Friday, July 21, 2023

திருவில்லிபுத்தூர் ஆலயத்திற்கு தேர் செய்ய உத்தரவிட்ட ஆண்டாள்*🌹

*ஸ்ரீராமஜெயம்*

*திருவில்லிபுத்தூர் ஆலயத்திற்கு தேர் செய்ய உத்தரவிட்ட ஆண்டாள்*🌹
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மங்களாசாசனம் பெற்ற கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். இங்குள்ள மூலவர் வடபத்ரசயனர் (ரெங்கமன்னார்). இவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஒரு சேர காட்சி அளிப்பது இந்த தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் ஆண்டாள் பிறந்த ஆடிப்பூர திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழா 9 நாட்கள் நடைபெறும். 9-ம் நாள் காலையில் தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் இரவு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

ஆண்டாள் கோவில் எந்த அளவிற்கு பிரசித்தி பெற்றதோ, அதே அளவிற்கு இங்குள்ள தேருக்கும் சிறப்புகள் பல உண்டு.

இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேரோட்ட திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோவிலில் தேரோட்டம் நடைபெற்று உள்ளது. ஆண்டாள் கோவில் தேர், தமிழகத்தின் 2-வது பெரிய தேர் ஆகும்.

பழங்காலத்தில் இருந்த தேர் சிதிலமடைந்த காரணத்தால், தற்போதுள்ள புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.

திருவரங்கத்தில் ஸ்ரீரெங்க நாராயணனார் என்ற ஜீயர் இருந்தார். அவருடைய கனவில் ஆண்டாள் தோன்றி, தனக்கு தேர் செய்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜீயர், "நானே தினமும் மண் பாத்திரத்தில் சாப்பாடு வாங்கி உணவு அருந்தி வருகிறேன். என்னால் எப்படி தேர் செய்ய முடியும். அந்த அளவிற்கு என்னிடம் பொருட்செல்வம் இல்லை" என்றார்.

அதற்கு ஆண்டாள், "உனக்கு வேண்டிய அத்தனையும் நான் தருகிறேன்" என கூறி விட்டு மறைந்தார்.

மறுநாள் காலையில் திருவரங்கம் ஜீயருக்கு, பல்லக்கில் ஒரு ஓலை வருகிறது. அந்த ஓலையில் 'வானமாமலையில் பட்டம் ஏற்றுக்கொள்ள வரவும்' என கூறப்பட்டு இருந்தது. உடனே அந்த ஜீயர் ஸ்ரீரெங்க பெருமாளிடம் போய் "நான் பட்டம் ஏற்றுக்கொள்ளலாமா?" என உத்தரவு கேட்கிறார். பெருமாளும் அதற்கு இசைவு தெரிவித்ததால், ஜீயர் அந்த பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவர் வானமாமலையில் ஜீயராக பட்டம் ஏற்க பல்லக்கில் செல்கிறார். அங்கு மொத்தம் 30 பட்டங்கள் உண்டு. ஒவ்வொரு பட்டத்திற்கும் ஒரு பெயர் சூட்டப்படும். அதன்படி இவர் பட்டம் ஏற்ற பிறகு 'பட்டார்பிரான் ஜீயர்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பட்டார்பிரான் என்பது பெரியாழ்வாரின் நாமம் ஆகும். அவர் பட்டம் ஏற்ற மறுநாள் பெரிய சூறாவளி காற்றடித்து, தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் தேக்கு மரங்கள் சாய்ந்தன. புதிய ஜீயர் பட்டம் ஏற்ற பிறகு இவ்வாறு அசம்பாவிதமாக மரங்கள் சாய்ந்து விழுகிறதே என ஊர்மக்கள் வருந்தினர்.

ஜீயரும் மனம் வருந்தியபடி பெருமாளிடம் சென்று இதுகுறித்து சொல்லி வழிபட்டார். அன்றைய தினம் இரவு ஆண்டாள் கனவில் தோன்றி, 'சாய்ந்த தேக்கு மரங்களை எல்லாம் சேர்த்து எனக்கு தேர் செய்ய வேண்டும்' எனவும், 'அதற்காகத்தான் நான் உனக்கு பட்டம் கொடுத்து உள்ளேன்' எனவும் கூறினார்.

ஆண்டாளின் உத்தரவுப்படி அந்த தேக்கு மரங்கள் அனைத்தும் யானைகள் மூலமாக திருவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு இந்த தேர் வடிவமைக்கப்பட்டது. 9 சக்கரங்களுடன் ஜீயர் தேரை வடிவமைத்தார். பின்னர் நாளடைவில் சக்கரம் முறிய ஆரம்பித்தது. ஆதலால் தேர் நிலைக்கு வர 6 மாதம் முதல் 8 மாதம் வரை ஆனது. பின்னர் 1986-ம் ஆண்டு இந்த தேருக்கு 4 பக்கமும் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு சக்கரமும் 400 டன் எடை கொண்டது. இந்த சக்கரம் பொருத்திய பிறகு ஒரு வாரத்திற்குள் தேர் நிலைக்கு வந்தது. பின்னர் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தி, புல்டோசர் எந்திரம் மூலம் தள்ளப்பட்டு, தற்போது தேர் ஒரே நாளில் நிலைக்கு வந்து விடுகிறது.

தேரின் சிறப்புகள்

* ஆண்டாள் கோவில் தேரில் ராமாயணம், மகாபாரதம் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு, 64 கலைகள் குறித்த சிற்பங்கள் அனைத்தும் இந்தத் தேரில் செதுக்கப்பட்டுள்ளன.

* பொதுவாக அனைத்து கோவில்களிலும் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக தேர் இருக்கும். ஆனால் ஆண்டாள் கோவிலில் பெருமாளும், அம்பாளும் ஒரு சேர மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இந்த கோவிலில் ஒரே தேரில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் எழுந் தருளுகின்றனர். இது வேறு எங்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு ஆகும்.

* ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த ஆடிப்பூர நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறும். இதற்காக வைகாசி மாதம் தேரை சரி செய்யும் பணி தொடங்கி விடும். இதையடுத்து அலங்கார பணி ஆடி மாதம் வரை நடைபெறும்.

* 1970-1980-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒரு முறை ஆடி மாதம் தேரோட்டம் தொடங்கி ஐப்பசி மாதம் நிறைவடைந்துள்ளது. சுமாா் 4 மாதங்கள் கழித்து தேர் நிலைக்கு வந்துள்ளது. அந்த 4 மாத காலமும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் இருந்ததாம்.🙏🌹

No comments:

Post a Comment

Followers

மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்.

*மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்* சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும்,...