_நவ புலியூர் திருத்தல தரிசனம்!_
ஆதிசேடனும் வியாக்கிரபாத முனிவரும் (புலிக்கால் முனிவர்) சிவபெருமானின் திருக்கூத்தினை மிகவும் ஆவல் கொண்டனர். இருவரையும் தைப்பூசத்தன்று வந்து தரிசிக்கும்படியாக சிவபெருமான் கூறியதுடன் இருவருக்கும் திருநடன தரிசனமும் செய்தருளினார். வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மோட்சத்தை வேண்டி நின்றபொழுது, சிவபெருமான், இந்த ஒன்பது புலியூரையும் தரிசித்து, கடைசியாக ஸ்ரீரங்கத்தில் யாத்திரையை முடித்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டார் எனப்படுகிறது.
வியாக்ரபாதர் வழிபட்ட தலங்கள் ஒன்பது. அவை: பெரும்பற்றப்புலியூர் - (சிதம்பரம்), திருப்பாதிரிப்புலியூர், எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், சிறுபுலியூர், அத்திப்புலியூர், தப்பளாம்புலியூர், பெரும்புலியூர் மற்றும் கானாட்டமுள்ளூர்.
பெரும்பற்றப்புலியூர்
(சிதம்பரம்)
இத்தலம், பொற்புலியூர், தில்லை என்றும் அழைக்கப்படுகிறது. பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலம். ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு தினசரி நடைபெறும் பூஜைகளில் பதஞ்சலி பூஜா சூத்திரப்படி வைதீக பூஜையும், வியாக்ரபாதர் புஷ்பார்ச்சனை விதிப்படியும் நடைபெறுகிறது. ஸ்ரீ நடராஜப் பெருமான் சந்நிதிக்கு இடது பக்கம் சித்ரகூடம் எனப்படும் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி உள்ளது.
திருஞான சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் முதலியோர் முறையே தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு கோபுர வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. திருநீலகண்ட நாயனார், திருநாளைப்போவார் (நந்தனார்), கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் முத்தி பெற்ற தலம். திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம், பாட சேக்கிழாருக்கு இறைவன் அடியெடுத்துக் கொடுக்க, முழுப் புராணமும் பாடி அரங்கேற்றிய தலம்.
இறைவன் ஸ்ரீ நடராஜர், அம்பலக் கூத்தர், சபாநாயகர், கனக சபாபதி, திருச்சிற்றம்பலமுடையார் என்று அழைக்கப்படுகிறார். இறைவி ஸ்ரீ சிவகாமசுந்தரி; ஸ்ரீ பார்வதியுடன் மூலட்டானேஸ்வரரும், பாண்டிநாயகம் என்ற முருகப்பெருமானும் தனித்தனிக் கோயிலிலிருந்து அருள்பாலிக்கின்றனர்.
சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை என ஐந்து சபைகள் உள்ளன. சிற்றம்பலம் - நடராஜப் பெருமான் நடனம் புரியும் இடம். உள்ளே செல்வதற்கு, இரு புறமும் யானை உருவங்களுடன் ஐந்து படிகள் உள்ளன. இவைகள் பஞ்சாட்சரப் படிகள் என அழைக்கப்படும். மார்கழியில் ஆருத்ரா தரிசனமும், ஆனியில் ஆனித் திருமஞ்சனமும் சிறப்பு மிக்க திருவிழாவாகும்.
திருப்பாதிரிப்புலியூர்
கடலூர் புது நகர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள நடுநாட்டுத் தலம். பாதிரி மரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளதாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் திருப்பாதிரிப்புலியூர் என அழைக்கப்படுகிறது. இறைவன் ஸ்ரீ பாடலீஸ்வரர்; இறைவி பெரியநாயகி.
உமா தேவியார் பாதிரி மரத்தின் அடியில் தங்கித் தவம் புரிந்து இறைவனை மணம் புரிந்த தலம். இத்தலத்தில் அப்பர் குருபூஜை சித்திரை சதயத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. கோயிலுக்கருகில் ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் மடம் உள்ளது.
எருக்கத்தம்புலியூர்
நடுநாட்டுத் தலம். வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ராஜேந்திரபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளெருக்கைத் தலமரமாகக் கொண்டதாலும், வியாக்ரபாதரால் வழிபட்டதாலும் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணத்திற்கு அருகில் உள்ளது. இத்தல இறைவன் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், இறைவி நீலமலர்க்கண்ணி.
