Thursday, November 13, 2025

வெண்ணெய் மலை முருகன் ஆலயம்

 சித்தர்கள் பூஜித்த முருகப்பெருமான் ஆலயங்கள்:  வெண்ணெய் மலை முருகன் ஆலயம்,  திண்டல் குழந்தை வேலாயுத சுவாமி, புகழிமலை முருகன் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது கரூர் பக்கம் அமைந்திருக்கும் ஆலயங்கள், அதில் அமராவதி வடகரையில் அமைந்துள்ள வெண்ணெய் மலை முருகன் ஆலயம். இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது; காலத்தால் மூத்தது; யுகங்களைத் தாண்டியது; இங்கு மூலவர் பால காசி விஸ்வநாதர்; அன்னை விசாலாட்சி; முருகனுக்கு தனி சன்னதி உண்டு.

முன்பொரு காலத்தில் பிரம்மன் தன் படைப்பு தொழில் குறித்து கர்வம் கொண்டான்; அவனின் கர்வத்தால் பல குழப்பங்கள் ஏற்பட ஈசன் அவரை ஒரு பார்வை பார்க்க எல்லாம் மறந்தான் பிரம்மன்; அந்த சாபம் தீர அவன் வஞ்சிவனத்துக்கு தவம் செய்யச் சென்றான். அந்நேரம் உலக உயிர்களுக்கு உணவளிக்கவும், இன்னும் பலகாரியங்கள் நடக்கவும் காமதேனு எனும் அந்தத் தெய்வீக பசுவே இறங்கிவந்து பல காரியங்களை செய்தது. வெண்ணையினை மலைபோல் குவித்து வைத்து மக்களை பயன்படுத்த வழி செய்தது, அப்படியே ஒரு தீர்த்தமும் உருவாக்கிற்று. அது காமதேனு தீர்த்தம் என அழைக்கப்பட்டு, இப்போது தேனு தீர்த்தம் என்றாயிற்று.
இப்படி தொடங்குகின்றது இந்த ஆலயத்தின் தல புராணம், அந்த யுகம் கடந்த காலத்தில் இருந்து தொடரும் ஆலயம் இது. இங்கே வெண்ணெய் மலை என்பது மாபெரும் தத்துவம், தாத்பரியம். பாற்கடலை கடைந்து அமிர்தம் வந்தது என்பதும், கண்ணன் வெண்ணை உண்டான் என்பதும் வெறும் லௌகீக காட்சி அல்ல. அது உன்னைக் கடைந்து ஞானம் அடையவேண்டும், உன் மனதைக் கடைந்து அங்கே ஞானம் எனும் வெண்ணையினை பெறவேண்டும் எனும் பெரும் ஞான போதனை.

ஆம். இந்த ஆலயம் மாய பற்றுக்களை அறுக்கும், பெரும் ஞானம் போதிக்கும். இங்கே வழிபட்டால் ஞானமும் அறிவும் பெருகி பற்றற்ற கோலமும் தெளிவும் கிடைக்கும். பால தண்டாயுதபாணி என முருகப்பெருமான் தனித்து நிற்கும் கோலம் கொண்ட ஆலயங்கள் எல்லாமே ஞானம் வழங்கும் ஆலயங்கள். இந்த மலைக்கு சாட்சி, முருகன் இங்கு எக்காலமும் உண்டு என்பதன் சாட்சி இருவர்.

ஒருவர் கருவூர் சித்தர். கருவூர் சித்தர் பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். கரூர் எனும் இப்பகுதியில் அவதரித்தவர், பெரும் சித்த நிலையினை அடைந்து இராஜராஜசோழனுக்கு குருவாக இருந்தவர். அவர் இந்த மலையில் தவம்  செய்திருக்கின்றார், அவர் வழிபட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. அவருக்கு இங்கு தனி சன்னதி உண்டு. இது தவிர  தஞ்சை பெரிய கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் என இரு இடங்களில் மட்டும் அவருக்கு சன்னதி உண்டு. அந்த அளவு அவரின் வாழ்க்கையில் கலந்த ஆலயம் இது.

இந்த ஆலயத்தின் கண்கண்ட சாட்சி யோகி பகவான் எனும் சித்தர். இவர் வடநாட்டுக்காரர். இமயமலையில் தவம் செய்தபோது காவேரிக்கரையில் இருக்கும் வெண்ணெய் மலையில் வந்து தன்னை வழிபடும்படி முருகப்பெருமான் தோன்றி சொன்னார். உடனே இங்கு விரைந்தார் யோகி. அவருக்கு முன்பின் இந்தப் பகுதி தெரியாது; ஆறோ மலையோ தெரியாது; அவர் எங்கெல்லாமோ தேடி கடைசியில் இம்மலையினை கண்டு மகிழ்ந்து, கரூரில் இருந்த சோழமன்னனிட்ம தான் கண்ட காட்சியினை தெரிவித்தார்.

மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சன்னதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் அமைத்தார். முருகன் சன்னதிக்கு வடபுறத்தில் முருகனின் யந்திரத்தை அந்த யோகி பகவானே ஸ்தாபனம் செய்தார். ஆம். இது சாதாரண விஷயம் அல்ல. காமதேனுவால் உருவாக்கப்பட்டு, கருவூர் சித்தரால் அடையாளம் காட்டப்பட்டு, யோகி பகவானிடம் தான் இந்த மலையில் இருப்பதை உலகிற்கு சொல்ல இமயத்திலே முருகப்பெருமான் அவருக்கு கட்டளையிட்டு அழைத்து வந்த தலம் இது.

இங்கு வந்து வழிபட்டால் எல்லா வினையும் தீரும். ஞானம் பெருகும். இந்த மலை பெயருக்கு ஏற்றபடி கடும் வெயில் காலத்திலும் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். அப்படி ஒரு அபூர்வ மலை இது.

இங்குச் சென்று வழிபடுங்கள். அந்த பாலதண்டாயுத பாணியிடம் உங்கள் குறைகளெல்லாம் சொல்லுங்கள். அப்படியே காசிவாழ் சிவனையும் அன்னை விசாலாட்சியினையும் விழுந்து வணங்குங்கள்.

அன்னை விசாலாட்சிதான் அன்னபூரணி, கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளக்கும் அந்தக் கருணையான சிவபெருமான் இங்கும் உயிர்களின் பசியாற்ற காமதேனு மூலம் வெண்ணெயினை மலையாய் குவித்தார். ஆம். இங்கு வழிபட்டுச் சென்றால் உங்கள் குலவம்சம் பசியால் வாடாது, பசி என்பதே உங்கள் சன்னதிக்கு வராது.

இந்த மலையினைச் சுற்றி வழிபட்டால் ஞானம் பெருகும்; தயிரில் இருந்து வெண்ணெய் வருவது போல உங்கள் உயிரில் இருந்து இறைவனைக் காணமுடியும்; அதனை இந்த ஆலயம் வரமாகத் தரும். இன்னும் திருமணத் தடை, நோய், வறுமை என எல்லாம் நீங்கும்; அந்த மலை ஒரு அட்சய பாத்திரம்; சென்று வேண்டியதை அள்ளிக் கொள்ளுங்கள்.

மறக்காமல் அங்கே கருவூர் சித்தரை வழிபடுங்கள்; யோகி பகவானுக்கும் விளக்கேற்றிப் பணியுங்கள்; அந்த மகா சித்தர்கள் உங்களை எல்லா வகையிலும் காக்கும் வரம் அருள்வார்கள். தைப்பூசம், கார்த்திகை மாத சிறப்புக்கள் அதுவும் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாள், வைகாசி விசாகம் எனப் பல பண்டிகைகள் இங்கு உற்சாகமாக பெரும் மக்களோடு கொண்டாடப்படும் ஆலயம் இது.

அடுத்த ஆலயம் ஈரோடு அருகே பெருந்துறையினை அண்மித்து நிற்கும் திண்டல் ஆலயம். இது சிறிய குன்றில் ஒரு திண்டுபோன்ற பகுதியில் அமைந்துள்ளது.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் இதுவும்  ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். 

இங்கு இடும்பனார் மிக விசேஷம். ஒருமுறை மழை பொய்த்தபோது முருகப்பெருமானே இந்த இடும்பனை வேண்ட சொன்னாராம். அப்படி வேண்டுதல் செய்யப்பட்டு பெரும்மழை கொட்டி பஞ்சம் நீங்கியதில் இருந்து இந்த இடும்பனாருக்கு சிறப்பு அதிகம். இன்றும் அந்த வழிபாடு அங்கு உண்டு, குறிப்பாக மழை வேண்டி உண்டு.

கொங்கு நாட்டு ஆலய அமைப்பில்  ஒரு வித்தியாசம் எப்போதும் உண்டு. அது தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது  இதில் கார்த்திகை தீபத்தன்று பெரும் ஜோதி திருவண்ணாமலை போலவே ஏற்றப்படும். இந்த தீபஸ்தம்பம் அற்புதமான கலைவடிவில் உருவாக்கப்பட்டிருப்பது முருகனை போலவே அழகு.

ஆலயத்தின் உள்ளே முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம், சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் உள்ளனர். முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர், நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

ஆம். இரு விநாயகர்களும் அங்கு விசேஷம். ஒன்று, புத்தி விநாயகர் இரண்டாவது, ராகு கேது தோஷம் போக்கும் சித்தி விநாயகர். மண்டபத்தில் வேலாயுதசாமி சிலை அமையப்பெற்றுள்ளது. அடுத்து இடும்பன் சன்னதி, அதை அடுத்து மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் கருவறையில் வேலாயுத சுவாமி அமர்ந்திருகின்றார்.

இந்த ஆலயத்தின் சிறப்பு அந்த தன்னாசி குகை, அங்கேதான் கொங்கு நாட்டின் பிரதான சித்தரும் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் சமாதி கொண்டிருப்பவருமான அந்த தன்னாசி சித்தர் தவம் செய்த இடம் இது. இன்றும் அரூபியாய் அவர் அங்கே ஆசி வழங்குகின்றார். கார்த்திகை தீபம் அன்று இந்தக் குகையில் வழிபாடுகள் செய்யப்பட்டு விளக்கு ஏற்றப்படும். இக்கோவில் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ள சிறப்புடையது.

