திருமணத்தடை நீக்கும் தேவிகாபுரம் "கனக கிரீஸ்வரர்' ஆலயம்...!
ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது முதுமொழி. அந்த வகையில் பழம்பெரும் கோயில்களுள் வரலாற்றுச் சிறப்பு மிக்கது பெரியநாயகி அம்மன் சமேத "பொன்மலை நாதர்' என்னும் "கனக கிரீஸ்வரர்' ஆலயம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூர் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேத்பட் செல்லும் பாதையில் உள்ளது தேவிகாபுரம்.
இவ்வூரில் மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில், கலை நயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது இத்திருக்கோயில். கி.பி. 10
ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
3.5 கி.மீ. சுற்றளவு கொண்ட பொன்மலை எனும் கனககிரி மலையில் அமர்ந்து அருள்பாலிப்பதனால் சிவபெருமானுக்கு "பொன்மலை நாதர்', "கனக கிரீஸ்வரர்' என்ற பெயர்கள் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இக்கோயிலில் ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள் உள்ளன. அதில் ஒன்று சுயம்பு மூர்த்தி பொன்மலை நாதராகவும், மற்றொன்று ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதராகவும் காட்சி அளிக்கிறது
கனககிரீஸ்வரர் மலையின் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கின்றார். அம்பாள் ஆலயத்தின் பின்புறமாக தென்மேற்கு பகுதியில் 500 அடி உயரத்தில் கனக கிரி என்ற பெயரைக் கொண்ட மலையில் உச்சியில் ஈசன் அமர்ந்திருக்கின்றார்.
அம்பிகை பெரிய நாயகிக்கு இங்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அம்பாள் ஈசனை சரிபாதியாக அடைவதற்கு இந்த இடத்தில் தவம் இருந்ததால் திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் தவத்தில் மயங்கிய சிவன் பங்குனி உத்திரத்தன்று, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அம்பாளை திருமணம் செய்தார் என்பது ஐதீகம்.
மலையின் உச்சியில் உள்ள கனககிரீஸ்வரர் திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். இதற்கான ஒரு கதையும் உண்டு.
ஒருமுறை இந்த கோவிலின் வழியாக போருக்குச் சென்ற பல்லவ மன்னன் இச்சிவன் கோவிலின் பெருமையை பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றான்.
பல்லவ மன்னன், தான் போரில் வெற்றி பெற்றால் மலையின் மேல் உள்ள சிவனுக்கு பெரிய கோயில் கட்டி தருவதாக வேண்டிக் கொண்டான்.
போரில் வெற்றி கண்ட பல்லவ மன்னன் தன் வேண்டுதலை மறந்து விட்டான். பிறகு மன்னனுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டது. அப்போதுதான் ஈசனுக்கு, கோவில் கட்டி தருவதாக சொன்னது நினைவுக்கு வந்தது.
பல்லவ மன்னன் சிவனுக்காக கோயிலை கட்டிய போது வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் திடீரென்று காணாமல் போய்விட்டது.
வருத்தத்தில் இருந்த பல்லவ மன்னன் காசியிலிருந்து மற்றொரு லிங்கத்தைக் கொண்டு வந்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுகணமே சுயம்புலிங்கம் திரும்பவும் காட்சி தந்தது. கடவுளை மறந்த பல்லவ மன்னனை, ஈசன் மறந்து இருக்கிறார் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
பல்லவ மன்னன் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு கனககிரிஸ்வரர் என்ற பெயர் வைத்து அதே கருவறையில் இரண்டு மூலவர்கள் வைத்து இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.
ஒருமுறை வேடன் ஒருவன் காட்டில் கிழங்குகளை தோண்டிக்கொண்டிருக்கும் போது, திடீரென ஓரிடத்தில் ரத்தம் வெள்ளமாகப் பாயத் துவங்கியது.
பயத்தில் வேடன் உற்றுநோக்கும் போது அங்கிருந்த சுயம்பு லிங்கத்தின் மீது கோடரி பட்டு, ரத்தம் வருவது அறிந்து வேதனையுற்றான்.
ரத்தப் பாய்ச்சலைத் தடுக்க ஏதேதோ முயற்சி செய்தும் முடியாமல் போக, இறுதியில் வெந்நீர் ஊற்றி அபிஷேகம் செய்து காயத்தை ஆற்றினான் என்பது தல வரலாறு.
அதன்படியே இன்றளவும் சிவபெருமானுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
மற்றுமொரு சிறப்பு, இங்குள்ள சிவபெருமானை 365 படிகளைத் தாண்டி சென்றால் மட்டுமே காணமுடியும்.
பெüர்ணமி நாள்களில் இங்கு கிரிவலம் செய்து, சிவனை வழிபட்டு வந்தால் திருமணத் தடை உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
ஆகவே இங்கு பெüர்ணமி நாள்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment