அவளிவணநல்லூர் சாட்சிநாதர் ஆலயம்
தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அன்மித்து அமைந்துள்ளது, இந்த தலம்
"பதிக இன்இசை பாடிப்போய், பிறபதி பலவும்
நதிஅ ணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி,
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்
அதிர்சி லம்புஅடி யார்மகிழ் அவளிவ ணல்லூர்"
என சம்பந்த பெருமான் பாடிய தலம் இது, இந்த தலத்தின் தொன்மை யுகங்களை தாண்டியது பாதிரி மரங்கள் நிறைந்த இப்பக்கம் பாதிரிநாதராக அமைந்த சிவன் தொன்மையானவர் என்றாலும் இங்கு அவர் சாட்சிநாதனாய் வந்ததில் இருந்து இதன் பெருமை துவங்குகின்றது
காலத்தால் முந்தைய இந்த ஆலயத்துக்கு காசிபர் உள்லிட்ட பலர் அப்போதே வந்தார்கள், சிவனிடம் தங்கள் துன்பத்தை சொல்லி வேண்டி விடுதலைபெற்றார்கள் வாழ்வு பெற்றார்கள், பாதிரி மரத்தடியில் இருந்த லிங்கம் பின்னாளில் ஆலயம் கண்டது, சோழ மன்னர்கள் இதனை கொண்டாடினார்கள், நம்பியவரெல்லாம் காக்கபட்டார்கள்
அந்த வரிசையில் ஒரு அர்ச்சகர் வாழ்வில் நடந்த அற்புத்தத்தோடு இந்த வரலாறு பிணைந்திருக்கின்றது
இக்கோவிலில் அர்ச்சகராக இருந்தவர்க்கு இரு மகள்கள், பார்ப்பதற்கு இருவரும் ஏறகுறைய ஒரே தோற்றம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள், அவர்களில் மூத்தவளை ஒரு அந்தணர்க்கு மணமுடித்துவைத்தார் அர்ச்சகர்
அந்தணர் வாழ்வு நாடோடி வாழ்வு, யாத்திரை உள்ளிட்ட பல காரியங்களுக்காக, பெரிய மன்னர்கள் நடத்தும் யாகங்கள் ஹோமங்கள் முதல் பல காரணங்களுக்காக, வேத வகுப்புகள் அவர்கள் எங்காவது சென்றுகொண்டே இருக்கவேண்டும் இது அவர்கள் விதி
பல இடங்களுக்கு செல்வோர் பல விஷயம் கற்றுகொள்ளமுடியும், பல நாடுகளை சுற்றிவந்தால் பெரும் அனுபவமும் அறிவும் கிடைக்கும் எனும் ஏற்படும் இதில் இருந்தது
அப்படி மூத்தவள் கணவன் காசி யாத்திரை சென்றான், அக்காலங்களில் காசியாத்திரை மிகுந்த நாள் பிடிக்கும் ஒன்று வருடம் கூட ஆகலாம்
அப்படி அவன் சென்றிருக்கும் சமயம் அவன் மனைவியான மூத்தவளுக்கு அம்மை நோய் தாக்கிற்று இதனால் அவள் மிகுந்த வேதனைக்குள்ளாகி உருவம் குலைந்து போனாள், ஆளே அடையாளம் காணமுடியாபடி மாறிபோனாள்
காசி சென்றிருந்த கணவன் மீண்டும் வந்து அவளை சந்தித்தபோது குழம்பி போனான், அவன் இது தன் மனைவி அல்ல இளையவளே தன் மனைவி என வாதிட்டான், குழந்தை இல்லாததால் அங்கு சாட்சி பெரிதாக இல்லை
இது பெரிய விவகாரமானது, தங்கையினை காட்டி இவளே என் மனைவி என்றவன் குழப்பம் செய்தான், விவகாரம் வீட்டில் உள்ளவர் பேசி முடியாமல் சபை வரை வந்தது
அர்ச்சகரான அந்தணன் தன் வேதனையில் சொன்னான் "மருமகனே இவள்தான் உங்கள் மனைவி, அம்மை நோயினால் இப்படி பாதிக்கபட்டாள் , அவள் உருவம் அதனனால் மாறிவிட்டது ஆனால் நான் உங்களுக்கு துரோகம் நினைக்கவில்லை, அதையும் தாண்டி ஒரு பெண் தன் கவணன் அல்லாதவனை எப்படி உரிமை கொண்டாடுவாள்" என கேட்டார்
