Sunday, June 9, 2024

நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்; திருநாரையூரில் பிறந்தார்....

சைவ சமயக்குரவர்களில்
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் அப்பர் சுவாமிகள் பாடிய #தேவாரம் என்ற #சைவத்_திருமுறைகளை இராஜராஜ சோழனின்
வேண்டுகோளுக்கு இணங்க 
சைவ சமயத்திற்கு தொகுத்து வழங்கிய  #திருநாரையூரில் அவதரித்த #நம்பியாண்டார்_நம்பிகள் குருபூஜை இன்று: 
முக்தி நாள் 
 (#வைகாசி_புனர்பூசம்)

நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்; திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்.

பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்துப் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.11-ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திரு சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியனவாகும்.
இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களின் மூலம் அறியலாம்.

இவருக்குப் பிற்காலத்தில் நம்பி என்ற பெயரில் வாழ்ந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பெரும்பற்றப்புலியூர் நம்பி ஆவார்.

திருநாரையூரில் அருள்புரியும் ஶ்ரீபொல்லாப்பிள்ளையார், ஶ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஶ்ரீ சௌந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று நம்பியாண்டார் நம்பியவர்களின் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.

நம்பியாண்டார் நம்பி, ராஜராஜ சோழன் காலமான பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது. சிறுவயதிலேயே வேதம் பயின்ற நம்பியாண்டார் நம்பி, ஒரு நாள் தன் தந்தைக்குப் பதிலாக பிள்ளையார் கோயிலுக்குப் பூஜை செய்யச் சென்றார். தோட்டத்தில் இருந்த மலர்களையெல்லாம் பறித்து மாலை கட்டி பிள்ளையாருக்குச் சூட்டி வழிபட்டார். பின்பு, தன் அன்னையர் வழங்கிய நிவேதனத்தை பிள்ளையார் நேரில் தோன்றி உண்டு அருள வேண்டும் என்று வேண்டினார். நிவேதனம் என்பதைத் தெய்வம் நேரடியாக வந்து உண்ணும் என்று நம்பிக்கொண்டிருந்தார். 
ஆனால், பிள்ளையார் தோன்றவில்லை. எவ்வளவு அழைத்தும் பிள்ளையார் தோன்றாமையால் மனம் நொந்த நம்பி, தன் தலையைச் சுவரில் மோதி இடித்துத் தன்னை அழித்துக்கொள்ளத் துணிந்தார். அப்போது பிள்ளையார் அவர் முன் தோன்றி அவரைச் சமாதானம் செய்து அவர் அளித்த உணவை உண்டு அருளினார். பிள்ளையாரின் அருளால் அவருக்கு ஞானம் உண்டாயிற்று.அந்த இளம் வயதிலேயே விநாயகர் மீது `இரட்டை மணிமாலை' என்னும் பிரபந்தம் ஒன்றை இயற்றினார். அதனால் அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அழிந்துகொண்டிருந்த சைவத் திருமுறைகளைத் தொகுத்து அளித்தவர் இவரே. இவரது குருபூஜை ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

#திருநாரையூர் #பொல்லாப்பிள்ளையார் மற்றும் #நம்பியாண்டார்_நம்பியும் 
#திருமுறை_கண்ட_இராஜராஜ_சோழனும்:

    உலக மக்களுக்கு எக்காலத்தும் இறைவனின்
திருவருளை     வழங்குவதற்குரிய     சைவத் திருநூல்கள்
திருமுறைகளாகும். 

திரு என்பது தெய்வத்தின் அருளைக்
குறிக்கின்ற சொல்லாகும். மேலும் தமிழில் பொதுவாகத் திரு
என்பதை மங்கலச் சொல் என்று கூறுவாரும் உண்டு.
இச்சொல்லிற்கு அழகு, செல்வம், மதிப்புப் போன்ற பொருளும்
உண்டு. முறை என்ற சொல் நூல், பழமை, ஊழ், கட்டு, கூட்டு,
முறைமை     என்ற     பல பொருள்களில்     வழங்கும்.
பன்னிருதிருமுறை என்ற சொல்லில் முறை என்பது நூல் என்ற
பொருளைத் தருவதாகும். எனவே பன்னிருதிருமுறை என்பது
திருவருளைப் பெற்ற நூல் பன்னிரண்டு என்ற பொருளைத்
தரும்.