திருஞானசம்பந்தர் பாடியது, சம்பந்தருக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரப் பதி. அவருக்குத் தனிக் கோயில் இங்கு உள்ளது.
ஓமாம்புலியூர்
சோழ நாட்டு வடகரைத் தலம். சிதம்பரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமா தேவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்ததாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இத்தலம் இப்பெயர் பெற்றது. உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி மூல மூர்த்தியாக, சிலா ரூபத்தில், உயர்ந்த பீடத்திலிருந்து அருள்பாலிக்கின்றார். நடராஜர் இருக்குமிடத்தில் தட்சிணாமூர்த்தியும், தட்சிணாமூர்த்தி இடத்தில் நடராஜரும் உள்ளனர். இறைவன் ஸ்ரீ பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், துயர்தீர்த்த நாதர்; இறைவி ஸ்ரீ புஷ்பலதாம்பிகை, பூங்கொடிநாயகி. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்றது.
சிறுபுலியூர்
மயிலாடுதுறைலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் ஸ்ரீ வழித்துணைநாதர், மார்க்கபந்தீஸ்வரர், கங்காளநாதர். வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் சிறுபுலியூரை அடையும்பொழுது இருட்டிவிட்டது. சிவபெருமானும், அரங்கனும் காட்சி தந்து யாத்திரையை நிறைவேற்ற உதவியதாக வரலாறு. 108 திவ்யதேசங்களில் ஒன்று. மூலவர் ஸ்ரீஅருள்மாகடலமுத பெருமாள், புஜங்க சயனக்கோலம்; உற்சவர் கிருபா சமுத்திரப் பெருமாள்; தாயார் திருமாமகள் நாச்சியார். வியாக்ரபாதர் பெருமாளைப் பூஜித்த வண்ணம் திருவடியில் அமர்ந்துள்ளார். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
அத்திப்புலியூர்
கீழ்வேளூருக்கு மேற்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. அத்தி என்றால் யானை; யானையும், (புலியும்) வியாக்கிரபாதரும் வழிபட்டதால் அத்திப்புலியூர், அஸ்திவியாக்கிரபுரம் எனப் பெயர் பெற்றது. மூலவர் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர்; தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். இறைவி சிவகாமசுந்தரி.
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிரபாதருக்கும், அகத்தியருக்கும் திருமணக் காட்சி நல்கிய தலம். மூல லிங்கத்திற்குப் பின்புறம் சோமாஸ்கந்தரைத் தரிசிக்கலாம். தட்சிண கேதாரம் எனப் போற்றப்படுகிறது.
தப்பளாம்புலியூர்
திருவாரூருக்குத் தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. வியாக்கிரபாதருக்கும், மண்டூக மகரிஷிக்கும் அருள்பாலித்த தலம். வியாக்கிரபாதரின் புலிக்கால், புலிக்கைத் திருமேனியை நீக்கிதாக வரலாறு. பதஞ்சலி, வியாக்கிரபாதர், மண்டூக மகரிஷி மூவருமே திருநடனக் காட்சியைக் கண்டு களித்த தலம்; நடராஜ மூர்த்தம் கல்லால் வடிவமைக்கப்பெற்று கோஷ்ட மூர்த்தமாக உள்ளார்.
இறைவன் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர், சுயம்பு மூர்த்தம். இறைவி நித்யகல்யாணி. ஏகபாதருத்ர மூர்த்தி தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். சப்த மாதர்கள், ஜேஷ்டாதேவி, ஜுரஹரேஸ்வரர், அனுக்ரஹ சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.
பெரும்புலியூர்
திருவையாற்றுக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. வியாக்ரபாதர் வழிபட்ட தலம். இறைவன் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர்; இறைவி ஸ்ரீ செளந்தர நாயகி. கல்லாலான நடராஜ மூர்த்தம் உள்ளது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
கானாட்டமுள்ளூர் - கானாட்டம்புலியூர்
சிதம்பரத்திற்குத் தென்மேற்கே 30 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சிதம்பரத்திலிருந்தும், ஓமாம்புலியூரிலிருந்தும் இக்கோயிலை அடையலாம். பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம். இறைவன் ஸ்ரீ பதஞ்சலிநாதேசுரர்; இறைவி கண்ணார்குழலி. சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்றது.
வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் ஒன்பது புலியூர்களையும் தரிசித்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரைத் தரிசித்துப் பின்னர், திருப்பட்டூர் சென்று ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மாவையும் வணங்கி ஜீவ சமாதி அடைந்ததாக வரலாறு.
No comments:
Post a Comment