Monday, April 17, 2023

அனுமன் பராக்கிரமசாலி மட்டும் அல்ல. புத்தி கூர்மையும், சாமர்த்தியமும் உடையவர்

🌹 ஜெய் ஶ்ரீராம்
அனுமான்  தன் வாலை ஆசனமாக்கி ராவணன் முன் அமரும் நிகழ்வு
நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இது ஓர் அழகான நிகழ்வு, 
பொருள் பொதிந்தது. 

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்குச்  செய்யப்படும் பதினாறு வகையான உபசாரங்களில் பெரும்பாலும் முதலாவதாக வருவது 'ஆசனம்'. வந்தவுடன் உட்காரச் சொல்வது. மற்றதெல்லாம் பிறகு தான். 'வாங்க' என்ற சொல்லக் காட்டிலும் 'உட்காருங்க' என்ற சொல் தான் விருந்தினருக்கு ஆசுவாசம் தருகிறது.

சமஸ்கிருதத்தின் உபசாரம் என்ற சொல் அழகானது. உப-சாரம் உப-சரம். உடன் பயணிப்பது. உடன் நகர்வது. 

தூதுவன் என்பவன் ஒரு தனித்துவமான விருந்தினன். அவனுக்கும் அத்தனை  உபசாரங்களும், மரியாதைகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் முதல் மரியாதையே மறுக்கப்படுகிறது. 

உட்காருங்கள்' என்று சொல்வார் இல்லை. அமர்ந்தால் தானே ஆற அமரப் பேச முடியும். நின்று கொண்டு பேசினால் பதற்றம் அதிகரிக்கும், பகைமை அதிகரிக்கும். போர் விஷயங்களுக்கு இது உதவாது. 

குருமார்களுக்குத்  தன்னைக் காட்டிலும் உயர்ந்த ஆசனம் தர வேண்டும்.

தூதுவர்களுக்குச் சரியாசனம் தர வேண்டும். ராவணன் ஒரு நாற்காலியைக் கூட நகர்த்திப் போடுவது இல்லை. 

நீ ஆசனம் தராவிட்டால் என்ன, நானே உருவாக்கிக் கொள்வேன்' என்று தானாகவே ஆசனம் அமைத்துக் கொள்கிறார் அனுமான்.

அனுமானின் கால் வண்ணம் எங்கு தெரிகிறது? ஒரு எம்பு எம்பிக் கடற்கரையில் இருந்து சீறிக் கிளம்புகிறாரே,அப்போது!

கை வண்ணம் எங்கு தெரிகிறது? ஒரே குத்தில் அட்சகுமாரனைக் குத்திக் கொன்று போடுகிறாரே அப்போது. 

வால் வண்ணம் எங்கு தெரிகிறது?எதிரி ஆசனம் அளிக்காவிட்டால் தானே ஆசனம் அமைத்துக் கொள்ளும்  வலிமை.

management ல் இதை 'hanuman seat' என்கிறார்கள். 'எளியவர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதே, அவர்களுக்கு உரிய மரியாதையைச் செய்' என்பது தான் அது.

அவர்களை நீ under-estimate செய்து அவமானப்படுத்தி உசுப்பேற்றி விட்டுவிட்டால் அவர்கள் ஒரு காலப்போக்கில் வளர்ந்து உன்னையே மிஞ்சி விடுவார்கள்.

'Hanuman seat'!

ராவணனும் கோபம் தலைக்கேற 
என்ன செய்கிறான் ?

நீ அமர்ந்திருந்த இந்த ஆசனத்தைக் கொளுத்தி விடுகிறேன் பார் என்று 
வாலில் தீ வைக்கக் கட்டளை இடுகிறான்.

உண்மையில் அனுமானைக் கொன்று போடவே நினைக்கிறான் ராவணன். 
ஆனால் விபீஷணன் தடுக்கிறான். '

அன்று அவர்கள் நம் தங்கையைக் கொல்லவில்லையே, காதையும் மூக்கையும் அரிந்தார்கள், அதே போல இவனது அவயத்தை அறுப்போம், வானரத்துக்குப் பெருமை அதன் வால், அதனால் வாலை ஒட்ட நறுக்கி விடு, வால் இழந்த அவமானம் தாங்காமல் இவன் ஏதோ ஒரு குகையிலோ, பாறை இடுக்கிலோ சென்று ஒளிந்து கொண்டு வாலிழந்து வாழ்விழந்து முடங்கிப் போகட்டும், ராமனிடம் திரும்பிப் போகக் கூடாது' என்கிறான்.

வாலில் தீ வைக்கப் படுகிறது.

வாலில் தீ வைக்கவேண்டும் என்றதும்  அரக்கர்கள் குஷியாகி வாலில் சுற்றுவதற்கு அவரவர்கள் வீட்டில் இருக்கும் கயிறுகளை எல்லாம் கொண்டு வருகிறார்களாம். துணி காயப்போடும் கயிறு, குதிரை கட்டும் கயிறு, ஊஞ்சல் கயிறு இப்படி அத்தனையையும். ஆனால் அவர்கள் கொண்டு வந்த அத்தனை கயிறுகளும் அவர்களுக்கே பாசக் கயிறாக மாறி விட்டன.

எந்தக் கயிறுக்கு இருக்கிறது அனுமனைக் கட்டும் ஆற்றல்? ஒரே ஒரு கயிறுக்குத்  தான் உண்டு. அந்தக் கயிறை எடுத்துக் கொண்டு வர மறந்து விடுகிறார்கள் அரக்கர்கள். 

ராம நாமம் என்னும் கயிறு. நாமக் கயிறு ஒன்று மட்டுமே அவரைக் கட்டும். இந்த ஏமக் கயிறுகள் எம்மாத்திரம்?

தீ குளிரட்டும் என்று சீதை வேண்டிக் கொள்கிறாள். முனிவர்களின் வேள்வித்தீ குளிர்கிறது. சிவபெருமான் கை நெருப்பு குளிர்கிறது. ஏன், அவன் நெருப்புக் கண்ணும் குளிர்கிறது. சில நேரங்களில் பனிக்கட்டி சுட்டு விடுகிறது, நெருப்பு குளிர்ந்து விடுகிறது.வாலில் இட்ட தீ வாலறிவனைச் சுடுவதில்லை. வீணர்கள் வாழும் நகரைச் சுட்டு விடுகிறது.

ராமரிடம் என்றால் அவரது இரு கால்களை மட்டுமே நம்மால் பற்ற முடியும். அனுமனிடம் கால்கள் அன்றி ஒரு வாலும் இருக்கிறது, அதிகமாக. வாலையும் பற்றிக் கொள்ளலாம். 

வானரங்களுக்கு ஏன் வால் இருக்கிறது என்று பரிணாமம் கணிக்கிறது. extra grip கிற்காக. மரங்களில் இருந்து கீழே விழ நேர்ந்தால் சுற்றிக் கொள்ள ஒரு support-டிற்காக. 

அனால் அனுமனிடம் வால் இருப்பது அவர் grip-கிற்காக அல்ல. நம் grip கிற்காக. நம் பிடிமானத்துக்காக. சில நேரங்களில் கால் காப்பாறா விட்டாலும் வால் காப்பாற்றும். 

அந்த வாலில் ஜீவாத்துமாக்கள் ஒவ்வொருவரையும் கோர்த்துக் கொண்டு அப்படியே அலேக்காகத் தூக்கி வைகுண்டத்துக்குக் கொண்டு சேர்ப்பார் அனுமன் என்று நம்பப் படுகிறது. 

அனுமன் பராக்கிரமசாலி மட்டும் அல்ல. புத்தி கூர்மையும், சாமர்த்தியமும் உடையவர்.

சீதையை தரிசித்து விட்டு ஸ்ரீராமரிடம் வந்தவர், கண்டேன் சீதையை என்று 
ஸ்ரீராமரிடம் கூறுகிறார்.

காரணம் ராம பெருமான் இருந்த அதிதுயர நிலையை கண்டு, சீதையை கண்டேன் என்று கூறி தாமதிப்பதை விட கண்டேன் சீதையை என்று கூறி ஸ்ரீ ராமரை ஆறுதல் செய்தார்.

அர்ஜுனன் தேரிலும் "அனுமன் " கொடியே பறந்தது.


No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...