    இத்திருமுறைகளை முதலில் வகுத்தவர் நம்பியாண்டார்
நம்பி ஆவார். இவர் திருமுறைகளைத் தொகுத்த வரலாற்றை
உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருமுறை கண்ட புராணம்
என்ற நூல் குறிப்பிடுகிறது. இந்நூலின்படி முதல் பதினோரு
திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுத்தார் எனத்
தெரிகிறது. இவர் வாழ்ந்த 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு
12ஆம்     திருமுறையான பெரியபுராணம்     பின்னர்ச்
சேர்க்கப்பட்டுப் பன்னிருதிருமுறைகள் எனத் திருமுறைகள்
வகுக்கப் பெற்றன என்பது சைவ வரலாற்றாசிரியர்கள்
கருத்தாகும். திருமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்தது பற்றித்
திருமுறைகண்ட புராணம் சில தகவல்களைக் குறிப்பிடுகிறது.

    சோழநாட்டில் அபயகுல சோழன் என்ற பட்டம் உடைய
இராசராச சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய
அவைக்களத்தில் சிவனடியார்கள் தங்களுக்குத் தெரிந்த
தேவாரப் பாடல்களை அவ்வப் போது ஓதி வந்தார்கள்.
அவற்றைக் கேட்ட சோழன் தேவாரப் பாடல்கள் முழுமையும்
சேகரிக்க நினைத்தான்.     முழுமையும் அவனுக்குக்
கிடைக்கவில்லை. அவனுடைய காலத்தில்தான் திருநாரையூர்
என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி வாழ்ந்துவந்தார். அவருக்கு
அவ்வூரில் எழுந்தருளியிருந்த பொல்லாப்பிள்ளையார்
(விநாயகர்) திருவருள் புரிந்ததை அரசன் கேள்விப்பட்டான்.
அவர் மூலமாகத் தேவாரத் திருப்பதிகங்களைத் தேடிக்
கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணி அவருடைய உதவியை
நாடினான். நம்பியாண்டார் நம்பியும் அவனுடைய
வேண்டுகோளை ஏற்றுத் தான் வணங்கும் பொல்லாப்
பிள்ளையார்பால் வேண்டிக் கொண்டார். பிள்ளையாரும்
சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகில் உள்ள அறையில்
தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூட்டப் பெற்றுள்ளன என
அருளிச் செய்தார். நம்பியும் மன்னனும் சிதம்பரம்
பொன்னம்பலத்திற்குச் சென்றார்கள். தில்லைவாழ் அந்தணர்கள்
அறைக்கதவு திறக்கப்பட வேண்டுமானால் தேவாரத்தை
அருளிய மூவரும் நேரில் வரவேண்டும் என்றனர். வாழ்ந்து
மறைந்த சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் நேரில்
வரமுடியாத காரணத்தால் அவர்களின் திருவுருவங்களை
அறையின்முன் எழுந்தருளச் செய்தான் மன்னன். சிலை
வடிவாக இருக்கிற நடராசரை இறைவனாகவே எண்ணி
வழிபாடு செய்யும் தில்லைவாழ் அந்தணர்கள், சிலைவடிவில்
வந்திருக்கும் மூவரையும் நேரில் வந்ததாகவே கருதி
அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள்ளே கரையான்
புற்றால் மூடப்பெற்றிருந்த ஏடுகளில் பழுதுபட்டதை நீக்கி
மற்றவற்றை எடுத்துவந்து நம்பியாண்டார் நம்பியைத் தொகுக்கச்
செய்தான். நம்பியாண்டார் நம்பி கிடைத்த தேவாரத்
தேவாரத் திருப்பதிகங்களை முதல் 7 திருமுறைகளாகத்
தொகுத்தார். இதுவே திருமுறைகண்ட புராணம் கூறும்
செய்தியாகும்.

    முதல் 7 திருமுறைகளாகத் தேவாரத்தைத் தொகுத்தபின்
அவரால் அறிந்து கொள்ளப் பெற்ற பாடல்களை மேலும்
தொகுக்க ஆரம்பித்தார். அவ்வாறு தொகுக்க முனைந்த
நம்பியாண்டார் நம்பிக்குக் கிடைத்தவையே பதினோராம்
திருமுறை வரை உள்ள பாடல்கள். இவற்றைத் தொகுத்த காலம்
கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது பத்தாம்
நூற்றாண்டின் முற்பகுதியாகும். அதன்பின் பெரியபுராணம்
சேர்க்கப்பட்டுத் திருமுறைகள்     பன்னிரண்டு     என்ற
எண்ணிக்கையைப் பெற்றன. 

