Thursday, June 13, 2024

திருக்கோடீஸ்வரர் திருக்கோடிக்காவல் நரசிங்கன்பேட்டை...

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், 
திருக்கோடிக்காவல், நரசிங்கன்பேட்டை,
திருவிடைமருதூர் வட்டம், 
தஞ்சாவூர் மாவட்டம் -           609 802.            

*இறைவன் - கோடீஸ்வரர், கோடிக்காநாதர். 

*இறைவி - திரிபுரசுந்தரி, வடிவாம்பிகை.  

*தலவிருட்சம்: பிரம்பு            

*தீர்த்தம்: சிருங்கோத்பவ தீர்த்தம் மற்றும் காவிரி நதி.        

*திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடப் பெற்றது இத்தலம்.                .                  

*வறுமை நீக்கி செல்வம் பெருக்கி வழக்குகள் தீர்த்து ஒற்றுமை ஏற்படுத்தும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் தீராத வினைகளை தீர்த்து பக்தர்கள் மனதில் நி்ம்மதியை நிலையாக இருக்கச்செய்கிறார்.                                

*இத்தலத்தில் அருள்மிகு கரையேற்று விநாயகர் மிகச் சிறப்புடையவர்.   

திருக்கடையூரில், கால சம்ஹாரம் நடந்த பிறகு, எமதர்மன் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து,   திருகோடிக்காவல் ஈசனுக்குள் ஐக்கியமாகி அசைவற்றுக் கிடந்தார். காலன் இயக்கமற்றுவிட்டதால், பூலோகத்தில் மரணம் நின்றுவிட்டது.

இதனால் பூமி தன் பாரம் தாங்காமல், பூமாதேவி செயல்பட முடியாமல் சகல பூலோக காரியங்களும்  தடுமாறியது. விபரீதத்தை உணர்ந்த இந்திராதி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட எண்ணி, திருக்கோடிக்காவல் நோக்கி ஓடி வந்தனர். 

அப்போது  உத்தரவாஹினியாகிய காவிரி நதியைக் கடக்க எண்ணுகையில், திடீரென காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து, சுழலில் சிக்கி மீள முடியாது தவித்தனர்.  முதற்கடவுளாம் விநாயகரைப் பூஜிக்காது, வந்ததனால் ஏற்பட்ட சோதனை இது என்பதை உணர்ந்தனர். 

உடனே ஆற்று மணலிலேயே விநாயகப் பெருமானது உருவத்தைச் சிருஷ்டி செய்து, அவரிடத்தே பிழை பொறுத்துக் காக்க வேண்டினர். இதனால் மனமிரங்கிய விநாயகரும் ஆற்று வெள்ளத்தைத் தணித்துத் தேவர்களைக் கரையேற்றினார். 

அப்போது முதல், இத்தலத்து விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற நாமம் தாங்கி அருளி வருகிறார்.         

*பிறவி வினைகளை நீக்கி, உயிர்கள் கடைத்தேற அருளுபவர் என்பதாலும், இவர் 'கரையேற்று விநாயகர் என்று போற்றப்படுகிறார். 

வாழ்வில் பிரச்சனைகளால் தத்தளிப்போர் இத்தலத்து விநாயகரை வணங்கி வழிபட்டால் நலம் பெறலாம். 

*திரிகோடி என்றால் மூன்று கோடி என்று அர்த்தம். மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இந்தத் தலத்தில் நீங்கியதால் திருகோடிகா என்று பெயர் உண்டாயிற்று. 

முக்தி வேண்டி மூன்று கோடி மந்திர தேவதைகள் திருக்கோடிஸ்வரரை நோக்கி இங்கே தவம் இருந்து,  நந்தியின் கொம்பால் உண்டான சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டனர். அப்போது அங்கிருந்து கிளம்பிய திவ்ய ஒளிப்பிழம்பில் அனைவரும் ஐக்கியமாகிவிட்டதாகத் தல புராணம் விவரிக்கிறது. 
          
*இத்தலம் எமபயம் நீக்கும் தலம். நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோககாந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும், எமன், அவளைத் தண்டிக்க, நரகலோகம் அழைத்துச் செல்லும்போது சிவ தூதர்கள், இதை வன்மையாகக் கண்டிக்க எமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து முறையிட்டார். அதற்கு சிவபெருமான்  "திருக்கோடிக்காவோடு, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க எமனுக்கு அதிகாரம் இல்லை" என்று  கட்டளையிடுகிறார்.  லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், எமனிடமிருந்து விடுபட்டு,  முக்தி அடைகிறாள். 

*எனவே, காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் எமபயம் கிடையாது. 

*ஜென்ம ஜென்மமாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்.  

*இங்கு சித்திரகுப்தரும், எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர்.    

*சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.  

*இங்குள்ள சனி பகவான் பாலசனி என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்துக்குப் பதில் கருட வாகனம் உள்ளது.  மங்கு, பொங்கு, மரண சனி மூன்றுக்கும் வழிபடக் கூடிய சனி பகவான் இவர்.           

*இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. 

*திருக்கோடிக்காவல் புண்ணிய பூமி என்பதால் இங்கு இடுகாடு, சுடுகாடு கிடையாது என கூறப்படுகிறது.  

*இவ்வூரை ஒட்டிப் பாயும் காவிரி நதியில்,    கார்த்திகை ஞாயிறன்று அதிகாலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது  நம்பிக்கை. 

 *"வடுகபைரவர்"  -
இங்கு துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வடுகபைரவர் பெருமானை வழிபடுவோருக்கு வறுமை நீங்கி செல்வம் பெருகி வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை கிடைக்கும். 

*இக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் அம்பாள் திரிபுரசுந்தரி வேங்கடாஜலபதியாய் காட்சிதருதல் சிறப்பு.        

*ராஜகோபுரத்தின் இருபுரத்திலும் தேரோட்ட நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான வடிவத்தில் தேர்காட்சிகளும்,  பாரம்பரிய நடன அபிநயங்களை சித்தரிக்கும் நடன காட்சிகளும், யானைகள் போரிடும்  காட்சிகளும், கருங்கல்லில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.         
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...