Monday, June 10, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பெருமை...

தமிழகத்தின் சின்னமான திருத்தலம்...
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம்.

 இதனை நினைவுறுத்தும் விதமாக, ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. 

இதில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமை

அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. 

இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும்

. லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இத்தலத்தில்தான்.

 அதுமட்டுமின்றி இவ்விருவருமே ஆழ்வார்களில் ஒருவராக இடம்பிடித்தவர்கள். 

இவ்வூரை, "கோதை பிறந்த ஊர்', "கோவிந்தன் வாழும் ஊர்' என்றும் சிறப்பித்து சொல்வர்.

பங்குனி உத்திரத்தில் திருமணம்

ஆண்டாளை, ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக அவளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியாழ்வார்.

 அவர்கள் காவிரிக்கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள்.

 எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள்.

 ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண்டார்.

 இதனிடையே, தன் மகளைக்காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார். 

தன் மகளை ரெங்கமன்னார், அழைத்துக் கொண்டதை எண்ணிய அவர், தன் ஊரில் வைத்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.

 ரெங்கமன்னாரும் ஒப்புக்கொண்டார்.

 அதன்படி பங்குனி உத்திரத்தன்று ஆண்டாளை, ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். 

இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கிறது.

மகள் மீது பாசம் கொண்ட தந்தை

பெரியாழ்வார், தான் வளர்த்த நந்தவனத்தில் குழந்தையாக கிடைத்த ஆண்டாள் மீது அதிக பாசம் கொண்டு வளர்த்தார். 

ஒரு தந்தை தன் மகள் மீது எவ்வாறு பாசம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார் பெரியாழ்வார்.

 ஆண்டாளை அவர் ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுக்க சென்றபோது, ஆண்டாள் சுவாமியுடன் சேர்ந்துவிட்டாள்.

 அப்போது தன் மகளைக் காணாத அவர் ஆற்றாமை மிகுதியால், ""ஒருமகள் தன்னையுடையேன் உலகம்நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்'' என்று பாடினார்.

தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள், தற்போது பெருமாளை மணம் முடிக்கின்றாளே! 

அவள் இங்கே இருந்தது போல சிறப்புடன் அங்கே வாழ்வாளா! என்று தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார்.

 ஆண்கள், இப்பாடலை பாடினால் தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பக்தர் பார்த்தபின்பே தரிசனம்

ஆண்டாள் கோயிலில் நடை திறக்கும் அர்ச்சகர்கள் முதலில்,

 ஆண்டாளை பார்ப்பதில்லை. 

கதவை திறந்ததும் ஆண்டாளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியை பார்க்கின்றனர். 

ஆண்டாள் முதலில் இந்த கண்ணாடியை பார்த்துக்கொள்வதாக ஐதீகம்.

 இதன் அடிப்படையில் அர்ச்சகர்கள் இவ்வாறு செய்கின்றனர். 

பின்பு ஆண்டாளுக்கு தீபம் ஏற்றப்படுகிறது.

 பக்தர்கள் பார்ப்பதற்காக திரை விலக்கப்பட்ட பிறகே, அர்ச்சகர்களும் ஆண்டாளை பார்க்கின்றனர்.

 ஆண்டாளுக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.

முன்பு, ஆண்டாள் சன்னதி நடைதிறக்கும் போது ஒரு பசு கொண்டு வரப்படும்.

 மகாலட்சுமி வாசம் செய்யும் பசுவின் பின்புறத்தில் ஆண்டாள் முதலில் விழிப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.

 தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் இல்லை.

3 வாசலுடன் பெருமாள்

இத்தலத்திலுள்ள வடபத்ரசாயி பெருமாளை தரிசனம் செய்ய பிரதான வாசல்கள் தவிர மேலும் இரண்டு வாசல்கள் இருக்கிறது.

 சுவாமியின் திருமுகம், திருப்பாதம் தரிசிக்க கருவறையில் இரண்டு பகுதிகளில் இரண்டு வாசல்கள் உள்ளது.

 ஆனால், சுவாமியை பிரதான வாசலில் இருந்தே முழுமையாக தரிசிக்கலாம் என்பதால், இவ்வாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை.

பிறந்த வீட்டிற்கு செல்லும் ஆண்டாள்

ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரத்தன்று மகாலட்சுமியின் அம்சத்துடன் நந்தவனத்தில் அவதரித்தாள்.

 இவள் பிறந்த ஆடி பூரத்தன்று தனியே நந்தவனத்திற்கு எழுந்தருள்கிறாள்.

 அப்போது அவள் பாடிய திருப்பாவை, நாச்சியார்திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகிறது. 

கணவன் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும், பிறந்த வீட்டிற்கு செல்லும்பெண் கூடுதலான மகிழ்ச்சியுடன் இருப்பாள்.அதேபோல, ஆண்டாள் பிறந்தவீட்டிற்கு செல்லும் நாளில் அவளை வழிபட அனைத்து நியாயமான பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பர்.

நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாக கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதை கண்ணாடியிலே கண்டு களிப்பாள்.

 மீண்டும் பூக்களை களைந்து பூஜைக்கு கொடுத்து விடுவாள். 

பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார். 

ஒரு நாள் மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதை தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். 

உடனே இறைவன், "ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன்.

 அதையே எனக்கு சூட்டு,' என்றார்.

 ஆழ்வாரும் கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார்.

 கோதையும் இறைவனையே நினைத்து ஏங்கி தொழுதபடியே இருந்தாள்.

 இறைவனும் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கத்திற்கு வந்து சந்திக்க சொல்ல,

 கோதையும் பூப்பல்லக்கில் அங்கு சென்று இறைவனோடு ஐக்கியமானாள் .

 ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க 

இறைவனும் ஏற்று இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

 வைணவர்களின் முக்கியத் தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்

மூலவர் வடபத்ரசாயி (ரங்கமன்னார்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...