Monday, May 24, 2021

பிரதோச வழிபாடு


*🙏🌹மனவலிமை அருளும் திங்கள்கிழமை பிரதோஷம்! - சிவபுராணம் பாடி வழிபட வேண்டிய நாள்* 🙏🌹

பொதுவாக, பிரதோஷ வேளையில் சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நர்த்தனம் புரிவார் என்று சொல்வதுண்டு. ஆனால், இறைவன் நர்த்தனம் புரிய விரும்பும் இடம் நம் மனம் என்னும் மேடையில்தான்.

சிந்தையில் சிவனை வைத்தவர்கள் வாழ்வில் ஒவ்வொரு கணமும் சிவனாரைத் தொழுவதையே தம் பிறவிப் பயனாகக் கொண்டவர்கள். இல்லறத்தில் இருப்பவர்களுக்கோ அது மிகவும் சிரமமானது. அதனால்தான் நம் முன்னோர்கள் சில விசேஷ நாள்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் ஒன்று பிரதோஷம். அதிலும் திங்கள் கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

சிவபெருமான்

திங்கள் என்றால் சந்திரன். சந்திரனைத் தன் தலைமீது சூடியவர் சிவபெருமான். சந்திரன் மனோகாரகன் என்று அழைக்கப்படுவார். மனிதர்களின் மனவலிமையை நிர்ணயிப்பவர் சந்திர பகவான். எனவே, சந்திரனின் ஆதிக்கத்தில் இருக்கும் திங்கள்கிழமை அன்று சிவபெருமானை வழிபட மனவலிமை அதிகரிக்கும். அதிலும் பிரதோஷமும் சேர்ந்து வருவதால் இன்று சிவ வழிபாடு மிகவும் அவசியம்.

பொதுவாக சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும். ஆனால், இன்றைய அசாதாரண சூழ்நிலையில் பக்தர்கள் யாரும் ஆலயத்துள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பிரதோஷ அபிஷேகங்கள் எல்லாம் நடைபெறும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் வீட்டிலிருந்தே பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபடலாம்.

குறிப்பாக பிரதோஷ வேளையான மாலை வேளையில் சிவபுராணம் பாடி சிவனை வழிபடுவது மிகவும் முக்கியம். சிவபுராணம் வேதங்களின் சாரம் என்று போற்றப்படுவது. உலகில் உயிர்களின் பிறப்பிலிருந்து முக்தி நிலை வரைக்குமான பிரபஞ்ச ரகசியத்தை விளக்குவது. மேலும், பக்தர்கள் பற்றிக்கொள்ள வேண்டிய சிவனாரின் தூக்கிய திருவடிகளைப் போற்றுவது. இப்படிப்பட்ட சிவபுராணத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறலாம்.

மேலும், சிவபெருமானின் படம் அல்லது லிங்கத்துக்கு அர்ச்சித்தும் வழிபாடு செய்யலாம். படம் அல்லது லிங்கத்தில் இறைவனை ஆவாஹனம் செய்து சகல உபசாரங்களையும் செய்து சிவார்ச்சனை செய்யலாம்.

சிவ அஷ்டோத்திரங்கள் வடமொழியிலும் தமிழிலும் நிறைய கிடைக்கின்றன. தமிழில் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய போற்றித் திருத்தாண்டகம் மிகவும் சிறப்புமிக்கது. போற்றித் திருத்தாண்டகம் பாடி ஒவ்வொரு போற்றிக்கும் ஒரு மலர் சாத்தி வழிபடலாம்.

பொதுவாக, பிரதோஷ வேளையில் சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நர்த்தனம் புரிவார் என்று சொல்வதுண்டு. ஆனால், இறைவன் நர்த்தனம் புரிய விரும்பும் இடம் நம் மனம் என்னும் மேடையில்தான். இன்று பிரதோஷ வேளையில் சிவன் நம் மனத்தில் எழுந்தருளித் திருநடம் புரிய வேண்டுவோம்.

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...