பசி நீக்கிய இறைவன் திருசோற்றுத்துறைநாதர்
பசித் தீர்க்கும் நாதர்...!
சிவனின் தோவரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 76-வது தேவாரத்தலம் ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சோற்றுத்துறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
இங்கு தாயார் அன்னபூரணியுடன் சோற்றுத்துறைநாதர் (ஓதவனேஸ்வரர்) என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார்.
இவரை திருமணத்தடை உள்ளவர்கள் சித்திரையில் நடைபெறும் நந்தியின் திருமண விழாவை கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை.
பிராத்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி கோவில் திருப்பணிக்கு பொருள் உதவி செய்தும், தங்களது நேர்த்திகடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
தல விருட்சமாக வில்வமரமும், தீர்த்தங்களாக கவேரி, சூரிய தீர்த்தம் குடமுருட்டி உள்ளது.
ஆலயத்திற்கு அருகில் உள்ள திருமழபாடியில் நடைபெற்ற நந்தியம்பெருமான் திருமணத்திற்கு, திருச்சோற்றுத்துறையில் இருந்துதான் உணவுகள் அனைத்தும் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.
எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் உணவுக்கு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.
ஒரு காலத்தில் அருளாளர் என்னும் சிவ பக்தரும், அவரது மனைவியான திருநகையாளும், இத்தல ஓதனவனேஸ்வரரை வழிபட்டு, தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து வந்தனர்.
ஒரு முறை மழை பொய்த்துப் போனது. அதனால் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது.
சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருளாளரும், அவரது மனைவியும் மனம் வருந்தினர். தங்களின் இந்த நிலையை இத்தல ஈசனிடமும், அம்பாளிடமும் கூறி முறையிட்டனர்.
அந்த நொடியே ஈசனும், அம்பாளும் அவர்கள் முன்பாகத் தோன்றி,அள்ளக்குறையாத அட்சயப் பாத்திரத்தை வழங்கி மறைந்தனர்.
ஈசன் தந்த அட்சயப் பாத்திரத்தின் மூலம், அந்த தம்பதியர் அடியவர்களுக்கு தடையில்லாமல் உணவு வழங்கினார்கள்.
ஊர் மக்களின் பசிப் பிணியையும் போக்கினார்கள் பசியைப் போக்கிய இறைவன் என்பதால், இத்தல ஈசன் ‘திருச்சோற்றுத்துறைநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். தம்பதிக்கு, ஆலயத்தின் உள்ளே இருக்கும் நந்திக்கு அருகில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மூலவரான சோற்றுத்துறை நாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். பசிப்பிணியை மட்டுமின்றி, பிறவிப் பிணியையும் தீர்த்தருள்பவர் திருச்சோற்றுத்துறைநாதர்.
இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சூரியன், கவுதம மகரிஷி போன்றவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தின் பின்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
சுவாமி சன்னிதிக்கு வலதுபுறம்
ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் சுவாமி சன்னிதிக்கு வலதுபுறம், அன்னபூரணி அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி உருவம் வெகு நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இவரை வணங்கினால் எம பயம் நீங்கும்.
ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. கவுதம முனிவருக்கும், அவரது மனைவி அகலிகைக்கும் சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், ஐயனார், சப்த கன்னிகள், சப்த ஸ்தான லிங்கங்களும் உள்ளன.
ஏழுர்ப் பெருவிழா
இங்கு காசி விஸ்வநாதர் தனிச் சன்னிதியில் அருள்புரிகிறார். இந்த ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா சிறப்புக்குரியது.
சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், திருவையாறு ஐயாறப்பரும், அறம்வளர்த்த நாயகியும், நந்திதேவரும், சுயாம்பிகையும், திருப்பழனம் ஆபத்சகாயர்– பெரியநாயகி ஆகியோர் இங்கு எழுந்தருள்வார்கள்.
இதுவே ‘ஏழுர்ப் பெருவிழா’. அப்போது அனைவருக்கும் மதிய உணவு திருச்சோற்றுத் துறையிலேயே வழங்கப்படும்.
ஊருக்கே உணவிட அட்சயப் பாத்திரம் வழங்கிய சோற்றுத்துறைநாதருக்கு, ஐப்பசி மாத பவுர்ணமியில் சாதத்தால் அபிஷேகித்து அலங்கரிப்பார்கள்.
அந்த அன்னாபிஷேக விழாவில் இறைவனையும், இறைவியையும் வணங்கினால் பட்டினி, வறுமை நீங்கும்.
அதிகர்த்தன் என்பவரின் மகன் நற்கனதேவன். அவனது முற்பிறப்பில் அவனைப் பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இத்தல ஈசனை வழிபட்டதும் விலகியது.
அமைவிடம்
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருக்கண்டியூருக்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment