Thursday, April 25, 2024

திருவதிகை வீரட்டானத்தை பாடிப் பரவிய போது - திருநாவுக்கரசு எனும் பெயர் சூட்டி இறைவன் ஆட்கொண்டார்.



அப்பர் சுவாமிகள்
திருமுனைப்பாடி நாட்டின் திலகம் என விளங்கிய திருவாமூர்.
இந்தத் திருவூரில்தான் வேளாண் குலத்தில் குறுக்கையர் குடியில், புகழனார் - மாதினியார் எனும் தவப்பெருந் தம்பதியர்க்கு மகனாகத் தோன்றினார் திருநாவுக்கரசர்.
இயற் பெயர் மருள்நீக்கியார். இவர்தம் மூத்த சகோதரி திலகவதி.

மங்கை நல்லாளாகிய திலகவதியை கலிப்பகையார் எனும் பல்லவ படைத் தளபதிக்கு மணம் பேசி நிச்சயித்திருந்த நேரத்தில் தந்தையார் விண்ணுலகு எய்தினார். தாயும் உடன் உயிர் நீத்தார்.
அதேவேளையில் வடபுலத்தில் நிகழ்ந்த போரில் கலிப்பகையார் வீரமரணம் எய்தினார். நிச்சயிக்கப்பட்டபடி அவரே என் மணவாளர்!.. - எனக் கூறி திலகவதியும் இன்னுயிர் துறக்க யத்தனித்தபோது,
தம்பியின் ஆதரவற்ற நிலையைக் கருத்தில் கொண்டு, தம்பிக்காக தவ வாழ்வினை மேற்கொண்டார் திலகவதியார்.

அடுத்தடுத்த பேரிடிகளால் அல்லலுற்ற வேளையிலும் சிவத் தொண்டுகள் புரிந்து வந்த மருள்நீக்கியார் - சமண சமயத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு புறசமயத்தைச் சார்ந்தார்.

தருமசேனர் எனும் பெயர் தாங்கி - காஞ்சியில் தலைமைப்பீடத்தில் இருந்த அவர் - தமக்கை திலகவதியாரின் வேண்டுதலினால் கொடும் வயிற்றுவலிக்கு ஆளாகி, மீண்டும் சைவ சமயம் திரும்பி-

கூற்றானவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்!..

- என, திருவதிகை வீரட்டானத் திருக்கோயிலில் சிவபெருமானைப் பாடிப் பரவிய போது - திருநாவுக்கரசு எனும் பெயர் சூட்டி இறைவன் ஆட்கொண்டார்.

தன் தவறினை உணர்ந்த மகேந்திர பல்லவன் (590-630) - திருநாவுக்கரசரின் ஆசிகளுடன் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறிய பின்னர்- குணபதீச்சுரம் என்ற கோயிலை எழுப்பினான் என்று பெரியபுராணம் கூறுகின்றது.

இச்செய்தியைத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டும் உறுதிப் படுத்துகின்றது.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ

துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாய் என்நெஞ்சந் துறப்பிப்பாய் நீ

இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

அதன்பின் ஊர்கள் தோறும் சென்று செந்தமிழால் பாடிப் பரவியும் திருக்கோயில்களை உழவாரங் கொண்டு தூய்மைப்படுத்தியும் மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கியும் சைவத் திருப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் - #திருநாவுக்கரசர்.

தனது முதிர்ந்த வயதில் பாலகராயிருந்த #திருஞான_சம்பந்தருடன் சேர்ந்து திருத்தல யாத்திரைகள் செய்தார்.

ஏழாம் நூற்றாண்டுகளில் #திருநாவுக்கரசரும் 
#திருஞான_சம்பந்தரும் சிவ தத்துவத்தை எடுத்துரைத்துச் சைவ சமயத்தை வளரச் செய்தனர்.

#திருஞான_சம்பந்தப்பெருமானால்
அப்பர் எனவும் அழைக்கப்பட்டார்.

#திருநாவுக்கரசர் கடலிலிருந்து கரையேறிய தலம் - கரையேறிய குப்பம் - திருப்பாதிரிப் புலியூர்.

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரமயோகி

எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழவேண்டா

முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்ற

அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே!..

#திருநாவுக்கரசர் - தன் கால்களால் மிதிக்க அஞ்சி , மண்ணில் உருண்டு அங்கப் பிரதட்சணமாக வலஞ்செய்து வணங்கிய திருத்தலம் - தில்லை!..
--------------------------------------------------------------------
தமக்கு - ரிஷபக்குறியும் சூலக்குறியும் இடவேண்டுமென, வேண்டிப் பெற்ற திருத்தலம் -
திருப்பெண்ணாகடம்.
==================================

இறைவனின் திருவடி தீட்சையை பெற்ற திருத்தலம் - தஞ்சை பாபநாசத்திற்கு அடுத்துள்ள -
திருநல்லூர்.
==================================

தம்மை அறியாமலே தம்மிடம் பெரும் பக்தி கொண்டிருந்த அப்பூதி அடிகளின் மகனை நாக விஷத்திலிருந்து உயிர்ப்பித்து எழுப்பிய திருத்தலம் - திங்களூர்.
==================================

எளிய மக்களின் பணி செய்தற்கு என -
திருமடம் அமைத்த திருத்தலங்கள் -
திருப்பூந்துருத்தி, திருவீழிமிழலை.
பஞ்சம் தீர்ப்பதற்கு என படிக்காசு அருளப் பெற்றது -
திருவீழிமிழலையில்!..
==================================

பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்மறைக் காடரோ

கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே!..

வேதங்களால் அடைக்கபட்டிருந்த கதவங்களைப் பதிகம் பாடித் திறப்பித்தது - திருமறைக்காட்டில்!..
==================================

இவரது வருகையை அறிந்த மாற்றார் - ஆலயத்தைத் தாளிட்டு அடைத்து விட - ஆலய தரிசனம் பெறும் வரை உண்ணாநோன்பு என்று அமர்ந்த திருத்தலம் - பழையாறை வடதளி.
=================================

இவர் பொருட்டு , பொதி சோறும் நீரும் தாங்கி வந்து - உண்ணச் செய்து - ஈசன் மகிழ்ந்த திருத்தலம் -
திருப்பைஞ்ஞீலி.
==================================

மாதர்ப் பிறைக்கண்ணி யானைமலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல்ஐயா றடைகின்ற போது

காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!..

திருக்கயிலாய மாமலையைத் தரிசிக்க வேண்டி - தள்ளாத வயதிலும் தளாராத ஊக்கத்துடன் பயணித்த திருநாவுக்கரசருக்கு - கயிலாயத் திருக்காட்சியுடன் சர்வம் சிவமயம் எனத் திருக்காட்சி நல்கிய திருத்தலம் -
திருஐயாறு.
================================

கற்றவர்கள் உ ண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி

அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி

மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி

செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி!..

திருநாவுக்கரசரின் பற்றற்ற தன்மையை நிரூபிக்க - அரம்பையரின் ஆடல் பாடலுடன் பொன்னையும் மணியையும் பூமியில் வாரி இறைத்து சோதித்து அருளிய திருத்தலம் - திருஆரூர்.
==================================

என் கடன் பணி செய்து கிடப்பதே என சிவத்தொண்டு புரிந்த திருநாவுக்கரசு சுவாமிகளை - ஈசன் தன் திருவடிக் கீழ்ச் சேர்த்துக் கொண்ட திருத்தலம் -
திருப்புகலூர்.
==================================

திருநாவுக்கரசர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் சிறப்பிக்கப்பட்டார்.

தேவாரம் தொகுக்கப்பட்ட முறையைப் பற்றி சைவ ஆச்சாரியர் உமாபதி சிவம் திருமுறை கண்ட புராணத்தில் - அப்பர் சுவாமிகள் நாற்பத்தொன்பதாயிரம் பாடல்களைப் பாடிய விவரத்தினை திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் அருளியதாக குறித்துள்ளார்.

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண் குமரித்துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே!..
அரனுக்கு அன்பில்லாமல், அவன் படைத்த உயிர்களிடத்தில் அன்பில்லாமல் - தேடிச் சென்று தீர்த்தங்கள் பலவற்றில் மூழ்கிக் குளித்தாலும் எந்தப் பலனும் இல்லை!.. - என முழங்கிய பெருந்தகையாளர்.

திருநாவுக்கரசர் பாடியருளிய திருப்பதிகங்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொண்டு தான் மகேசன் தொண்டு - என வாழ்ந்த அப்பர் பெருமான், தமது எண்பத்தொன்றாவது வயதில் சிவனடிக் கீழ் முக்தியடைந்த நாள். 

 -ஓம் நமசிவாய

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...