அவனோ பிடிவாதமாக மறுத்தான் "என் மனைவி அழகானவள், இப்போது இன்னொரு பெண்ணுக்கு அம்மை வந்தததால், அவளின் திருமணமும் தள்ளி சென்றதால் அவளை இப்போது எனக்கு கட்டி வைத்துவிட பார்க்கின்றீர்கள், நான் ஏமாறமாட்டேன், இவள்தான் என் மனைவி, அம்மை வந்தவளே இளையவள்" என வாதிட்டான்
சில விவாதங்களில் முடிவில்லை என்பதால் கடைசி பஞ்சாயது ஒன்றும் முடிவானது, பல ஆதாரங்களோடு பெண்ணையும் அவள் தகப்பனையும் வரசொன்னார்கள் சபையார்
ஒரு தகப்பனுக்கு தன் துயரை விட எது பெரிது? ஒரு பெண்ணுக்கு தன் கணவனே தன்னை தள்ளிவைப்பதை தவிர எது கொடிது? அதனால் இருவரும் அந்த சிவனிடமே தங்கள் வேதனையினை சொல்லி அழுதார்கள்
அன்றாடம் தனக்கு சேவகம் செய்யும் பக்தனுக்காக அவனோடு சேர்ந்து பல காரியங்களை செய்யும் பெண்ணுக்காக சிவனே இறங்கி வர சித்தமனார்
அபப்டி மறுநாள் சபை கூடிற்று, பெண் தரப்பிடம் தாலி தவிர வேறு பெரிய ஆதாரமில்லை, அவளும் அவள் தங்கையும் ஒருபோல இருந்ததால் எல்லோருக்கும் குழப்பமும் வந்தது
தன் தரப்பு வாதமெல்லாம் தோற்ற நிலையில் அந்த அர்ச்சகர் "சிவனே" என அழைத்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது, வானில் விடைமேல் பார்வதியுடன் அமர்ந்த சிவன் தோன்றினார், எல்லோரும் அறிய தோன்றியவர் சொன்னார் " இந்த பெண்ணே அவன் மனனைவி, அவள் இவளே" என காட்டி மறைந்தார்
அத்தோடு அவளுக்கு அம்மை நோயின் தாக்கம் மறைந்தது அவள் முன்னை விட அழகானவளாய் தோன்றினாள்
பரமனே வந்து சொன்னபின் என்ன இருக்கின்றது, அவனும் பாதிக்காப்ட்ட தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு ஏற்றுகொண்டான் அவர்கள் வாழ்வு காக்கபட்டது
சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர் என்றானார், அவரே "அவள் இவள்" என சொன்னதால் இந்த ஆலயமே "அவள் இவள் என்ற நல்லூர்" என்றானது, பின்னர் மருவி அவளிவநல்லூர் என்றாயிற்று
நம்புபவர்களை காக்கும் அருள்மிக்க தலம் இது, இந்த பஞ்ச ஆரண்ய தலங்களும் சிவனின் ஐந்தொழிலை குறிப்பவை, திருகாவூர் தலம் அவ்வகையில் படைத்தல் தொழிலை குறிப்பது, அங்கே மானிட படைப்பினை உருவாக்கி கொடுத்த அதிசயத்தை சிவன் செய்தார்
இரண்டாம் தலமான இத்தலம் காத்தல் தொழிலை செய்கின்றது, இந்த பெண்ணின் வாழ்வின காத்து தந்த ஆலயம் அதற்கான சாட்சியாய் நிற்கின்றது
பெண்ணின் வாழ்வு என்பது அவள் ஒருத்திக்கான வாழ்வு அல்ல, அவளை சார்ந்தவர்கள் அவள் குலம் என பெரிய வம்சத்தையே காக்கும் காரியம் எனும் வகையில் இங்கு நம்பிய எல்லோரையும் சிவன் காத்து அருள்வார் என்பதை சொல்லும் தாத்பரியம் இது
இத்தலத்தின் விருட்சம் பாதிரி மரம், இவ்வகை மரத்தின் தன்மை கோடையில் மிக செழுமையாக நின்று எல்லா மக்களுக்கும்
உயிர்களுக்கும் நிழல் தந்து காப்பது
சிவனும் எல்லா பெரும் பிரச்சினைகளிலும் வேதனையிலும் தம் மக்களை காப்பார் , தன்னை நம்பியவர்களை காப்பார் என்பதை அழுத்தமாக சொல்லும் தத்துஅம் இது
கிழக்கு நோக்கிய இக்கோவில் உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
அதை தாண்டி வழிபட்டுச் சென்றால் விநாயகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்புலிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.
இதற்கு அடுத்தே அப்பெண்ணுக்கு சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.
உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் உண்டு
நடராஜர் சன்னதி இங்கு அழகானது, அருகில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது.
கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு
இந்த ஆலயத்தில் காசிமுனி மட்டுமல்லாது அகத்தியர் முதல் பலர் வழிபட்டனர், விஷ்ணு வழிபட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று
இந்த ஆலயம் வாழ்வின் எல்லா சிக்கலில் இருந்தும் காவல் தரும் அது தொழில் , குடும்பம், எதிரிகள், உடல்நிலை, வழக்குகள், சட்ட சிக்கல்கள் என எதுவாக இருந்தாலும் எவ்வகை ஆபத்தாக இருந்தாலும் அதினின்று உங்களை காத்து நிற்கும்
இன்னும் நல்ல மணவாழ்வை தரும், தம்பதியர் இடையேயான சர்ச்சை எல்லாம் தீரும், உடலில் வந்த எல்லா பாதிப்புக்களும் அலங்கோலமும், இதர வியாதிகளும் இங்கு தீரும்
குறிப்பாக கண் சம்பந்தமான வியாதிகள் முதல் எல்லாமும் சிவனருளில் சரியாகும், தோல் சம்பந்தமான வியாதிகள் முழுக்க சரியாகும் தலமும் இதுதான்
அன்னை சவுந்தர்யநாயகி அருளில் இங்கு வழிபடுவோர்க்கு தேக சவுந்தர்யம் உண்டாகும், பொலிவான தோற்றம் அவள் அருளில் கிடைக்கும்
இந்த சிவன் உங்களை முழுக்க காப்பார், எல்லாவகை சிக்கலில் இருந்தும் உங்களை மீட்டெடுத்து காவல் இருப்பார், மிகபெரிய இன்னலில் யாருமற்ற சூழலில் நீங்கள் இருந்தாலும் , உலகமே உங்களை குற்றம்சாட்டினாலும் அந்த சாட்சிநாதர் சாட்சியாக வந்து உங்களை மீட்பார்
பஞ்ச ஆரண்ய தலத்தில் இரண்டாம் தலமான இத்தலத்தை தரிசிப்பவர்கள் மனம், உடல், குலம் என எல்லாவற்றிலும் பெரும் வாழ்வு வாழ்வார்கள், இது சத்தியம்
இந்த ஆலயம் ஞானியர் பலரால் பாடபட்டது, வள்ளலார் தன் விண்ணப்பக் கலிவெண்பாவில், "சரதத்தால் ஏதும் அவள் இவள் என்று எண்ணாதவர் இறைஞ்சி ஓதும் அவளிவணல்லூர் உடையோய்" என்று போறறுகின்றார்
"தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிருமென்று
வீற்றினை யுடையவனாகி வெடுவெடுத்து எழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவள் இவள் நல்லூரே" அனைவரும் சென்று வழிபாட்டு வளமுடன் வாழ்க.
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment