தாயிற் சிறந்த கோயிலுமில்லை
*மாத்ரு_பக்தி*
*ஆதி_சங்கரர்*
ஆதி சங்கரர் தாம் சந்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் தாயின் இறுதி காலத்தில் மூன்று முறை சங்கரா என்றழைத்தால் எங்கிருந்தாலும் நான் வந்துவிடுவேன் என வாக்களித்து செல்கிறார்.
தாயார் 'ஆர்யாம்பாளி'ன் இறுதிக் காலம் நெருங்குகிறது. தாயும் மூன்று முறை சங்கரா என்றழைக்கிறார், சிறிது நேரம் கடக்கிறது அம்மா என்ற குரல் கேட்கிறது. 'சங்கரா வந்துவிட்டாயா அருகில் வா' என்கிறார்.
கண்பார்வை மங்கிய நிலையில் அருகில் வந்த சங்கரனை தொட்டு தடவுகிறார் தாயார். அவருடைய மனம் பதைத்துப் போகிறது. துறவறம் மேற்கொண்ட மகனின் உடம்பில் அணிந்துள்ள ஆபரணங்களின் ஸ்பரிசம் ஏற்படுகிறது. மகன் துறவறக் கடமையிலிருந்து தவறிவிட்டானோ என்று மனம் அஞ்சுகிறது, மீண்டும் அம்மா என்ற குரல் அம்மாவை அழைத்தபடி சங்கரன் வருகிறார், மகனே சங்கரா இப்போதுதான் வருகிறாயா என்று நடந்ததை சங்கரனிடம் கூறுகிறார்.
சங்கரனோ சிரித்தபடி "அம்மா நான் துறவரம் சென்றபோது நமது வீட்டின் எதிரிலுள்ள ஆலயத்தின் கிருஷ்ணனிடம் நான் வரும்வரை அம்மாவை பார்த்துக்கொள்" என்று கூறிவிட்டுப் போனேன் நான் வர தாமதமானதால் உங்கள் மனது நோகக் கூடாது என்று அந்த கிருஷ்ணனே வந்திருக்கிறான் என்றார்.
தன் தாயாரின் நெடுநாளைய ஆவலான தெய்வ தரிசனத்திற்காக தன் தபோ சக்தியால் அவருக்கு மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைக்கச் செய்கிறார்.
ஆதிசங்கரரின் தாயார் சமாதியும், அதில் சங்கரர் ஏற்றி வைத்த விளக்கும், தாயாருக்கு காவல் இருந்த கிருஷ்ணரின் ஆலயமும் காலடியில் இன்றும் உள்ளது.
தாயார் இறந்தபின் அவர் அருளிச் செய்த 'மாத்ரு பஞ்சகம்' என்னும் 5 பாடல்கள் தாயாரின் பெருமையை நமக்கு விளக்குகிறது.
*#பட்டினத்தடிகள்*
பட்டினத்தடிகள் துறவறம் ஏற்று ஊர் ஊராகச் செல்ல (துறவி தர்மம்) நினைத்தார். ஆயினும் தன் தாயார் 'ஞானகளை' யின் அன்பில் கட்டுண்டு ஊர் எல்லையிலேயே தங்கியிருந்தார்.
சிறிது காலத்திற்குப்பின் அவருடைய அன்னையார் மரணமடைந்தார்.
ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழை மட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்து ஞானப் பாடல்கள் பாடி சிதைக்கு தன்னுடைய தபோ சக்தியால் தீ மூட்டினார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை :
"ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ விறகிலிட்டு தீமூட்டு வேன்.
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் ருசியுள்ள தேனே அமுதமே செல்வத் திரவியப் பூமானே என அழைத்த வாய்க்கு.
அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகம் மேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு.
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.
வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை.
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.
*#ரமண_மகரிஷி*
ரமண மகரிஷியின் தாயார் 'அழகம்மாள்' தன் கடைசி காலம் முழுவதையும் ரமணருடன்தான் கழித்தார்.
ரமணர் தனது தாயாரின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாது, சுதந்திரமானதும் மகிழ்ச்சியானதுமான சூழ்நிலையை தந்ததோடு கலப்பில்லாத சத்சங்கத்தை தந்து அத்வைத ஞானத்தை போதிக்கிறார்.
தன் தாயாரின் மனதில் நிறைந்திருந்த ஜாதிபேதம், ஆசாரம் போன்ற த்வைத எண்ணங்களை மாற்றி அத்வைத்தில் மனம் லயிக்க வழி வகுக்கிறார்.
இறுதியில் தாயாரின் இறுதிச் சடங்கையும் நிறைவேற்றுகிறார்.
**************************
முற்றும் துறந்த சந்யாசிகளையும் தனது தாயாரை காலில் விழுந்து வணங்குமாறு நமது வேதம் கட்டளையிடுகிறது.
*_உலகத்தையே துறந்தாலும் பெற்ற தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை மகான்கள் செய்ய தவறகூடாது.
**
No comments:
Post a Comment