Friday, April 26, 2024

தஞ்சை மாவட்ட, திருவையாறில் “சப்தஸ்தானம்” என்னும் பெரிய விழா

திருவையாறு ஏழூர் சப்தஸ்தான திருவிழா...
ஒவ்வோர் ஆண்டும், சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தன்று, தஞ்சை மாவட்ட, திருவையாறில் “சப்தஸ்தானம்” என்னும் பெரிய விழா நடக்கும்! காவிரி, குடமுருட்டி, கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு, என்னும் ஐந்து ஆறுகள் பாய்வதால், அந்தப் பகுதிக்கு திருவையாறு எனப் பெயர் சூடி உள்ளனர். அங்கு நடந்து வந்தக் கோலாகல விழா தான் “சப்தஸ்தானம்”!
        திருவையாறு நகரைச் சுற்றி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் என்னும் ஆறு அழகிய கிராமங்கள், காவிரி, குடமுருட்டி நதிகளின் கரையிலேயே அமைந்துள்ளன. இந்த ஏழு ஊர்களும் தான் சப்தஸ்தானம். மிகப் புகழ் பெற்ற சிவாலயங்கள் உள்ள ஊர்கள் இவை.
        “சப்தஸ்தான” விழாவின்போது, திருவையாறில் உள்ள ஐயாறப்பன் என்னும் பஞ்சநதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து, அருமையான வேலைப்பாடு கொண்ட கண்ணாடிப் பல்லக்கில் “ஸ்வாமி” புறப்படுவார். திருவையாறில் இருந்து, திருப்பழனம் செல்வார். திருப்பழனத்தில் இருந்து ஒரு பல்லக்கில் அவ்வூர் இறைவன் புறப்பட்டு, பஞ்சநதீஸ்வரரோடு சேர்ந்து கொள்வார். இப்படியே, திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருக் கண்டியூர்,  ஆகிய தலங்களின் சிவபெருமானும் பல்லக்குகளில் கிளம்பி, இவ்வூர்வலத்தில் சேர்ந்து கொள்வர். முத்துப் பல்லக்கு, வெட்டி வேர் பல்லக்கு, என்று ஒவ்வொரு பல்லக்கும் வித விதமாக அலங்கரிக்கப் பட்டிருக்கும்! நாயன மல்லாரி இசை ஒலி வானைப் பிளக்கும். 
        சப்தஸ்தானப் பல்லக்குகள் ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, இவ்வூர்களைச் சுற்றி வருவர். ஒவ்வொரு ஊரிலும், சாப்பாடு ஏற்பாடு செய்திருப்பார்கள். உணவுக்குப் பஞ்சமே இல்லை. இரவில் எல்லாப் பல்லக்குகளும், திருக்கண்டியூர் அருகே காவிரி மணற்பரப்பில்  வரிசையாக நிற்கும். தீவட்டி வெளிச்சத்தில், அர்ச்சகர்கள் விபூதிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இரவில் அங்கு நம் மூப்பனார் வீட்டு மண்டகப்படியாக, அற்புத வாண வேடிக்கை நடக்கும். கண்கொள்ளாக் காட்சி. பிறகு, எல்லா மூர்த்தங்களுக்கும் பொதுவாக தீப ஆரத்தி எடுப்பார்கள்.

        பிறகு பல்லக்குகள் திருவையாறை வந்தடையும், கருடன் மாலை போடுவது விசேஷமான காட்சி / நிகழ்ச்சி!
        இந்த சப்தஸ்தான பல்லக்குகள் ஊர்வலத்தில் சிறு பையன்கள் முதல், கிழவர்கள் வரை, ஆண்-பெண் அனைவரும் கலந்து கொள்வார்கள். இரவு படுப்பது ஆற்று மணற்பரப்பில் தான்.  அடுத்த சப்தஸ்தானம் எப்போது வரப் போகிறது என்று காத்துக் கொண்டிருப்போம்! மனம் அவ்வளவு குதூகலமாக இருக்கும்!

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...