காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோயில்
*ஒற்றுமை தரும் ஆலயம்*
கடக ராசிக்காரர்கள் வணங்க ஏற்ற தலம் இது. சர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காமரசவல்லி என்ற ஊரில் உள்ளது கார்கோடேஸ்வரர் கோவில். இந்த ஆலயம் கடக ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது. ரதி தேவிக்கு சிவபெருமான், மாங்கல்ய பாக்கியம் அருளிய தலம் இதுவாகும். எனவே இங்கு வந்து இறைவன் கார்கோடேஸ்வரரையும், இறைவி காமரசவல்லி தாயாரையும் வேண்டிக்கொண்டால் பிரிந்த தம்பதியர் சேருவார்கள்.
கணவன்–மனைவி இடையே ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள். இந்த ஊரில் ஒவ்வொரு ஆண்டும் காமன் பண்டிகை நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது இரண்டாக வெட்டிய ஆமணக்கு செடியை நட்டு வைப்பார்கள். இருப்பினும் இந்தச் செடி, 8 நாட்களுக்குள் மீண்டும் தழைத்து விடு கிறது.
இங்கு பெரிய விநாயகர், நந்திதேவர், ஈசனுக்குக் கார்க்கோடகன் பூஜை செய்த காட்சியை விளக்கும் சிற்பம், புராணத்தைச் சொல்கிறது. மண்டபத் தூண்கள் சிற்ப நயம் பேசுகின்றன. பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் ஸ்ரீவிநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான், துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் போன்ற தெய்வங்கள் அருள் பாலிக்கின்றன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய திருமேனிகள் உள்ளன. மடப்பள்ளியும், நடராஜர் மண்டபமும் அமைந்துள்ளது. நாக தோஷம் போக்கும் தலம் என்பதால், சில நாகர் விக்கிரங்களையும் தரிசிக்கலாம்.
இங்கு கிழக்குப் பார்த்த திருக்கோலத்தில் ஈசனும்,தெற்குப் பார்த்த கோலத்தில் அன்னை பாலாம்பிகாவும் அருள்பாலிக்கின்றனர். நாகங்களின் அரசரான கார்க்கோடகன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவம் இருந்து, ஈசனை பூஜித்த தலம் காமரசவல்லி, கார்க்ககோடகன் பூஜித்த ஈசனான சவுந்தரேஸ்வரர், பின்னாளில் கார்க்கோடேஸ்வரர் ஆனார், புராணங்கள் ஒரு பக்கம் இந்தக் கதைகளைச் சொன்னாலும், ஆலயத்தில் அமைந்த சுமார் 45 கல்வெட்டுக்களும் காமரசவல்லி ஆலயத்தின் புராதனத்தை நாம் பிரமிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்கின்றன. காமரசவல்லிக்கு திருநல்லூர், கார்க்கோடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதிவல்லி என்று பல பெயர்கள் உண்டு. இங்குள்ள கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில், சுந்தர சோழன் என்கிற ராஜகேசரிவர்மனால் (கி.பி 957-974). கி.பி962 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன.
காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே. தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி. காமனை அழித்து விட்டதால், இனப்பெருக்கம் அப்போது குறைந்து போனதாலும், தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன். ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது. இதுவே பின்னாளில் காமரசவல்லி ஆகி விட்டது.
ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது. தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திருமேனி. காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள். இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது. ரதிதேவியின் வாழ்க்கை இங்கே துளிர்த்ததுபோல், இங்கே நடப்படுகிறவை மீண்டும் துளிர்க்கும் என்பதற்கு உதாரணம் இது.
குடும்பத்தில் தம்பத்திக்குள் பிரிவினை இருப்பவர்கள், கருத்து வேற்றுமை கொண்டவர்கள், விவாகரத்தைத் தடுக்க நினைப்பவர்கள், தம்பதியரின் அன்பு பெருக வேண்டுவோர் காமரசவல்லிக்கு வந்து வணங்கினால் சிறப்பு. முறையாக இங்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றால், தம்பதியர்களின் வாழ்வில் புத்தொளி பரவும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் காமரசவல்லி ஊர் உள்ளது.
சோழர் காலத்தில் காமரசவல்லி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்ட இச்சிற்றூர் திருமானூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர்-பழுவூர் சாலையில் 35 கி.மீ பயணித்தால் காமரசவல்லியை அடையாளம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment