Sunday, July 23, 2023

*முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாக சுவாமிமலை திகழ்கின்றது.

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,  சுவாமிமலை, கும்பகோணம் வட்டம், தஞ்சைமாவட்டம்.       
*முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாக சுவாமிமலை திகழ்கின்றது.  

*இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவர சுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். 

*இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம். 

*இறைவன் இங்கு சுவாமி நாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது.     

*முருகப்பெருமான் இக்கோயிலில் 'தகப்பன் சுவாமி' எனப் புகழ் பெற்று விளங்குகிறார்.  

*படைப்புக் கடவுள் பிரம்மாவிற்கு,  தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால்  ஆணவம் கொண்டார். 
அதனை அடக்க மனம் கொண்டார் முருகப்பெருமான்.
கைலாயத்தில் சிவனை தரிசிக்க பிரம்மன் வர நேர்ந்தது. அப்போது  பிரம்மன் முருகனை பாலன்தானே என அலட்சியமாக நினைத்தார். முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு கேட்டார். பிரம்மனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் வெகுண்ட முருகன், பிரம்மன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார். இதனால் படைப்பு தொழில் பாதிப்படைந்தது. 

*ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொள்ள, பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். 

*பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்" என்றார் முருகன்.

*அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். 

*அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். 
அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்படுகிறார்.           

*மலையே இல்லாத சோழ தேசத்தில், கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது.  

*ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. 

*இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும்.   

*மலைக்கோயிலின் கீழ் தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சந்நிதிகளும், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி,  தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் உள்ளன.  

*சுவாமிநாதனாக விளங்கும் முருகப்பெருமானைக்காண  நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 

*இந்த அறுபது படிகளும் அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

*மேல்தளத்தில் முதலில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார்.       

*இத்தலத்தில் முருகப்பெருமானை தேவர்கள் புடைசூழ வழிபட்ட தேவேந்திரன் தனது நினைவாக ஐராவதத்தினை (வெள்ளை யனை) முருகப்பெருமானுக்கு வழங்கியதால் மூலவருக்கு முன், இன்றும் ஐராவதம் உள்ளது. (முருகன் திருக்கோவில்களில் சன்னதி முன் மயில் காணப்படும்). 

*கருவறையில் ஞானாசிரியராகிய சுவாமிநாதன் கம்பீரமாக நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும், ருத்திராட்சமும் விளங்க கருணா மூர்த்தியாக காட்சி தருகிறார். 

*முருகப்பெருமான் பாணலிங்கமாகவும், அவர் நின்று இருக்கும் பீடம் ஆவுடையாராகவும் கருதப்படுகிறது. இது முருகனும் சிவனும் வெவ்வேறு அல்ல என்பதை குறிப்பதாக உள்ளது.

*முருகப்பெருமானின்முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதைக் கண்குளிரக் காணலாம். இவரை வணங்கினால் ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். 

*சுவாமிமலை திருத்தலம் தஞ்சாவூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.

🙏 சிவாயநம

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...