Friday, December 8, 2023

மகாலட்சுமியான ஸ்ரீதேவியின் தோழிகள், ''மற்றவர்களைக் காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள்.

மகாலட்சுமிக்கு பிடித்த திருத்தங்கல்!
பணத்திற்கு நாயகியான மகாலட்சுமிக்கு ஒரு ஊர் தமிழகத்தில் பிடித்திருக்கிறது என்றால், அதுதான் திருத்தங்கல்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள திருத்தங்கல்லில் உள்ள நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள். இங்கு வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.

திருமால் பாற்கடலில் சயனித்திருந்த போது ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்குள் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பிரச்னை ஏற்பட்டது. 

மகாலட்சுமியான ஸ்ரீதேவியின் தோழிகள், ''மற்றவர்களைக் காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். அவளே அதிர்ஷ்ட தேவதை. மகாலட்சுமி என்ற பெயரே மிக உயர்ந்தது. வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன.

பெருமாளுக்கு இவளிடம்தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் (ஸ்ரீ என்றால் லட்சுமி) என்ற திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன,''என்று புகழ்ந்தனர்.

பூமாதேவியின் தோழியரோ, ''உலகிற்கு ஆதாரமான பூமாதேவியே பொறுமைமிக்கவள். இவளைக் காக்கவே பெருமாள் வராகம் என்ற ஒரு அவதாரத்தையே எடுத்தார்,''என்றனர்.

நீளாதேவியின் தோழிகள், ''தண்ணீர் தேவதையாக விளங்குபவள் நீளாதேவி. தண்ணீரை 'நாரம்' என்பர். இவளது பெயரால்தான் பெருமாளுக்கு 'நாராயணன்' என்ற சிறப்பு திருநாமம் ஏற்பட்டது. உலகில் 'நாராயணா' என்று உச்சரிப்பவர்களே அதிகம்,” என்றனர்.

இந்த விவாதம் வளர்ந்ததே தவிர முடிந்த பாடில்லை. இதனால் ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க தங்கால மலை என்னும் திருத்தங்கலுக்கு வந்து தவம் புரிந்தாள். பெருமாளும் காட்சி அளித்து ஸ்ரீதேவியே சிறந்தவள் என ஏற்று  அருளினார். திருமகள் தங்கியதால் 'திருத்தங்கல்' என இத்தலம் பெயர் பெற்றது.

அதிர்ஷ்ட தேவதை: 

திருத்தங்கல் பெருமாள் கோயில் 'தங்கால மலை' மீது உள்ளது. 'நின்ற நாராயணப்பெருமாள்' நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

சுதையாலான இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற பெயர்கள் உண்டு. செங்கமலத்தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள்.

அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற பெயர்கள் உண்டு. அனுமன், சக்கரத்தாழ்வார் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர்.

அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர் ஆகியோர் கருவறையில் உள்ளனர். 1300 ஆண்டுகள் பழமையான கோயில் இது. இங்கு பாஸ்கர, பாபநாச தீர்த்தங்களும், அர்ச்சுனா நதியும் உள்ளன.

சிறப்பம்சம்: 

கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன் கைகள் வணங்கிய நிலையிலும், பின் கைகளில் அமிர்த கலசமும், நாகமும் உள்ளன.

தனக்கு எதிரியான பாம்பை நண்பனாக ஏற்று, கருடாழ்வார் தன் கையில் ஏந்தியிருப்பது மிகவும் விசேஷம். எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால், அவர்களும் மனம் திருந்தி நண்பர்களாகி விடுவர் என்பது ஐதீகம். ரங்கநாதர் சன்னிதி இங்குள்ளது.

மூலஸ்தானத்தில் நான்கு தாயார்கள் உள்ளனர். அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி (பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவதி. இவர்களில் ஜாம்பவதியை இங்குதான் பெருமாள் திருமணம் செய்து கொண்டார். 

நான்கு தாயார்களுடன் இருக்கும் இத்தலத்தில் பெருமாளையும், தாயார்களையும் வேண்டிக் கொள்ள, திருமணத் தடை நீங்கும். தடை உள்ளவர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாத்தி, தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புளியோதரை படைத்து வழிபடுகின்றனர்.

இருப்பிடம்: விருதுநகர் - சிவகாசி வழியில் 20 கி.மீ.,

No comments:

Post a Comment

Followers

திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திரபடி கட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி போஸ்ட், கடலூர் மாவட்டம். காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல...