சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் பெற வேண்டுமா?
அப்படியென்றால் வாருங்கள் வழுவூர் கரி உரித்த சிவன் ஆலயத்திற்கு!
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கும் அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்.
ஆலய தல வரலாறு:
தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவம் கொண்டனர்.
அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர்.
தாருகாவன முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தன்னிலை மறந்து முனிவர்கள் மோகினிக்கு பின்பும்,முனிவர்களின் மனைவியர் அழகே உருவான பிட்சாடனர் பின்பும் சென்றனர்.
பிட்சாடனர் வடிவத்திலிருந்த சிவபெருமான் மோகினி வடிவத்திலிருந்த திருமாலோடு இணைந்து ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார்.
தாருகாவன முனிவர்களின் மனைவியர் பிட்சாடனர் வடிவிலிருந்த சிவபெருமான் பின்னால் சென்றதால் சிவபெருமானின் மீது தாருகாவன முனிவர்கள் கோபம் கொண்டனர்.
ஆபிசார வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி சிவபெருமான் மீது தாருகாவன முனிவர்கள் ஏவினர்.
பிட்சாடனர் உருவில் வந்த சிவபெருமான் தாருகாவன முனிவர்களால் வேள்வி தீயிலிருந்து அனுப்பி வைக்பட்ட மதயானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார்.
உலகம் முழுவதும் இருள் சூழ அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள்.
சிவபெருமான் யானையின் வயிற்றுக்குள் இருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வந்தாராம்..!
அதன்பின் ஆணவம் அழிந்த தாருகாவன முனிவர்கள், வந்தது சிவபெருமான் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர்.
மற்றொரு வரலாறு:
அசுரன் ஒருவன் மகாபலி போன்று மிகச் சிறந்த சீரிய சிவனடியாராக வாழ்ந்து வந்தான்.
வெள்ளை யானையாகிய ஐராவதம் போன்று நான்கு தந்தங்கள் கொண்ட யானையாக அந்த அசுரன் உருமாறி தலந்தோறும் சென்று சிவ பூசை செய்து வந்தான்.
அவன் பெற்ற தவ ஆற்றல்களக் கொண்டு தூய வாழ்க்கை வாழ்ந்த அவன் தன் உயிர் பிரிந்த பின்பும் எல்லோராலும் போற்றி வணங்கப்படும் பெருமை பெற வேண்டும் அதை அவனது இரண்டு கண்களும் கண்டு களிக்க வேண்டும் என்று வரம் பெற விரும்பினான்.
தன்னை அழிப்பதற்கு ஒரு குழந்தை பிறந்துள்ளதை அறிந்த சூரபத்மன் என்ற அசுரனுக்கு அஞ்சி மறைந்து வாழ்ந்த பிரம்மா,விஷ்ணு முதலிய தெய்வங்களும் தேவர்களும் ஒரு ஊரில் கிணறும் குளமும் தோண்டி அரச மரத்தடியில் லிங்க மெய்ப் பொருளைத் தொழுது வேள்வி புரிந்து நாள்தோறும் நியமத்துடன் பூசை செய்து கொண்டிருந்தனர்.
பல தலங்களையும் வழிபட்டுச் சென்ற யானை உருவம் கொண்ட அசுரன் தெய்வங்களும் தேவர்களும் பூசை செய்து கொண்டிருந்த அந்த இடத்தை அடைந்தான்.
அந்த இடத்தை அடைந்தவுடன்
சிவகதி அடையும் தருணம் வந்ததை உணர்ந்த யானை உருவம் கொண்ட அசுரன் சிவனின்அருளை பெற வேண்டி திடீரென்று மதம் பிடித்துப் பிளிறிக் கொண்டு ஓடினான்.
சிவ பூசை செய்து கொண்டிருந்த தெய்வங்களும் தேவர்களும் யானையிடமிருந்து தங்களைக் காத்து அருளுமாறு பராபரனை வேண்டினர்.
ஒரு உருவமும் இல்லாமல் எங்கும் நிறைந்துள்ள ஈசன் ஒரு முகமும் எட்டு திருக் கரங்களும் கொண்டு வெளிப்பட்டார்.
கையில் குழந்தை முருகனை எடுத்துக் கொண்ட உமையம்மை அச்சம் கொண்டு நடுங்கி லிங்கப் பரம்பொருளிடம் அடைக்கலம் புகுந்தாள்.
சர்வேசுவரனது திருக்காட்சி கண்ட யானை உருவில் இருந்த அசுரன் பரமனை வலம் வந்து வணங்கிப் போற்றித் துதித்தான்.
சூரியன் முன் இருள் விலகுவது போல் ஈசுவரன் முன் முழுத் தூய்மை அடைந்த யானை உருவம் கொண்ட அசுரன் சிவ கணமாகி மீண்டும் பிறக்காத பேரின்ப நிலை பெற்றான்.
யானைக்கு முக்தி அருளிய முக்தீசுவர் அதன் தலையை முழுமையாய் விடுத்து யானையின் தோலை உரித்துத் திருமேனியில் போர்த்துக் கொண்டு அருளினார்.
தலையைத் திருச்செங்கட்டாங் குடியில் ஊனமடைந்த யானைத் தலையுடன் சிவ பூசை செய்து கொண்டிருந்த விநாயகருக்குப் பொருத்தி அருளினார்.
யானை உருவம் கொண்ட அசுரன் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப அவன் கண்டு களிக்குமாறு அவன் தலையும் தோலும் எல்லோரும் எப்போதும் போற்றிப் பணிந்து வணங்கும் பெருமை பெற்றன.
கஜ சம்காரம் நடந்ததை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் வீரட்டேசுவரரின் கீர்த்தியைப் போற்றிப் பாடித் தொழுது பணிந்தனர்.
ஆலய அமைப்பு:
தெய்வங்களும் தேவர்களும் அரச மரத்தடியில் பூசித்த அழகிய லிங்கப் பரம்பொருள் தற்போது கர்பகிருகத்தில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் அமர்ந்துள்ளார்.
சூலம் மழு தண்டு அம்பு பாசம் கபாலம் வில் கேடயம் தாங்கி ஒரு முகமும் எட்டு கரமும் கொண்டு கஜ சம்ஹாரம் செய்த பரமேசுவரன் சுயம்பு லிங்கமாய்ப் பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் உள்ளார்.
கர்பகிருகத்தில் உள்ள கடவுளுக்குக் கீர்த்தி வாசர் என்றும் சுயம்பு லிங்கமாய் உள்ளவருக்குத் திருமூல நாதர் என்றும் திரு நாமம்.
யானையின் தலை மேல் ஒரு திருவடி இருக்க மற்றொரு திருவடியின் உட்புறம் (உள்ளங்கால்) தெரியும் வண்ணம் காலைத் தூக்கி நின்று திருக் கரங்களை விரித்துப் பின்னாலிலிருந்து யானையின் தோலைப் போர்த்திக் கொள்ளும் அருமையான திருக்கோலம் கொண்ட அழகிய வீரட்டேசுவரரின் அதி அற்புதமான செப்புத் திருமேனி பெரிய சந்நிதியாக
இரண்டு துவார பாலர்களையும் எதிரே தனி நுழை வாசலையும் கொண்டு தெற்கு நோக்கி கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் கீர்த்தி வாசருக்கு இடது புறம் அமைந்துள்ளது.
தீபாராதனை காட்டும்போது ஒளிவிடும் வீரட்டேசுவரரின் திரு மேனியைக் காண கோடிக் கண்கள் வேண்டும்.
தேடித் தேடித் திரிந்தாலும் திருமால் காண முடியாத சிவனின் திருப்பாத தரிசனத்தைக் கண்டு நாம் தொழும் போது மனிதப் பிறவி பெற்ற முழுப் பலனையும் நம்மால் உணர முடியும்.
இந்தச் சந்நிதி உள்ள மண்டபம் முழுவதும் சுவற்றிலும் கூரையிலும் தெய்வீக நால்வர், முனிவர், அட்ட வீரட்ட வரலாறுகள், மற்றும் பல புராண வரலாறுகள் வண்ண ஒவியங்களாக வரையப்பட்டு உள்ளன.
திருக் கோயிலின் வடக்குப் பிரகாரச் சுவர் முழுவதும் புராண வரலாறு காட்டும் ஓவியங்களால் நிரம்பியுள்ளது.
ஒரு திருக் கரத்தில் திரிசூலம் தாங்கி மறு கரத்தை முழந்தாள் மீது வைத்து உயரமான யானையின் மேல் (பசு – மிருகம்) அமர்ந்துள்ள உற்சவ மூர்த்தியும் கஜ சம்ஹார மூர்த்தி சந்நிதிக்கு இடது புறம் திருவாசியுடன் உள்ள பிட்சாடணர் சந்நிதியில் உள்ளது.
வசந்த மண்டபத்தின் முகப்பில் சுதை வடிவமாக கஜ சம்ஹார மூர்த்தி காட்சி தருகிறார்.
மௌன சிவமான தட்சிணா மூர்த்திக்கு மேலே முகப்பில் யானை உரி போர்த்த மூர்த்தி வடிவம் கல்லில் உள்ளது.
கை கூப்பித் துதித்து நிற்கும் அரி அயனுக்குக் காட்சி தரும் லிங்கோற்பவர் முகப்பில் நந்தி வாகனர் உள்ளார்.
லிங்கோற்பவர் பிரகாரம் திறந்த வெளியாக உள்ளது.
குழந்தை முருகனுடன் வீரட்டேசுவரரை வழிபட்ட உமையவள் தனிச் சந்நிதியில் நந்தி வாகனத்துடன் வீரட்டேசுவரருக்கு இடது புறம் அதே திசையில் இளங்கிளை நாயகி என்ற பெயருடன் உள்ளாள்.
குழந்தை முருகன் பால சுப்பிரமணியர் என்ற பெயருடன் பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் உள்ளான்.
வழுவூர் வீரட்டேசுவரரைப் பூசித்த லட்சுமி சுதை உருவமாகவும் கல் மேனியாகவும் இரண்டு தனிச் சந்நிதிகளில் உள்ளாள்.
சப்த மாதர்கள் பிரதிட்டை செய்து பூசித்த லிங்கங்கள் பிரகாரத்தில் பஞ்ச பூத லிங்கங்களுக்கு அருகே உள்ளன.
சிவ பூசைக்காக சரசுவதி உண்டாக்கிய கிணறு சரசுவதி தீர்த்தம் எனப்படுகிறது.
யானையுரி யீசனை வழிபட்ட ஜேஷ்டா தேவியும் (சனி தேவி) பிடாரியும் பிரகாரத்தில் உள்ளனர்.
நாகர்களும் நாகர்கள் பூசித்த லிங்கங்களும் பிரகாரத்தில் இருக்கும் சுரங்கப் பாதை வாயிலை அடுத்து உள்ளன.
வழுவூர் வீரட்டேசுவரரின் திருவருளால் புதிய யானைத் தலை பெற்ற விநாயகர் திருவழுவூரில் தந்தையை வழிபட்டுத் தனிச் சந்நிதிகளிலும் பிரகாரத்திலும் உள்ளார்.
பிள்ளையாரும் முருகனும் வீரட்டேசுவரர் நுழை வாசலில் துவார பாலர்களுடனும் உள்ளனர்.
தெய்வங்களும் தேவர்களும் வானவர்களும் அசுரர்களும் முனிவர்களும் நாகர்களும் அடியார்களும் மற்றும் பலப் பல ஆயிரக் கணக்கானவர்கள் காலந்தோறும் திருவழுவூர் வீரட்டேசுவரரை வழிபட்டுத் தொழுது லிங்கப் பிரதிட்டை செய்து பூசித்ததைக் காட்டும் ஆயிரம் லிங்கம் (சஹஸ்ர லிங்கம்)தனிச் சந்நிதியில் விமானம், நந்தி, பிள்ளையார், தேவியருடன் முருகன் ஆகியவர்களைக் கொண்டு கொடி மரத்திற்கு அருகே கோபுர வாயிலுக்கு இடது புறம் பிரம்மன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் என்ற குளக் கரை அருகே அமைந்துள்ளது.
சுந்தரர் இத்தலத்தில் விரிசடை இல்லாத ஆடல் நாயகனுடன் இருப்பது அவர் நடராசரோடு பெற்ற தெய்வீக அனுபவத்தைக் காட்டுகிறது.
ஆடல் நாயகனுக்கு எதிரே திருமுறைச் சந்நிதி உள்ளது.
கஜசம்ஹார மூர்த்தி சந்நிதி உள்ள மண்டபத்தில் தியாகராசர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
சண்டீசர் சந்நிதியில் இரண்டு சண்டீசர் உள்ளனர்.
யானையுரி யீசன் சந்நிதிக்கு எதிரே பிரகாரத்தில் உள்ள தெய்வீக நால்வருக்கு அருகேயும் சண்டீசர் அமர்ந்துள்ளார்.
முதல் கோபுரத்திற்கும் இரண்டாவது கோபுரத்திற்கும் நடுவே பெரிய குளம் உள்ளதால் குளத்தைச் சுற்றிச் சென்று வீரட்டேசுவரரை அடைய வேண்டும்.
அரச மரத்தடியில் ஐந்து தலை நாகத்துடன் கூடிய குண்டோதரன் வயிற்றில் பூத உருவம் உள்ளது.
வழுவூர் என்ற பெயர் வரக்காரணம்:
திருநாவுக்கரசர் இத் தலத்தை வழுவை வீரட்டம் என்று குறித்துள்ளார்.
வழுத்துதல் என்றால் துதித்தல் என்று பொருள். வழுவுதல் என்றால் நீங்குதல் விடுபடுதல் என்று பொருள்.
யானை வடிவம் கொண்ட அசுரன் ஒருவன் நாள்தோறும் சிவ பூசை செய்து எல்லாம் வல்ல கடவுளை வழுத்திப் பரம்பொருளின் திருவருளால் பிறப்பு இறப்பிலிருந்து வழுவிப் பரமேசுவரனின் திரு மேனியைப் போர்க்கும் பேரின்ப முக்தி பெற்ற திருத்தலம் ஆதலால் இத்தலத்திற்கு வழுவூர் என்று பெயர் வரக்காரணமாயிற்று.
யானையை சம்ஹராம் செய்தவர் என்பதால் இறைவன் “கஜசம்ஹாரமூர்த்தி’ எனப்படுகிறார்.
சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனத்தை இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்படிமச் சிலையின் உருவ அமைப்பை வர்ணித்துக்கொண்டே செல்லலாம்.
தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை வாழ்த்துகின்றனர்.
சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜசம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும்.
இத்தலத்தின் விசேச மூர்த்தியான இந்த கஜசம்கார மூர்த்தி உலோக வார்ப்பு சிற்பம் போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.
ஆலயத்தின் சிறப்புகள்:
சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது வேறு எங்குமில்லாத தனிசிறப்பு.
இந்த பஞ்சபிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கி ஞானம் கிடைக்கும்.
அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும்.
முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும்.
சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் ஒரு யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள்.
கஜ சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.
கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படுகிறது.
48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது.
தீர்த்தங்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை மிகவும் விஷேசமானது.
சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்ததில் விக்கிரமராஜா தோற்றுப்போய் இத்தீர்த்தத்தில் வந்து விழுந்து. தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபட சுவாமி அவருக்கு
அருள் பாலிக்கிறார்.
சனி பகவான் இதற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சுவாமி சனிபகவானின் ஒரு காலை முடமாக்கி விடுகிறார்.
இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலமாகும்.
புராண இதிகாசங்களில் இத்தலம் தாருகாவனம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள்:
மாசிமகம் – யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா – தினமும் இரண்டு வேளை வீதியுலா. 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி. 10ம் நாள் தீர்த்த வாரி இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும்.
மார்கழி – திருவாதிரை – 3 நாட்கள் திருவிழா புரட்டாசி – நவராத்திரி திருவிழா – 10 நாட்கள் திருவிழா கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்,
தினந்தோறும் இரவு கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் பிரதிஷ்டை செய்யபட்டுள்ள யந்திரத்திற்கு பூஜை நடைபெறுகிறது.
அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார்.
ஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கிறது.
கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விஷேச நாட்கள் ஆகும்.
மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கிறது.
இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர்.
நேர்த்தி கடன் விபரங்கள்:
கல்யாணவரம் வேண்டுவோர் சுவாமிக்கு கல்யாண மாலை சாத்துதல்,சங்காபிசேகமும்,
கலசாபிசேகமும் செய்கின்றனர்.
அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
சுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்வதும் அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு அர்ச்சனைசெய்து
வழிபடுவதும் இங்கு விஷேசம்..!
அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளும் நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோஷம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது.
திருமண வரம் , குழந்தை வரம் ஆகியவை வேண்டிக் கொண்டால்
நிச்சயம் நிறைவேறுகிறது.
தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வீக யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.
இத்தலத்தின் முகவரி: அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்,
வழுவூர் – 609 401, நாகப்பட்டினம்
மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் பத்தாவது கிமி யில் வழுவூர் உள்ளது.முக்கியச் சாலையிலிருந்து சிறிது தூரம் உள்ளே செல்ல வேண்டும்
அதனால் இதனை மயிலாடுதுறை- திருவாரூர் வழி செல்வோர் அவசியம் கண்டு அருள் பெறுவீர்களாக!!
மிக மிக முக்கியமான ஒரு தகவல்:
யாருக்கெல்லாம் தியானம் முழு ஈடுபாட்டுடன் கைவரப்பெறவில்லையோ அவர்கள் இந்த ஆலய கஜ சம்ஹார மூர்த்தியின் எதிரில் சில மணி துளிகள் தியானம் செய்தால் அவர்களுக்கு எண்ணச்சிதறல் இல்லாத தியானம் கைகூடும்.
No comments:
Post a Comment