#திருமுறை_கண்ட புராணம்:

முதலில் சைவத் திருமுறைகளைத் தொகுத்ததற்காகக் கிடைக்கும் ஒரே சான்று திருமுறை கண்ட புராணம் என்ற நூல்தான். இது உமாபதி சிவாச்சாரியார் இயற்றியது.

சோழவம்சத்தில் வந்த அரசன் ஒருவன் தேவாரப் பதிகம் ஒன்றைக் கேட்கிறான். அதனால் மனம் உருகி மற்ற பாடல்களையும் கேட்க நினைக்கிறான். ஆனால் யாரிடமும் மொத்தத் தொகுதியும் இல்லை (ஏதோ ஒரு புத்தகத்தின் ஓரிரு பக்கங்களைப் படித்து விட்டு முழுப்புத்தகத்தையும் தேடுவது போன்றது). ஒருவழியாக அவனிடம் நம்பியாண்டார் நம்பி எனும் அடியாரைப் பற்றி யாரோ சொல்கிறார்கள். திருநாரையூரைச் சேர்ந்த நம்பி, அவ்வூரின் பொள்ளப்பிள்ளையாரின் (பொல்லாப்பிள்ளையார் இல்லை. சிற்பத்தில் பொள்ளாத - செதுக்காத சுயம்புவான பிள்ளையார்) அருள் பெற்றவர். அவரிடம் சென்ற அரசன் பிள்ளையாருக்கான நைவேத்தியங்களைக் கொடுத்துவிட்டு நம்பியிடம் திருமுறைப் பாடல்கள் எங்கேயிருக்கின்றன என்ற விவரத்தைக் கேட்க வேண்டுகிறான். நம்பியும் பிள்ளையாரிடம் கேட்டு அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவர் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் சிதம்பரத்தில் இருப்பதாகக் கூறுகிறார். மன்னன் அதன்பின் சிதம்பரம் சென்றது, மூவர் சிலைகளை வரவழைத்து கோவிலில் இருந்த அறையைத் திறந்தது, செல்லரித்த சுவடிகளைத் தவிர மீதிச் சுவடிகளை எடுத்து நம்பியிடம் கொடுத்துத் தொகுக்கச் சொன்னது ஓரளவுக்குத் தெரிந்த வரலாறு.

இதில் முக்கிய பாத்திரங்கள் இருவர். ஒருவர் நம்பியாண்டார் நம்பி. இன்னொருவன் சோழ அரசன். அவன் யார் என்பதுதான் கேள்வி. இதற்குப் பதில் தேடுவதற்கு முதலில் நம்பியாண்டார் நம்பியின் காலத்தை வரையறுத்துக் கொள்ளவேண்டும். இரண்டாம் குலோத்துங்கனின் சமகாலத்தவரும் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவருமான சேக்கிழார், சுந்தரரின் திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றைக் கொண்டே அந்த நூலை இயற்றியதாகக் குறிப்பிடுகிறார்.

அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்

ஆகவே நம்பியாண்டார் நம்பியின் காலம் சேக்கிழாரின் காலத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு. அவர் காலத்தைப் பற்றி திருமுறைகண்ட புராணம் என்ன சொல்கிறது என்று பார்த்தால்

ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று
மோகமெறி திருவிசைப்பா மாலை முறைஒன்று சிவ
போகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ் பெறவே
பாகமிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள்

முதலில் பத்து திருமுறைகளையும் அதன்பின் மன்னன் கேட்டுக்கொண்டதால் பதினோறாவது திருமுறையையும் நம்பி தொகுத்தார். இந்தத் தொகுப்பில் ஒன்பதாம் திருமுறையில் சோழ மன்னரான கண்டராதித்தர் பாடிய திருவிசைப்பா உள்ளது. ஆகவே நம்பியின் காலம் கண்டராதித்த சோழனின் காலத்திற்குப் பிறகே என்பது தெளிவு. அப்படியானால் திருமுறை கண்ட சோழன் அரிஞ்சய சோழன் காலத்திலிருந்து இரண்டாம் குலோத்துங்கனின் காலம் வரை ஆட்சி செய்து ஏதோ ஒரு சோழமன்னனாகத்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க ஆதித்த சோழனே இந்த மன்னன் என்று பண்டாரத்தார் போன்ற ஆய்வாளர்களின் முடிவு தவறே என்பது தெளிவாகிறது. திருமுறைகண்ட புராணத்தை மேலும் பார்த்தால்

ஓவாது வருபொன்னி சூழ்சோ நாட்டின்
திலகமென விளங்குமணி மாடஆரூர்
தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி
அலகில்புகழ் பெறுராசராச மன்னன்

என்று ஒரு இடத்திலும் 

மல்லல்மிகு சேனையுடன் இராசராச
மன்னவனும் அந்நகரில் வந்து சேர்ந்தான்

என்று இன்னொரு இடத்திலும் ராஜராஜன் என்ற பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் சிவாச்சாரியார். ராஜராஜன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சோழ மன்னர்களில் இரண்டாம் ராஜராஜன் இரண்டாம் குலோத்துங்கனின் மகன். சேக்கிழாரின் காலத்திற்கே பிந்தைய காலத்தைசா சேர்ந்த அவன் நம்பியாண்டார் நம்பியின் சம காலத்தவனாக இருக்க முடியாது. இதனால், தஞ்சைப் பெரிய கோவில் அமைத்த சிவபாத சேகரனான முதலாம் ராஜராஜனே திருமுறை கண்ட சோழன் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிற்காலச் சோழர்களில் தியாகேசர் மீது பெரும் பக்தி கொண்டு பல திருப்பணிகளைச் செய்தவனும் முதலாம் ராஜராஜனே. தவிர, நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் 

புலமன்னிய மன்னைச் சிங்கள நாடு பொடுபடுத்த
குலமன்னிய புகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன்னிய புகழ்ச் சோழனது என்பர் நகுசுடர்வாள்
வலமன்னிய வெறிபத்தனுக்கு ஈந்ததோர் வண்புகழே

சிங்கள நாட்டை வென்ற சோழனின் குலமுதல்வன் எறிபத்த நாயனார் என்கிறார். இலங்கையை முதலில் வென்ற பெருமை பராந்தக சோழனுக்கு உண்டு என்றாலும், இலங்கை முழுவதும் வென்று சோழர் ஆட்சியை நிலைநாட்டிய பெருமை முதலாம் ராஜராஜனையே சேரும். இலங்கையின் பக்கம் திரும்பிப் பார்க்காத ஆதித்த சோழன் எப்படி நம்பியின் சமகாலத்தவர் என்று சொல்ல முடியுமா ?

ராஜராஜனுக்கு முன்பே பதிகங்கள் கோவிலில் ஓதப்பட்டன என்பது உண்மை. அதுபோன்று ஒரு பதிகத்தைக் கேட்டுத்தான் ராஜராஜன், மொத்தத் திருமுறைகளையும் தேடி ஆவல் கொண்டான் என்பதுதான் இங்கே சொல்லப்படுவது. அவனுக்கு முன்னால் பதிகங்களே பாடப்படவில்லை என்று யாரும் சொல்லாதபோது அதை ஒரு சான்றாக எடுத்துக்கொண்டு வாதம் சொல்ல முடியாது. இதே போன்று வைணவ குரு பரம்பரையில், நம்மாழ்வாரின் பாசுரங்கள் சிலவற்றைக் கேட்ட நாதமுனிகள் திருக்குருகூர் சென்ற ஆழ்வாரின் அருளைப் பெற்று நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்தார் என்பதும் வரலாறு. ஆழ்வார், நாயன்மார்களின் காலத்திற்குப் பிறகு கால ஓட்டத்தில் மறைந்து போய் சிற்சில பாடல்களாக மட்டுமே கிடைத்த பதிகங்களையும், பாசுரங்களையும் சோழர் காலத்தில் ஒட்டுமொத்தமாக மீட்டெடுத்துத் தொகுத்த பெருமை நம்பியாண்டார் நம்பியையும் நாதமுனிகளையும் சேரும்.

சைவ மரபில் அந்தப் பெரும்பணியைச் செய்தவன் முதலாம் ராஜராஜ சோழனே என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்ற விஷயம்.

இதனால் தான் இராஜராஜ சோழன் திருமுறை கண்ட சோழன் என்று அழைக்கப்படுகின்றான்.

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...