🦅 கழுகுமலை, கோவில்பட்டி!
முற்காலத்தில் வனமாக இருந்த, 300அடி உயரமுள்ள உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அம்மன்னன் வேட்டையாட வந்த போது வனத்தில் இருந்த வேங்கை மரத்தடியில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நண்பகலில் பூசை மணி ஒலி கேட்டு விழித்துப் பார்த்த போது, அங்கே குகையும், அதனுள் மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பதையும் கண்டு அகமகிழ்ந்து உள்ளங்களிக்க வழிபட்டான்.
மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்படாமல் தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி என்றும் உணர்ந்து மக்கள் வழிபட வசதிகள் செய்து வைத்தான்.
வனத்திலிருந்த சீதையைக் ராவணன் கவர்ந்து செல்கையில் அதனைத் தடுத்த சடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டிவிட்டான். நடந்தவற்றை ராமனிடத்தில் கூறிவிட்டு சடாயு உயிர் விட்டது. ராமன் சடாயுவிற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை செய்தான். சடாயு உடன் பிறப்பான சம்பாதி முனிவர் ராமனை சந்தித்து உடன் பிறந்தவனுக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரிகைகளைக் கூட செய்ய இயலாத பாவியாகி விட்டேனே என்று புலம்பினார்.
ராமன் அவரைத் தேற்றி தென்னாட்டில் 300 அடி உயரமுள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமானை வணங்கி உன் பாவத்தை போக்கிக் கொள், என்றார்.
கழுகு முனிவராகிய சம்பாதி இத்தலத்திற்கு வந்து ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்ட முருகப் பெருமானை வணங்கி தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார். இத்தலத்தில் கழுகு முனிவர் வசித்து வந்ததால் இம்மலைக்கு கழுகு மலை என்று பெயர் பெற்றது.
கழுகு மலையில் அருட் பாலிக்கும் மூர்த்தியாதலால் கழுகாசலமூர்த்தி என்று மூலவர் அழைக்கப்படுகிறார்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் தோஷத்தை நீக்கி மங்கள வாழ்வளிக்கும் மூர்த்தியாக விளங்குவதால் இத்தலம் குருமங்கள க்ஷேத்திரம் என்று போற்றப்படுகிறது.
கருவறை மலையின் குகையில் அமைந்திருப்பதால் இக்கோயிலின் மலையே கோபுரமாக விளங்குகிறது. இக்கோயில் கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் 20கி.மீட்டர் தூரத்தில் கழுகுமலையில் உள்ளது.
No comments:
Post a Comment