காளையார் கோயில்.
காளையார் யார் தெரியுமா...சிவம் தான்...சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருச்சுழியலுக்கு வந்திருந்த போது சிவம் அவர் கனவில் கட்டிளங்காளை போல அழகிய வடிவத்துடன் தோன்றி ,யாம் இருப்பது திருகானப்பேர் என்றாராம்.
ஒரு காளை வழி காட்ட சுந்தரர் இத்திருக்கோயில் வந்து சிவத்தை வழிபட்டு ஒரு பதிகம் பாடி அருளினார். திருஞான சம்பந்தர் மூர்த்தி சுவாமிகளும் இத்திருக்கோயில் வந்து பதிகம் பாடி இருக்கிறார்.
திருகானப்பேர் சுந்தரர் வழிபட்ட பின்பு காளையார் கோயில் ஆனது.மிகவும் பழைமையான கோயில்.சங்க இலக்கியங்களில் இத்திருக்கோயில் குறிப்பிடப்பட்டு உள்ளது.புறநானூற்றில், 21ஆம் பாடலில் ஐயூர் மூலங்கிழார், சங்க காலக் கவிஞ்ர், இத்திருக்கோயில் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலத்தில் காளையார் கோயில் என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பரிச்சயம்.அதற்குக் காரணம்.மருது சகோதரர்கள்.
இத்திருக்கோயிலை மருது சகோதரர்கள் தங்கள் உயிரினும மேலாக மதித்து வாழ்ந்தனர்.அனுதினமும் இத்திருக்கோயிலின் மேம்பாட்டின் வளர்ச்சி பற்றியே சிந்தித்து வந்தனர்.மதுரை மீனாட்சி கோயிலின் கோபுரம் மாதிரியே இத்திருக்கோயிலின் கோபுரத்தையும் வடிவமைத்துக் கட்டி வணங்கினார்கள்.
அக்கோபுரத்தின் உச்சியில் நின்றால் 66 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் கோபுரம் தெரியும் என்கிறார்கள்.இக்கோயிலுக்கு என வடிவமைக்கப்பட்ட தேர் பற்றிய கதை மிக பிரசித்தம்.வெள்ளையர்கள் கோயிலை கொள்ளை அடித்து மருது சகோதரர்களையும் கொன்றார்கள்.
ஆனாலும் கோயில் இன்றும் கம்பீரமாக மிக்கப் பொலிவுடன் மிகச்சிறப்பாக இருக்கிறது.
இந்திரனின் யானை ஐராவதம் ஒரு சாபத்தால் காட்டு யானையாக பிறவி எடுத்து இப்பூமிக்கு வந்தது .அது மட்டுமல்ல அதன் மனைவி யானைகளும் உடன் வந்தன.ஐராவதம் தம் சாபம் தீர இத்திருக்கோயிலை சுத்தம் செய்து பராமரித்து வரும் பணியினை மேற்கொண்டது.
சைவத்தில் இல்லறத்தில் உள்ளோர் , சிவபூசை ,கர்ம நிஷ்டைகள் இவைகளை இல்லத்து துணைவியார் துணை இன்றி செய்வது இயலாத காரியம். சைவர்களில் சிலர் அது போன்ற வாய்ப்பு இல்லாத நிலையில் தங்கள் பூசைக் கடமைகள் தவறி விடுவார்கள்..
ஒரு சைவர் சிவ பூசை கர்ம நிஷ்டையாக செய்து வந்தால் அவரது புண்ணியத்தில் சரி சமபங்கு அவர்தம் இல்லக் கிழத்திக்கும் போய்ச் சேரும்.இது நியதி.பெரிய புராணத்தில் பல சம்பவங்கள் இதை உறுதி செய்யும்.
இத்திருக்கோயிலில் ஐராவதம் ஒரு அற்புதமான திருக்குளம் அமைத்து , கோயிலின் வளாகத்தை சுத்தம் செய்யும் பொழுது அதற்கு உறுதுணையாக அதன் மனைவி யானைகள் ( ! ) உடன் இருந்து உதவி செய்ய ...அப்புறம் என்ன ..அத்தனையும் தேவலோகம் சென்றது.
இப்படியாக நான் கதை விடவில்லை.திருஞான சம்பந்தர் இத்திருக்கோயிலின் புராணம் அறிந்து தம் மனக்
கண்ணால் பார்த்துப் பாடி அருளிய பாடல்கள் இதோ:
பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண் உடையரோ வடியரே. ( 3 : 26 : 1 )
பெண் யானைகள் பின்தொடர, பெரிய தும்பிக்கை யுடைய ஆண்யானையானது, விடியற்காலையிலேயே குளத்தில் மூழ்கி, மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளையன்றி, அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது ?
மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே. ( 3 : 26 : 7 )
பெரிய பெண் யானை தன் வலியகையால் அலகிடக் கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது வழிபடுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனை, குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள ஆணவமாகிய நோய் தீர ஞானமாகிய மலர்கொண்டு மனம், வாக்கு, காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும்.
இத்தனை பெருமைகள் கொண்ட இத்திருகோயிலினை தரிசிக்க நம் மனம் ஆசை கொள்ளும் அல்லவா...சுந்தரருக்கும் அப்படி ஒரு பேரவா வந்தது. நாம் புலம்புவோம்..அவரோ சிவத்தின் தோழர்..தேன் தமிழில் பாடுகிறார்.
தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும்
சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்
புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள்
பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமரும்
கொண்ட லெனத்திகழுங் கண்டமு மெண்டோளுங்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே . ( 7 : 84 : 1 )
பொருள்:
" கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்..."
மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவத்தினனாகிய பெருமானை, மேகம்போல விளங்குகின்ற கண்டத்தையும், எட்டுத்தோள்களையும், அழகிய நல்ல சடையின்மேல் உள்ள அணிகளையும் கண்குளிரக் கண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ!
_ கி.காமராஜ்.
No comments:
Post a Comment