*ஸ்ரீராமஜெயம்* :
*சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுகிறது*🌹.
கோமதி அம்மன் ஊசிமுனையில் ஒற்றை காலில் தவம் இருக்கிறாள் என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. யாருக்காக இந்த தவம் இத்தனை பக்தியோடுஅம்மன் தவம் இருப்பதே அண்ணன் நாராயணரும் கணவர் சங்கரரும் ஒருவரே என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காகத்தான்.
சங்கரநாராயணர் திருக்கோவில்:
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கர நாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் தபசு விழா கொண்டாடப்படுகிறது.
சங்கரநாராயணர் கோவிலுக்கு வருவோர் தங்கம், பித்தளை, வெண்கல சாமான்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
நாகங்களுக்குள் சண்டை..
சங்கன் பதுமன் என்ற நாக வம்சத்து அரசர்களுக்கு இடையே ஒருபோட்டி இருந்தது. சங்கன் சிவனை வணங்குபவர். பதுமன் நாராயணரை வணங்குபவர். சிவன்தான் பெரியவர் என்று சங்கன் சொல்ல, இல்லை நாராயணர் தான் பெரியவர் என்று பதுமன் சொல்ல இருவருக்குமே சண்டை வந்தது.
அன்னையின் கருத்து:
நாமாக ஏன் சண்டை போட வேண்டும் அன்னை பார்வதியிடமே கேட்டு விடுவோம் என்று சென்று பஞ்சாயத்து வைத்தனர். அன்னை என்ன சொல்லுவாள் யாருக்கு ஆதரவாக கருத்து கூறுவாள். அன்னைக்கு தெரியாதா இருவருமே ஒருவர்தான் என்று. நேராக கணவனிடம் போய் சொன்னாள் அன்னை.
தவம் இருக்க வேண்டும்:
ஹரியாகிய அண்ணனும், ஹரனாகிய நீங்க ளும் ஒருவர்தான் என்று மக்களுக்கு உணர்த்துங்கள் என்று சொல்லவே அதற்கு சிவனோ அவ்வளவு சீக்கிரம் நான் காட் சி அளித்து விடுவேனா! நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னார் சிவன்.
புன்னை வனத்தில் தவம்:
தவம் இருந்தால்தான் வரம் கிடைக்கும் என்று சிவன் சொல்லவே அதைக் கேட்ட அன்னை நான் தவம் இருக்க எங்கு செல்வது என்று கேட்டார். அதற்கு சிவனோ புன்னை மரங்கள் நிரம்பிய வனத்தில் முனிவர்கள் புன்னை மரங்கள் வடிவில் என்னை நோக்கி தவம் இருக்கிறார்கள் அங்கு சென்று நீ தவம் இரு. ஆடி மாத பௌர்ணமி நாளில் நான் வந்து காட்சி தருகிறேன் என்று சொன்னார் சிவபெருமான்.
ஒற்றைக்காலில் தவமிருந்த கோமதி:
குழந்தைகளுக்கு தெளிவு வர நான் தவமிருப்பதுதானே நியாயம் என்று சொல்லி விட்டு கிளம்பினார் அன்னை. அன்னை கிளம்பிய உடன் கூடவே தோழியர்களும் கிளம்பினார்கள்.
அவர்கள் பசுக்கூட்டங்களாக அன்னையுடன் தவம் இருக்க, அன்னை ஆவுடை நாயகியாக ஒற்றைக்காலில் ஊசிமுனையில் இறைவனை நோக்கி தவம் இருந்தாள். இன்றைய சங்கரன் கோவிலில் அன்னை இருந்த தவம் நீடித்தது. பசுக்களுடன் அன்னை தவம் இருந்ததால் கோமதி என்று அழைக்கப்பட்டார்.
தவத்தில் மகிழ்ந்த சிவன்:
கோ என்றால் பசுக்கள். மதி என்றால் மதி போன்ற முகம் கொண்டவர் என்று பொருள். அன்னையின் தீவிர தவத்திற்கு வரம் கிடைக்கும் நாளும் வந்தது. ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்தில் வானத்தில் நிலவு ஒளி வீச ஊசி முனையில் தவமிருந்த அன்னையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் சங்கரநாராயணராக, அன்னை பார்வதி மட்டுமல்லாது சகல பக்தர்களுக்கும் காட்சி அளித்தார்.
ஹரிஹரனாக காட்சி அளித்த இறைவன்:
ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம். ஒரு புறம் கங்கை சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறுபுறம் சங்கு. ஒருபுறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறுபுறம் துளசி மாலை. ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான். மறுபுறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்க ஹரிஹரனாய் காட்சி தந்தார் இறைவன்.
கோமதி சங்கரன்:
ஹரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற பார்வதியிடம் வேண் டிய வரங்களைக் கேள் என்று சொன்னார் சிவபெருமான். 'இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திருஉருவைக் கொண்டு என்னுடன் தங்கவேண்டும் என அம் பாள் வேண்ட, ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியருடன் எழுந்தருளி, அங்கேயே கோமதி சங்கரனாய் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரசாதம்:
சங்கரன்கோவில் பாம்புகள் சங்கன், பதுமன் வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். சரும நோய்கள் நீங்கும்.
மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டி கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும்.
பக்தர்களின் ஆடிச்சுற்று:
தவமிருக்கும் அன்னைக்காக பக்தர்கள் ஆடிச் சுற்று சுற்றுகின்றனர். தவக்கால த்தில் கோமதி அம்மனை சுற்றினால் தங்களது வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கொடியேற்றம் துவங்கியதிலிருந்து தினமும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் அம்மனின் அருள் வேண்டி காலை, மாலை வேளைகளில் கோயில் பிரகாரத்தில் சுற்றி வருகின்றனர்.
கோமதி அம்மனுக்காக விழா:
சங்கரன்கோவில் அரியும் ஹரனும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி கொடுத்த தலம். மக்கள் அனைவரும் இறைவனை வழிபட வேண்டும் என்பதற் காகவே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார் இறைவன். மக்களுக்காக அன்னையே ஊசி முனையில் தவம் இருந்தார்.
சங்கரன் கோவிலில் அன்னை கோமதி யை பிரதானப்படுத்தி நடக்கும் திருவிழா இது. ஆடித்தபசு நாளில் அம்பிகையையும் சங்கரர் நாராயணரையும் வழிபட நன்மைகள் நடக்கும்.🙏🌹
No comments:
Post a Comment