சீனாவில் குவான்சவ் நகரத்தில் சிவன் ஆலயம்..!!
சீனா, பர்மா போன்ற நாடுகளில் இந்துக்கள் மற்றும் தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே வர்த்தகம் மற்றும் கலை தொடர்புகளின் காரணமாக அவ்விடங்களில் அதிக அளவில் குடி பெயர்ந்து வாழ்ந்திட ஆரம்பித்தார்கள்.
அவர்களின் ஆன்மீக தேவை மற்றும் கலை கலாச்சார அவசியங்களை முன்னிட்டு அவர்களே அங்கு இந்து ஆலயங்களை எழுப்பினார்கள்.
சீனாவின் யுவான் வம்சத்தின் வழி வந்த குப்ளைக்கான் சீனாவில் சிவன் ஆலயம் ஒன்றை எழுப்பினார்.
இவ்வாலயத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரசியமாக விடயம் என்னவென்றால், இந்த ஆலய கல்வெட்டில் தமிழ் மற்றும் சீன மொழிகள் காணப்படுகின்றன.
இந்த கல்வெட்டின் கடைசி வரியானது சீன மொழியிலேயே இருக்கின்றது. சீன நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான குவான்சவ் சீனாவின் குறிப்பிடும்படியான துறைமுகபட்டினமாக விளங்கிற்று.
இந்த நகரமானது மிகப் பெரிய அளவிலான வணிக மற்றும் கலாச்சார ரீதியான தொடர்புகளை இந்தியாவின் தமிழ் மக்களுடன் பெற்றிருந்தது.
குவான்சவ் நகரத்தின் சிவாலயமானது மங்கோலிய மன்னரான குப்ளைக்கானின் ஆணைப்படி, அவரின் நல்வாழ்வை கருத்தில் கொண்டே எழுப்பபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சேக்கஸாய்கான் என்பது மன்னர் குப்ளைக்கானின் மற்றொரு பெயராக இருந்துள்ளது.
மன்னர் குப்ளைக்கான், அந்த கால கட்டத்தில் மிகுந்த புகழ் அடைந்திருந்த செங்கிஸ்கானின் பேரன் என வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குப்ளைக்கான் தான் பீஜிங் நகரத்தை நிர்மாணித்ததாகவும் பின்னர் அதனை சீன தேசத்தின் தலைநகரமாக அறிவித்தததாகவும் வரலாற்று செய்திகள் மேலும் இயம்புகின்றன.
குவான்சங் சிவாலயம் அமையப் பெற்ற வளாகமானது திருக்காளீஸ்வரம் என்றும் ஆலயத்தில் அருளுகின்ற சிவன் திருக்காளீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த அரிய தகவல்கள் தமிழ்-சீன மொழிகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டில் காணப்படுகின்றது. குவான்சவ்வின் சிவாலயம் மன்னர் குப்ளைக்கானால் 1260-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
காலத்தின் கண்ணாடியாய் விளங்குகின்ற மேலே சொல்லப்பட்ட கல்வெட்டானது இப்போதும் ஆலயத்தில் காணப்படுவது சிறப்பான செய்தியாகும்.
சீன தேசத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில், பன்னிரண்டுக்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் இருந்ததாக நம்பப்படுகின்றது.
துறைமுக நகரமான குவான்சவ்வில் பெரிய அளவிலான தமிழ் வணிக இனம் சாங் மற்றும் யுவாங் வம்ச காலத்தில் வேரூன்றி இருந்ததாக அறியப்படுகின்றது.
குவான்சங் நகரத்திற்கு அருகில் உள்ள செடியன் என்னும் சிறிய கிராமத்தில் ஒரு காலில் மற்றொரு காலை இறுத்திக் கொண்டு நான்கு கைகளுடன் காட்சியளிக்கும் அம்மனின் சிற்பம் காலடியில் ஒரு பூதம் படுத்திருக்கும் நிலையில் அமையப் பெற்றுள்ளது.
ஆயினும் இந்த அம்மன் சீன தேசத்து அம்மன் இல்லை. ஆனால் இந்த பகுதியில் வசிக்கின்ற சீன மக்கள் இந்த அம்மன் கவுன்யின் அம்மன் என்பதாகும் என கருதுகின்றார்கள்.
எது எப்படியாயினும், தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் பண்டைய காலங்களில் வணிக, பண்பாட்டு மற்றும் கலைத்தொடர்புகள் இருந்து வந்துள்ளன என உறுதியாக தெரிகின்றது.
குவான்சவ்வின் கடல் வணிக அருங்காட்சியகத்தை சார்ந்த வாங் என்பவர் ஆறாம் நூற்றாண்டிலேயே குவான்சவ் நகரத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதார ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்கின்றார்.
போதி தர்மர் கூட முதலில் ஒரு பல்லவ அரசராக இருந்தார் என்றும் பின்னர் சீனாவிற்கு இடம் பெயர்ந்தார் என்றும் சொல்லப்படுகின்றது. சோழ அரசர்கள் தென்கிழக்கு ஆசியாவுடனான வர்த்தக உறவுகளை பெருமளவில் கொண்டிருந்த காரணத்தினால் வங்காள விரிகுடா கடல் பகுதியானது கூட சோழர் ஏரி என அழைக்கப்பட்டது.
இந்தியாவின் தமிழ்நாட்டில் பழனியில் நவபாஷாணத்தாலான முருகன் சிலையை நிறுவிய போக சித்தர், அவருடைய குருவின் விருப்பப்படி “சித்த விஞ்ஞான”த்தை பரப்புதல் பொருட்டு சீன தேசத்திற்கு விஜயம் செய்ததாக நம்பப்படுகின்றது.
போக சித்தரின் குருவான காளாங்கி சித்தரும் சீன தேசத்தை சார்ந்தவர் என்றும், ஆனால் அவர் தமிழ்நாட்டில் சித்தியடைந்து பதினெட்டு சித்தர்களில் ஒருவராக குறிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிய வருகின்றது.
தமிழ் மற்றும் சீன மக்களிடையே பண்டைய காலந்தொட்டு பாரம்பரியான வணிக தொடர்புகள் சிறப்புப் பெற்றிருந்ததாலும், இதன் காரணமாக தமிழ் மக்கள் சீனாவிற்கு அதிகளவில் குடிப் பெயர்ந்து வாழ்ந்ததாலும் துறைமுகப்பட்டினமான குவான்சவ்வில் நல்லதொரு சிவாலயம் உருப்பெற்றது.
இது அந்த பகுதியில் வாழுகின்ற இந்து சமயிகளுக்கு ஆன்மீக ரீதியாகவும் பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஒரு வரப்பிரசாதாமாக விளங்குகின்றது என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை
ஓம் நமசிவாய🙏
No comments:
Post a Comment