Monday, August 5, 2024

நீலகண்டேஸ்வரர் , பழமண்ணிப்படிக்கரை இலுப்பைபட்டு....

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், பழமண்ணிப்படிக்கரை,
இலுப்பைபட்டு,
மணல்மேடு – 609 202
மயிலாடுதுறை மாவட்டம். 
*மூலவர்        :     திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதிஸ்வரர்
*அம்மன்         :      மங்களாம்பிகை,
அமிர்தகரவல்லி,

*தல விருட்சம்   :     இலுப்பை

*தீர்த்தம்         :     பிரம்ம, அமிர்த தீர்த்தம்

*புராண பெயர்    :     பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை

*வழிபட்டோர்: இந்திரன், விபாண்டகர், தந்து, பிரம்மன், மாந்தாதா, நளன். 

*பாடல்பெற்ற தலம்: சுந்தரர் தேவாரப்பதிகம் அருளியுள்ளார்.

*இத்தலத்தருகே பண்டைக் காலத்தில் மண்ணியாறு ஓடியதால் ‘பழ மண்ணிப் படிக்கரை ‘ என்றாயிற்று.

*இத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர். (மதூகம் – இலுப்பை; பட்டு – ஊர்)                                    

*ஒரு காலத்தில் இலுப்பை வனமாக இருந்ததால்  இத்தலம் இலுப்பைபட்டு எனும் பெயர் பெற்றது. தலமரமும் இலுப்பை. 

*"ரேவதி' நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய விருட்சம், இலுப்பை மரம் ஆகும். எனவே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தோர், இலுப்பைப்பட்டு என்று அழைக்கப்படும் பழமண்ணிப்படிக்கரை திருத்தலத்தைத் தரிசித்து, வாழ்வில் வளம் பெறலாம். 

*துரியோதனன் பஞ்சபாண்டவர்களைக் கொல்ல இங்குள்ள தீர்த்தத்தில் விஷத்தைச் சேர்த்தான். அம்பிகை அவ்விஷத்தைத் தன் கையிலிருந்த அமுதத்தால் முறித்து பிறகு அந்நஞ்சை இறைவன் சிவபெருமான் உண்டார். அதனாலேயே இத்தலத்து இறைவன் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார். 
அமிர்தத்தைத் தன் கையில் வைத்திருந்த காரணத்தால் இறைவி அமிர்தகரவல்லி எனப் பெயர் பெற்றார் என்று புராண வரலாறு உள்ளது.

*பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள் எங்கு தேடிப்பார்த்தும் லிங்கம் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில் இலுப்பை எண்ணையில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக மனதில் நினைத்து வணங்கினர். சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார்.  
இக்கோயிலில் ஐந்து சிவ சந்நிதிகள் உள்ளன. 

*தருமர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர். அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிக்கரைநாதர். பீமன் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர். நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர். சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர்.   

*நீலகண்டேஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.                   

*அம்பிகை தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்புரிகிறார். இந்த அம்மன் சந்நிதி முன் மண்டபத்திலேயே  அர்ஜுனன் வழிபட்ட படிகரைநாதர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. எதிரில் நந்தி உள்ளது. 

*பீமன் வழிபட்ட சிவன் சோடஷலிங்கமாக 16 பட்டைகளுடன் இருக்கிறார். 

*ஐந்து மூர்த்திகளில்  நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது.  

*திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது.   

*இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை திருப்புகழில் அருணகிரிதாதர் பாடியுள்ளார்.  

*தருமபுத்திரர் துவக்கிவைத்த சித்திரைத் திருவிழா, பத்து நாட்கள் உற்சவமாக இன்றும் பழமண்ணி படிக்கரை திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது. 

*மாசி மகத் திருநாளில் கொள்ளிடக்கரைக்கு "தீர்த்தவாரி'க்காக எழுந்தருளுகிறார் நீலகண்டேசுவரர்.  
 
*"பிரம்ம தீர்த்தம்' பஞ்ச பாண்டவர்களை அழிவிலிருந்து காத்தது.            துந்து என்ற கந்தர்வனின் தொழுநோய் அகலவும், நளனின் கலிவலி தீரவும், வேங்கை வரிப்புலியாக பிறந்து இந்த திருத்தலத்தில் மரித்த கரும சேனன் என்போன் சிவலோகம் சென்றிடவும், வீரபாதன் என்ற பெருச்சாளி சாபம் நீங்கப் பெறவும் காரணமான புனிதத் தீர்த்தம்தான் இது. 

*இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் பாடப்பட்டுள்ளது. 

*இத்திருக்கோயில், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது

*வைத்தீசுவரன்கோவில் – திருப்பனந்தாள் பேருந்து மார்க்கத்தில் மணல்மேட்டில் இருந்து வடக்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...