டிகை திருநாள் திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...