மாதம்தோறும் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டு மிக விசேஷம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயகசதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கும்.

காண்போரை வசீகரிக்கும் முருகப்பெருமான் திண்டல் மலையில் வீற்றிருக்கின்றார். அங்குச் சென்று அவரை வழிபட்டு அந்த தன்னாசி குகையில் அமர்ந்து தன்னாசி சித்தர் அருளையும் பெற்று வாருங்கள்.

அடுத்து; புகலிமலை அல்லது புகழிமலை எனப்படும் முருகன் ஆலயம். இது கரூர் அருகே அமைந்திருக்கின்றது.

இது தொன்மையான ஆலயம், எவ்வளவுக்கு தொன்மை என்றால் இலங்கையின் கதிர்காமம் போல வேல் ஊன்றி வழிபாடுகள் தொடங்கப்பட்ட மலை இது, இன்றளவும் இது விசேஷம். இது சமணர்களுக்கு புகலிடம் அருளியதால் புகலிட மலை என்றும், பின் புகலிமலை என்றும் திரிந்தது.

காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்கு இம்மலை பொதுவானதால் இந்த மலை, "ஆறுநாட்டார் மலை" என்றும் அழைக்கப்படும்.

“பொருத வரு சூரன் கிரியுருவ வளிபுனல் சுவர வேலை எறிவோனே” என‌த் தன்  திருப்புகழில் இம்மலை பற்றி  பாடுகிறார் அருணகிரியார். கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் புகழிமலை அமைந்துள்ளது. வேலாயுதம்பாளையம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், 315 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. 

கோயிலின் விமான அமைப்பு, கன்னட  பகுதிகளில் இருக்கும் விமானங்கள் போல அமைந்திருக்கிறது. சுமார் 400 அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் விநாயகர் சன்னிதி உள்ளது. மலையின் நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்குத் திசையில் முருகனுடைய மயில்வாகன சன்னிதி அமைந்துள்ளது. மலைக் காவல் ஐயனாருக்கு எனத் தனிச் சன்னிதி உள்ளது. 

கொஞ்சம் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன், பார்வதி, ஒளவையார் சுதைகள் அமர்ந்த நிலையில் உள்ளன. இவற்றின் அருகில் கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமார்கள் சன்னதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பார்த்த இடும்பன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து ஏறினால் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்துக்குள் நுழையலாம்.

மூலஸ்தானம் முன்பு முன் மகாமண்டபம் உள்ளது. அங்கே ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக கருவறைக் கடவுள் காட்சி நல்குகிறார்.

முருகனைத் தரிசத்துப் பின் சன்னிதியை விட்டு வெளியே வந்தவுடன், வலப்புறம் சிவலிங்கம், மீனாட்சி அம்மன் கொடிமரம் மற்றும் நவக்கிரகங்களைத் தரிசிக்கலாம். கோயிலின் பின்புறம் ஆதியில் நட்ட வேல் ஒன்றும், கிணறு ஒன்றும் உள்ளன. இத்திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்துக்கு சிவன் சன்னிதி, கொடிமரம், சுப்ரமணியர் கோயில் கொடிமரம் இரண்டிலும் கொடியேற்றி 13 நாட்கள் உற்சவம் நடைபெறும். 

தைப்பூசத் தேர் சிறப்பாக நடைபெறும். ஐப்பசி கந்தசஷ்டி உற்சவம் சூரசம்காரத்துடன் ஏழு நாட்கள் நடைபெறும். அதில் 50 ஆயிரம் பக்தர்களுக்குக் குறையாமல் கலந்துகொள்வார்கள். கார்த்திகை தீபம், ஆடிக் கிருத்திகை, மாதக் கிருத்திகை, சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தீபாவளி, தை பிறப்பின் போதும் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

இந்தத் தலத்தில் உள்ள விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும். சஷ்டி விரதம் இருந்து மலையில் உள்ள கார்த்திகேயனை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது உறுதி. இந்த ஆலயம் நீங்கள் எந்த நிலையில் எதற்கு அஞ்சி அடைக்கலமாகின்றீர்களோ, எதை எண்ணி அஞ்சி அங்கே புகலிடம் தேடி அவர் பாதம் அமர்வீர்களோ அந்த அச்சத்தை போக்கி அதனை புகழாக மாற்றி தரும் ஆலயம்.

உங்கள் பிரச்சினை மானுடரால் தீர்க்கமுடியாததாக இருக்கலாம், பெரும் பழியும் அவமானமும் பெரும் பெரும் சிக்கலானதாகவும் இருக்கலாம். எதுவாயினும் இந்த முருகனை சரணடைந்து புகலிடமைடைந்து மன்றாடுங்கள். ஆனானப்பட்ட கொடிய சமணருக்கே அடைக்கலம் அளித்து காத்த எம்பெருமான் தன் அடியார்களை கைவிடுவாரா? அவர்கள் அச்சம் பயம் எல்லாமே பெரும் புகழாக மாறும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...