Tuesday, September 5, 2023

சனாதன தர்மம் என்பது என்ன?

சனாதன தர்மம் என்பது என்ன?
சனாதனம் என்றால் காலத்தால் அழியாமல் என்றும் உள்ளது என்று பொருள். தர்மம் என்பது அடிப்படைக் கோட்பாடு. சனாதன தர்மம் என்றால் காலத்தால் அழியாமல், இடத்துக்கு இடம் மாறுபடாமல் என்றும் நிலைத்திருக்கும் கோட்பாடுகளின் தொகுப்பு.

வர்ண-ஆஸ்ரம தர்மம் வேறு, சனாதன தர்மம் வேறு.
வர்ண-ஆஸ்ரம தர்மம் என்பது மனிதர்களால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் தொகுப்புகள். இவை இடத்துக்கு இடம், காலத்துக்கேற்ப மாறுபடும். ஆனால், சனாதன தர்மம் என்பது மனிதர்களால் ஏற்பட்ட கோட்பாடுகளின் தொகுப்பு இல்லை. அவை பிரபஞ்ச விதிகள். சமூகக் கோட்பாடுகள் இல்லை.
வர்ண-ஆஸ்ரம தர்மம் என்பதை வர்ணாஸ்ரம தர்மம் என்று சேர்த்துச் சொல்லிச் சொல்லிப் பழகி விட்டோம். இரண்டும் ஒன்றில்லை. 

வர்ண தர்மம் என்பதன் சாரம் என்ன? அறிஞர்கள், வீரர்கள், வணிகர்கள், உழைப்பாளிகள் என ஆவதற்குத் தக்க அடிப்படைப் பண்புடையவர்களாக மனிதர்களில் நால்வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதே அந்தக் கோட்பாட்டின் சாரம். இந்தப் பிரிவுக்கும் ஜாதிகளுக்கும் தொடர்பில்லை. இந்தப் பண்புகள் மரபணுவால் மட்டுமே நிச்சயிக்கப் படுவதில்லை. அப்படி இருந்தால், ஆம்பேட்கர் நம் அடிப்படைச் சட்டத்தை வடிவமைத்த  அறிஞராக இருந்திருக்க முடியாது. எனவே பிறப்பை மட்டும் வைத்து ஒருவர் அறிஞராக வரக் கூடியவரா, செயல்வீரராக வரக்கூடியவரா, வணிகராக வரக் கூடியவரா அல்லது தம் உழைப்பினால் உலகத்தை உயர்த்தும் உழைப்பாளியாக வரக் கூடியவரா என்பதைத் தீர்மானிக்கக் கூடாது. 

ஆஸ்ரம தர்மம் என்பது வேறு. கற்கும் பருவம், இல்லறப் பருவம், ஓய்வுப் பருவம், துறவறப் பருவம் என்ற நான்கு நிலகளை முறையே பிரும்மச்சரிய ஆஸ்ரமம், கிரஹஸ்த ஆஸ்ரமம், வானப்பிரஸ்த ஆஸ்ரமம், சன்யாச ஆஸ்ரமம் என்று பகுத்துப் பார்க்கும் நல்ல சிந்தனை அது.
எனவே, பிராமணர், முதலியார், செட்டியார், பிள்ளைமார், கவுண்டர், வன்னியர், நாடார், தேவர், பறையர், பள்ளர் என்று நாமே கற்பித்துக் கொண்ட நூற்றுக் கணக்கான ஜாதிப் பிரிவுகளுக்கும் சனாதன தர்மத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

நாம் கற்பித்துக் கொண்ட நூற்றுக் கணக்கான ஜாதிப் பிரிவுகளுக்கும் நால்வர்ணக் கோட்பாட்டுக்கும், ஆஸ்ரம தர்மத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஆனால் இந்த நால்வர்ணக் கோட்பாட்டைப் பிறப்புடன் இணைத்து, பல ஜாதிகளை அவற்றுள் அடக்கி வைத்ததும், அவற்றைச் சமதளத்தில் வைக்காமல், உயர் அடுக்கு முறையில் ஒன்று இன்னொன்றை விட உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்று கற்பித்துக் கொண்டதும்
மாபெரும் தவறு. அது தர்மமே இல்லை; அதர்மம், கண்டிக்கத் தக்கது. 
ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்த அஞ்சி, சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தலாமா?

இதெல்லாம் புரியாமல் சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று சொல்வது அறியாமையின் விளைவு.

தமக்கு அர்த்தம் தெரியாத சொல்லைப் பேச்சில் பயன்படுத்தத் தேவையே இல்லை. “ஜாதிப் பாகுபாடுகளை எதிக்கிறோம்” என்ற அர்த்தத்தில்தான் சனாதன எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் என்பதான விளக்கம் அபத்தமானது. ஜனநாயகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்பதால் ஊழலை எதிர்ப்பதாகக் கற்பித்துக் கொண்டு, ஜனநாயகத்தையே எதிர்ப்பது போன்ற மடமையின் வெளிப்பாடுஅது.

பிறப்பை வைத்து மனிதர்களை உயர்வு தாழ்வு என்று வேறுபடுத்தும் வழக்கத்தை எதிர்க்கிறோம் என்று தூய தமிழில் சொல்லியிருந்தால், நானும் ஆதரித்திருப்பேன், எல்லாரும் ஆதரித்திருப்பார்கள். பிறகு ஏன் புரியாத வடமொழிச் சொற்களைப் பயன்படுத்திப் பேச வேண்டும்?
பொருள் புரியாத சொற்களைப் பேச்சில் பயன்படுத்துவதை தவிர்க்கலாமே. நீங்கள் எதை எதிர்க்கிறீர்கள் என்பதையாவது தெளிவாகத் தமிழில் சொல்லுங்கள். தமிழில் பேசுங்கள்!

பின் குறிப்பு:
சனாதனத்தை எதிர்த்தவரின் தலையைக் கொய்துவிட வேண்டும் என்று ஒருவர் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. அப்படிப்பட்ட வன்முறைப் பேச்சுக்கு சனாதன தர்மத்தில் இடம் கிடையாது. மனிதர்களால் ஏற்படுத்தப் படாத சனாதன தர்மத்தை, ஏன், காலத்தால் அழியாத சனாதன தர்மத்தை, மனிதர் எவரும் பாதுகாக்கத் தேவையில்லை. அது அழிக்கவே முடியாதது. 🙂🙏

நன்றி 🙏🙏
திரு.ரவி கல்யாணராமன்.
மூத்த வழக்கறிஞர்
சென்னை

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...