Friday, June 7, 2024

வடுவூர் கோதண்டராமஸ்வாமி கோயில் திருவாரூர்..

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 
"#பஞ்ச_ராமக்ஷேத்ரம்" தலங்களில் ஒன்றான, "#தட்சிண_அயோத்தி " என்று அழைக்கப்படும்,
மன்னர் சரபோஜி ஆட்சிக் காலத்தில் சிறப்பு பெற்ற தலமான 
#வடுவூர்
#கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் வரலாறு:

இக்கோயில் மன்னார்குடியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள ஓர் அழகிய கிராமம். பச்சைபசேலேன்ற நெல் வயல்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் ஆகிய ஸ்தலங்கள் 'பஞ்ச ராம க்ஷேத்ரம்' என்று அழைக்கப்படுகின்றன. 
வடுவூர். இந்த ஊரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவில், “பஞ்ச ராம க்ஷேத்திரங்களில்” ஒன்று. அபிமான ஸ்தலம். தக்ஷிண அயோத்தி. ஒரு காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் வகுளாரண்ய க்ஷேத்ரம் என்றும், பாஸ்கர ஷேத்திரம் என்றும் பெயர். '

ஐந்து நிலை ராஜகோபுரம். மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் லக்ஷ்மணர், அனுமாருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவர் ராமர் பேரழகு! இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். பேரழகு வாய்ந்த ராமர். அழகுக்கே அழகு சேர்க்கும் ராமர். சேவித்துக்கொண்டே இருக்கலாம். என்ன அழகு! என்ன அழகு! பார்த்தவர் மயங்கும் அழகு! மந்தகாசப் புன்னகை!! இது போன்ற தத்ரூபமான புன்னகையை வேறு எங்குமே காண முடியாது. வில்லினைப் பிடித்திருக்கும் அழகு அதி ஆச்சர்யம்! 
“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு! என்பது ஓர் அழியா அழகு உடையான்”

என்ற கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீராமனை முழுவதுமாகத் துதிக்கமுடியாமல் தன்னுடைய இயலாமையை ‘ஐயோ’ என்ற பதத்தால் கம்பரே வெளிப்படுத்தி இருக்கும்போது நாம் எம்மாத்திரம்??!! கண்டோம்! கண்டோம்! கண்டோம்! கண்ணுக்கினியன கண்டோம்! என்று மெய்சிலிர்க்க மட்டுமே முடியும்.

வடுவூர் சிலையழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர். சரி இந்த உற்சவமூர்த்திக்கு அப்படி என்ன சிறப்பு? இது ஸ்ரீ ராமரே உருவாக்கிய விக்கிரகத் திருமேனி. அதனால்தான் அப்படியொரு உயிரோட்டம்!

வனவாசம் முடிந்து இராமர் அயோத்திக்கு புறப்பட்டபோது, அவரை தரிசித்த முனிவர்கள் அவரை தங்களுடனே தங்குமாறு வேண்டினர். அதனால் இராமர் தன் உருவத்தை சிலையாக செய்து தான் தங்கி இருந்த இடத்தில் வைத்தார். சிலையைக் கண்ட துறவிகள் சிலையை தங்களுடனே வைத்துக்கொள்ள அவரிடம் அனுமதி வேண்டினர். அவர்களிடமே அச்சிலையைக் கொடுத்துவிட்டு இராமர் அயோத்திக்குப் புறப்பட்டார்.

உற்சவரின் திருமேனியைப் பற்றிய வரலாறு:

ராவண வதத்தின் பிறகு, சீதாபிராட்டியை மீட்டு, வனவாசம் முடித்துக்கொண்டு, கோடியக்கரை வழியாக அயோத்திக்கு ராமர் திரும்பியபோது, அவரைக் கண்ட ரிஷிகள், ராமரைத் தங்கள் கூடவே இருக்கச் சொல்லிக் கேட்டார்களாம். பரதனைக் காண வேண்டிய அவசியத்தை அவர்களுக்குக் கூறிய ராமர், தன்னுடைய உருவத்தை விக்ரஹமாக வடித்து அவர்களுக்குக் கொடுத்து, நானே வேண்டுமா? இந்த விக்ரஹம் வேண்டுமா? எனக் கேட்க, அந்த விக்ரஹத்தின் அழகில் மயங்கிய ரிஷிகள், ராமருக்கு பதிலாக அந்த விக்ரஹத் திருமேனியே போதும் என்றனராம். தாங்கள் பூஜிக்க அந்த விக்ரஹத்தைத் தரும்படி ரிஷிகள் கேட்க, அதன்படி ராமர் அவர்களிடம் விக்ரஹத்தைக் கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார் என்பது வரலாறு.
பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் இந்த விக்ரஹத்தைப் பூஜித்து வந்தனர். அந்நியப் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.

தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னன் கனவில் வந்த ராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு, தனக்குக் கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் விக்ரஹங்களை எடுத்துக் கொண்டு, தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணிக் கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்துக் கொண்டு, அங்கேயே தங்கினார். அந்த ஊர் மக்கள் ராமரின் அழகில் மயங்கி, அங்கேயே ஸ்ரீராமரை விட்டுச் செல்ல மன்னனிடம் வேண்டினர். மன்னன் மறுத்து விக்ரஹத்தை எடுக்க முயற்சித்தபோது, வைத்த இடத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை. அதனால் மக்கள் வேண்டியபடி மன்னன் வடுவூரிலேயே சிலையை விட்டு சென்றார் என்கிறது ஸ்தல புராணம்.

கரிகால் சோழன், போரில் வென்று ஊர் திரும்பியபோது, மூலிகைகள் நிறைந்த இந்த ஊரில், போரில் அடிபட்ட வீரர்களுக்கு வைத்தியம் பார்த்தார்களாம். வீரர்களின் வடுக்களை ஆற்றிய ஊர் என்பதால் வடுவூர் என்றும் கூறுகின்றனர்.

ப்ராகாரத்தில் வடக்கு பார்த்த ஹயக்ரீவர் விசேஷம். கருடன், விஷ்வக்சேனர், ஆதிசேஷன், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சார்யர்கள் சந்நிதிகள் உள்ளன. மன்னார்குடி ராஜகோபாலனைப் போலவே இங்கும் ஒரு ராஜகோபாலன் உள்ளார். ஊஞ்சல் மண்டபம், கண்ணாடி அறை இருக்கிறது. உற்சவர் திருமஞ்சனம் விசேஷம்.

தல விருட்சம் வகுள(மகிழ)மரம். கோவிலுக்கு அருகே சரயு புஷ்கரணி. அக்ரஹாரங்கள். அழகான படித்துறை. குளத்தில் சென்று நின்றால் கால்களைக் கவ்வும் மீன்கள் நிறைந்த குளம்.

உற்சவங்கள்: 

ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஹனுமத் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், திருத்தேரோட்டம். தேரில் ராமாயணக் காட்சிகளை அழகாய் வடித்திருக்கிறார்கள். தெப்போத்ஸவம், திருக்கல்யாண உற்சவம். திருமணத் தடை உள்ளவர்கள் திருக்கல்யாண உற்சவத்தைப் பார்த்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஜெய் ஸ்ரீ ராம்
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...