Sunday, April 9, 2023

♥ மேற்கு நோக்கிய சிவ ஆலயங்கள் - 2 ♥♥ அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில் , திருவான்மியூர் , சென்னை ♥

♥   மேற்கு நோக்கிய சிவ   ஆலயங்கள்  - 2   ♥
♥   அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில்  ,  திருவான்மியூர் , சென்னை  ♥
♥  உள்கலந்து  ஏத்தவல்லார்க்கு  அலால் 
     கள்ளம்   உள்ளவழிக் கசிவானவன் 
     வெள்ளமும்  அரவும்  விரவும்  சடை 
     வள்ளலாகிய   வான்மியூர்  ஈசனே  - திருநாவுக்கரசர் 
               ♥  சென்னையில் சிறந்துவிளங்கும் சிவத்தலங்களில் முக்கியமானவை, வடக்கில் திருவொற்றியூர், மத்தியில் திருமயிலை, தெற்கில் திருவான்மியூர் ஆகும் . இதில்    திருமயிலையிலும்,  திருவான்மியூரிலும்  மூலவர்   மேற்கு  நோக்கி  உள்ளனர்.     “அப்பைய” தீட்சிதர் என்ற பக்தர் ஒருவருக்கு காட்சி தருவதற்காக  திருவான்மியூரில்   மூலவர்    திரும்பியதால், இந்த ஆலய சிவபெருமான் மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கிறார்  என  கூறப்படுகிறது..
               ♥  மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற சித்தர்  தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
               ♥  மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.  இங்கு செய்யப்படும் பரிகாரங்கள்,  வேண்டுதல்கள்  வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன.
               ♥  மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாக விளங்குகிறது.
               ♥  திருவான்மியூர்  மருந்தீஸ்வரர் திருஸ்தலம் ,  1,300 ஆண்டுகள்   பழமையான கோவிலாக இது கருதப்படுகிறது. 
               ♥  மார்க்கண்டேயர் சொன்னதன்படி தென்திசை பயணித்த வான்மீகி (வால்மீகி) முனிவருக்கு, கிழக்குக் கடற்கரையோரத்தில், `நான் இங்கே இருக்கிறேன்' என அசரீரி மூலம் ஒலித்து வன்னிமரத்தடியில் ஈசன் உமையம்மையோடு திருக்காட்சி அருளிய தலம் என்பதால் திருவான்மியூர் என்று பெயர்பெற்றது.
               ♥  வான்மீகி முனிவருக்கு   திருக்காட்சி அருளிய சுயம்புலிங்கமே,  இந்த  ஸ்தலத்தில்   மூலவராக  உள்ளார்..  வான்மீக முனிவருக்கு இறைவன் நடனக் காட்சி அருளியத் தலம்
               ♥  பிரம்ம  தேவனால்,   வேத ஆகம விதிமுறைகளின்படி வான்மீகி முனி மூலம்  அமைக்கப்பெற்ற   இந்தத் திருத்தலத்தில் . மாடவீதி, திருத்தேர், உற்சவ விக்கிரகங்கள் ஆகியவற்றை பிரம்மனே    உருவாக்கி, இத்தலத்துக்கான 11 நாள் பங்குனி பிரம்மோற்சவத்தையும் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டார் என  ஸ்தலவரலாறு  கூறுகிறது..
               ♥  ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கிழக்கில் அமைந்துள்ளது. வண்ணம் மிகுந்த சுதை சிற்பங்கள் தாங்கிய ஐந்து நிலைக் கோபுரங்களாய் மேற்குக் கோபுரமும் ரிஷி கோபுரமும் விளங்குகின்றன. பெரிய குளம், கோயிலின் கிழக்கில் அமைந்துள்ளது. கிழக்கு வாயிலுக்கு வெளியே சித்திரைக்குளம் அமைந்துள்ளது.
               ♥  கிழக்கிலிருந்து உள்ளே நுழைய, விஜய கணபதி சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் தனிச்சந்நிதி ஆகியன அமைந்துள்ளன. ஆஞ்சநேயர், கமல விநாயகர், தண்டாயுதபாணி ஆகியோரும் அருளுகின்றனர்.
               ♥  மண்டபத்தில் நாயன்மார் திருவுருவங்கள், 108 சிவலிங்கங்கள் காணப்பெறுகின்றன. சபா மண்டபத்தினுள் தியாகேசர், அம்மன், தனியம்மன் உற்சவமூர்த்திகள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
               ♥  சூலம், உடுக்கை, சர்ப்பம் ஏந்திய காலபைரவர் காட்சி தருகிறார். பஞ்சலிங்கங்கள் நிறுவப்பெற்றுள்ளன. இதில் பெரிய லிங்கம், கேதாரீஸ்வரர். இவரை கேதார கௌரி விரதம் இருக்கும் பெண்கள் வழிபடச் சிறப்பு. திருமால், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், அண்ணாமலையார், துர்கா தேவி ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.
               ♥  வைகாசி வசந்தோற்சவத்தின் 11 நாள்கள்,   பிரதோஷம், கிருத்திகை, பௌர்ணமி, ஐப்பசி அன்னாபிஷேகம், பவித்ரோற்சவ விழா, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை தீபம், ஆருத்ரா விழா, ஆடிப்பூரம், கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம், சிவராத்திரி 4 கால அபிஷேகங்கள் ஆகியவை திருக்கோயிலின் உற்சவச் சிறப்புகள்.
               ♥  வருடம் 365 நாட்களும் இக்கோயிலில் சமய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.  ஆன்மிக நூலகம் உள்ளது.
               ♥  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருத்தலத்தில்  கும்பாபிஷேகம்  40 ஆண்டுகளாக நடைபெறாது இருந்த நிலையில் 1978-ம் ஆண்டு முழுமையான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1979-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து   குடமுழுக்கு விழா 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாளன்று சிறப்பாக நடைபெற்ற நிலையில் 16 ஆண்டுகள் கழித்து   புதுப்பொலிவுடன்  2020-ம் ஆண்டு   பிப்ரவரி 5-ம் தேதி   கும்பாபிஷேக விழா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருத்தலத்தில் கோலாகலமாக  நடத்தப்பட்டது. ..  
               ♥  இறைவன் சிரசில் பொழியும் கங்கையிலிருந்து விழுந்த ஐந்து துளிகள் ஜன்மநாசினி, காமநாசினி, பாபநாசினி, ஞானதாயினி, மோட்சதாயினி என பஞ்ச தீர்த்தங்களாய் இத்தலத்தில் தோன்றின.
               ♥  பஞ்ச தீர்த்தங்களில் சூரியன், பிரம்மன், யமன், இந்திரன், ராமர், சந்திரன் ஆகியோர் நீராடி சிவபூசை செய்து பாவம் நீங்கப் பெற்றதாய் ஸ்தலவரலாறு கூறுகிறது. பஞ்ச தீர்த்தங்களில் பெரிய தெப்பக்குளமான பாபநாசினியும், சித்திரைக்குளமான ஜன்மநாசினியும் மட்டும் தற்போது இருக்கின்றன.
               ♥  கடந்த இருபதாண்டுகளில் திருத்தேர், தங்கரதம், ராஜகோபுரம், தெப்பக்குளங்கள் ஆகியவை திருப்பணிகள் செய்யப்பட்டு அழகாகப் புதுப்பிக்கப்பட்டன. சமய நூலகம், அலுவலகம் புதியதாகக் கட்டப்பட்டன.
               ♥  மருந்தீஸ்வரர் ஸ்தலம், தொண்டை நாட்டில் பாடல்பெற்ற 32 திருத்தலங்களுள் ஒன்று. `விடையார் கொன்றையினாய்' ஞானசம்பந்தர் பதிகம், `விண்ட மாமலர் கொண்டு' நாவுக்கரசர் பதிகம் ஆகியவை இத்தலத்துப் பெருமைகளை எடுத்தியம்புகின்றன.அப்பர், சம்பந்தர் ஆகிய சமயக்குரவர்களும் சேக்கிழார், அருணகிரிநாதர் போன்ற மகான்களும் போற்றிப் பாடிய சிறப்பை பெற்றுள்ளது.   12. சேக்கிழார் திருத்தொண்டர் புராணம்  இந்த  திருத்தலச் சிறப்பை 7 பாடல்களுள் விளம்புகிறது.  இத்தலத்து முருகனை துதித்து அருணகிரிநாதர் பாடிய `குசமாகி யாருமலை' திருப்புகழ் ஆகியவை ஸ்தலப்பதிகங்களாகத் தேவாரத் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இத்தலத்து முருகன் பெருமைகளைப் பாடியுள்ளனர்.
               ♥  இந்த  கோவில்  ஸ்தல  புராணப்படி,   “திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர்”  .வேண்டுபவர்களின் நோய் நொடிகளை நீக்கியும், இங்கு தவமிருந்த பலருக்கு பல சக்திகளையும், முக்தியையும் அளித்துள்ளார்.   
               ♥  கயிலாயத்திலிருந்து தென்திசை வந்த அகத்திய முனிவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அவர் இத்தலத்தில் சிவனை நோக்கி வழிபாடு செய்ய வன்னிமரத்தடியில் உமையோடு இறைவன் தோன்றி அவரது நோய் நீக்கியதோடு உடலில் உண்டாகும் நோய்கள் குறித்தும் அதற்கான மருந்துகளாகும் மூலிகைகள் குறித்தும் உபதேசம் செய்தார். பிறவிப்பிணி தீர்க்கும் ஈசன் உடல்பிணிக்கும் மருந்துரைத்த ஸ்தலம் ஆதலால் இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் என அழைக்கப்பட்டார். 
இங்கேதான் அகத்தியர் வேண்டுகோளுக்கிணங்க வன்னி மரத்தடியில் சிவனார் தமது திருமணக் காட்சியைக் காட்டியருளினார். எனவே, தலவிருட்சமான வன்னிமரம், கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.
