Tuesday, November 18, 2025

வல்வில் ராமன், திருப்புள்ளம்பூதங்குடி கும்பகோணம்

திருப்புள்ளம்பூதங்குடி
கும்பகோணம் திவ்யதேச யாத்திரையில் அடுத்த கோயில் திருப்புள்ளம்பூதங்குடி 

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக திருவைகாவூர் செல்லும் டவுன் பஸ் பாதையில் சுவாமி மலைக்கு அப்பால் 3 மைல் தூரத்தில் உள்ளது.திருஆதனூர் திவ்யதேசத்திற்கு வெகு அருகாமையில் உள்ள திவ்யதேசம்!

மூலவர் - வல்வில் ராமன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி) .

தீர்த்தம் - ஜடாயு தீர்த்தம், க்ருத்ர தீர்த்தம்.

விமானம் - சோபன விமானம்.

ப்ரத்யக்ஷம் - சக்ரவர்த்தித் திருமகன், க்ருத்ரராஜன்.

பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சீதாப்பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு என்னும் கழுகு, இராவணனை எதிர்த்து போரிட்டு உயிர் துறந்தது. சீதையைத் தேடிக் கொண்டு வந்த இராமபிரான், ஜடாயுவிற்கு இறுதிக் கடன்களைச் செய்தமையால் இத்தலம் 'புள்ளம்பூதங்குடி' (புள் - பறவை) என்று அழைக்கப்படுகிறது.

 இராமபிரான், ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தபிறகு, சிரமப் பரிகாரத்திற்காக இத்தலத்தில் சயனித்திருந்ததால் 'சிரமப்பரிகார பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். அதனால் பெருமாளுக்கு அம்பு, வில் போன்ற ஆயுதங்கள் இல்லை.

பொதுவாக ஒருவருக்கு ஈமக்கிரியைகள் செய்யும்போது, செய்பவரின் மனைவி உடன் இருக்க வேண்டும் என்பது விதி. இதை உணர்ந்த ராமபிரான் மானசீகமாக சீதாபிராட்டியை நினைத்தார். உடனே ராமபிரானுக்கு உதவி புரிய சீதாபிராட்டியின் மறு அம்சமாகிய பூமிபிராட்டி தோன்றினார்.

 பூமிபிராட்டியுடன் இணைந்து ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார் ராமபிரான். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.

இங்கே எழுந்தருளி இருக்கும் யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொண்டால், உத்யோகம் கிடைப்பது, மற்றும் உத்யோக உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை.

திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை, “அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே’ என 10 பாசுரம் பாடினார்.

அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான் குறிய மானி யுருவாய கூத்தன் மன்னி அமருமிடம் நறிய மலர்மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே. ~ 

வைணவ சம்பிரதாயத்தில் 2 பூதபூரிகள் உண்டு. பூதபுரி என்றால் பூத கணங்களுக்கு சாப விமோசனம் கிடைத்த இடம் என்பது பொருள். முதல் பூதபுரி – காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமானுஜர் அவதரித்த இத்தலத்தை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். இரண்டாவது பூதபுரி – புள்ளபூதங்குடி – ஆச்சாரியர்கள் சிறப்பித்தார்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...