               ♥  ஸ்தல புராணங்களின் படி வசிஷ்ட முனிவர் இத்தல சிவபெருமானை பூஜிக்க, இந்திரன் தனது தேவலோக பசுவான காமதேனுவை வசிஷ்ட முனிவருக்கு தந்தான். ஒரு முறை சிவபூஜைக்கு பால் தராமல் போன காமதேனுவை வசிஷ்டர் சபித்து விட்டார். இதனால் தனது சக்திகள் அனைத்தையும் இழந்த காமதேனு, பூலோக பசுவாக மாறியது. வசிஷ்டரிடம் தன் சாபம் போக்குமாறு காமதேனு வேண்ட, இத்தல சிவபெருமானை பூஜித்தால் மீண்டும் இழந்த சக்திகள் அனைத்தையும் பெற முடியும் என வசிஷ்டர் கூறினார். அதன்படியே காமதேனுவும் தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து, வழிபட்டு தனது சக்திகளை மீண்டும் பெற்றது. இதனால் “பால்வண்ணநாதர்” என்ற ஒரு பெயரும் இந்த ஆலய இறைவனுக்கு உண்டு. 
               ♥  இங்கு தவமியற்ற வந்த வால்மீகியை கண்டு மிரண்ட காமதேனு இக்கோவிலின் சிவலிங்கத்தின் மீது குதித்து ஓடியது. அதனால் ஏற்பட்ட காமதேனுவின் கால் குளம்பு அடையாளத்தை இன்றும் சிவலிங்கத்தின் மீது காண முடிவதாக கூறப்படுகிறது. 
               ♥  திருப்பாற்கடலில் தேவர்கள் கடைந்தெடுத்த அமுதத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் மூலவருக்கு அமுதீசர் எனவும் பெயர். நான்கு வேதங்களும் வணங்கித் துதித்துப் பூஜித்ததால் இவரை `வேதபுரீஸ்வரர்' என்றும்   அழைக்கின்றனர்.
               ♥  சோழர்கள், பல்லவர்கள், விஜயநகரப் பேரரசர்கள் எனப் பலரும் இத்திருக்கோயிலுக்குத் தொண்டாற்றி உள்ளனர். திருக்கோயில் வழிபாட்டில் மிகவும் ஈடுபாடுகொண்ட கங்கைகொண்ட சோழன் எனப்படுகிற ராஜேந்திர சோழன். அடிக்கடி இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டுள்ளான். கடும்நோய் நீங்குதல் வேண்டி இத்தலம் வந்து மருந்தீஸ்வரரை வழிபட்டு உடல்நலம் பெற்றுள்ளான்.
               ♥  அம்பாள் திரிபுர சுந்தரி, நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரவார அம்மன் உட்புறப்பாடு நடைபெறுகிறது. தியாகராசர் உலோகத் திருமேனி உற்சவராக விளங்குகிறார். பௌர்ணமி மற்றும் விசேஷ நாள்களில் இங்கு நடைபெறும் தியாகராஜர் திருவீதியுலாவும் அவரது 18 திருநடனக் காட்சிகளும் சிறப்பு.
               ♥   மூலவர் :-  தியாகராஜர் எனவும் அம்பாள் திரிபுரசுந்தரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். “
               ♥  நிறைய பசுக்களை கொண்ட ஒரு பசுமடமும் உள்ளது.இறைவனுக்கு கோபூஜையுடனே மற்ற பூஜைகளும் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் கர்பகிரகத்திற்கு மேலிருக்கும் விமானம் “சதுர்வஸ்தம்” என்ற முறையில் கட்டப்பட்டதாகும். 
               ♥  இங்கு கோவில் கொண்டிருக்கும் மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட பின்பு, பிரசாதமாக தரப்படும் விபூதியை உண்பதால் எப்படிப்பட்ட தீராத வியாதிகளும் குணமாக தொடங்கும் என கூறுகிறார்கள். மேலும் இத்தல விருட்சமான “வன்னி மரத்தை” சுற்றி வந்து வழிபடுவதால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்திக்கான வழிகிடைக்கும் என கூறுகிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் இந்த ஆலயத்தின் இறைவனுக்கும், இறைவிக்கும் புதுவஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
               ♥   “அருள்மிகு மருந்தீஸ்வரர்  திருக்கோவில்”.  சென்னை நகரின் புறநகர் பகுதியான திருவான்மியூரில் அமைந்திருக்கிறது  திருவான்மியூருக்கு செல்ல நகர பேருந்துகளும், புறநகர் ரயில்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. 
♥  கோவில் நடை திறந்திருக்கும் நேரம் : 
               ♥  காலை 6.00 மணி முதல் 12.00 மணிவரை. 
               ♥  மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 
♥  கோவில் முகவரி 
               ♥  அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், 
                    திருவான்மியூர், சென்னை – 600 041 
               ♥  தொலைபேசி எண் 44 – 24410477 44 – 24422688

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...