பக்தியால் சாய்ந்து
நிமிர்ந்த சிவலிங்கம்
__________________________
திருப்பனந்தாள் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருணஜடேஸ்வரர் என்னும் செஞ்சடையப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் சக்தியாக பெரியநாயகி அம்மன் அருள்பாலிக்கிறாள்.
இந்த அம்மனுக்கு சிவபெருமான் ஞானோபதேசம் செய்த தலம் . ஆலயத்தின் மேற்கு நோக்கிய ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுரம், ஈசனை தரிசிக்க நம்மை சுண்டி இழுக்கிறது. கருவறையில் சுயம்புவாக தோன்றிய ஈசன், கம்பீரமாய் காட்சியளிக்கிறார்.
சாய்ந்த லிங்கம்
____________________
தாடகை (ராமாயணத்தில் வருபவள் அல்ல) என்ற பெண், புத்திர பாக்கியம் வேண்டி இத்தல ஈசனை தினமும் மாலை சூட்டி வேண்டி வந்தாள். அன்றும் அவ்வாறு தான் சிவலிங்கத்துக்கு மாலை சாத்தும் பணியை செய்வதற்காக கோவிலுக்கு வந்திருந்தாள். மாலையை எடுத்து சிவலிங்கத்துக்கு சூடப்போகும்போது, எதிர்பாராத விதமாக தாடகையின் இடுப்பில் இருந்து சேலை நழுவியது.
அதனை இரு கைகளாலும் பற்றிக்கொண்டே, சிவலிங்கத்துக்கு மாலை சூட்ட முயன்றாள்.ஆனால் முடியவில்லை.
சேலையைப் பற்றியபடியே கையை உயர்த்தி, சிவலிங்கத்திற்கு மாலை சூட்ட இயலவில்லை. இதனால் தாடகை பெரும் வருத்தம் கொண்டாள். அவளுக்காக இரங்கிய ஈசன், தனது சிவலிங்க மேனியை சிறிது சாய்த்து அவளது மாலையை ஏற்றுக்கொண்டார். இதனால் மனம் மகிழ்ந்து போன தாடகை, சிவபெருமானை துதித்து வழிபட்டு விட்டு அங்கிருந்து சென்றாள். அதன்பின்னரும் சிவலிங்கம் சாய்ந்தே இருந்தது.
குங்குலியக் கலய நாயனார்
___________________________
ஒரு நாள் இவ்வாலயத்தில் இறைவனை தரிசனம் செய்ய வந்த சோழ மன்னன், சிவலிங்கம் சாய்ந்திருப்பதைக் கண்டு அதனை நிமிர்த்த முயன்றான். தனது படை வீரர்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கொண்டு சாய்ந்திருந்த சிவலிங்கத்தைக் கட்டி இழுத்துப் பார்த்தும், அது சற்று கூட அசைந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் திருக்கடையூரில் அவதரித்த, 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக் கலய நாயனார் திருப்பனந்தாள் வந்து சேர்ந்தார். இறைவனை தரிசிப்பதற்காக கருவறைக்கு சென்ற நாயனாருக்கு, சிவலிங்கம் தலை சாய்ந்திருப்பதைக் கண்டு கலக்கமுற்றார். பின்னர் சாய்ந்திருந்த சிவலிங்கத்தை தனது கழுத்தில் ஒரு சுருக்குக் கயிற்றை கட்டிக் கொண்டு, அந்த கயிற்றின் மறு முனையில் சிவலிங்கத்தைக் கட்டி நிமிர்த்த முயன்றார். முதலில் சிவலிங்கம் நிமிரவில்லை.
பக்திக்காக நிமிர்ந்தது.
___________________________
ஆனால் குங்குலியக் கலய நாயனாரின் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கு இறுகிக் கொண்டே வந்தது. சிவலிங்கம் நிமிரவில்லை என்றால் கயிறு இறுகி, நாயனார் உயிர் துறப்பது நிச்சயம் என்ற நிலை வந்து விட்டது. குங்குலியக் கலய நாயனார் விடவில்லை. சிவாயநம என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே தன் பலம் கொண்ட மட்டும், அந்த சிவலிங்கத்தை கயிற்றால் கட்டி இழுத்தார். என்ன ஆச்சரியம்! அதுவரை நிமிராத சிவலிங்கம், நிமிர்ந்தது நாயனாரின் பலத்துக்காக, சிவலிங்கம் நிமிர்ந்ததா? இல்லை அவரது பக்தியால் அல்லவா! நேர் நோக்கி நின்றார் அந்த ஈசன்...
இந்த சம்பவம் நடந்தது ஒரு சிவராத்திரி நாளில் என்று கூறப்படுகிறது. தாடகைக்காக ஈசன், சிவலிங்கத்தை சாய்த்துக் கொடுத்ததும்,
குங்குலியக் கலய நாயனாருக்காக சாய்ந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தியதுமாகிய சிற்பங்கள் ஆலயத்தின் பதினாறு கால் மண்டபத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் உள்ள மேற்கு கோபுரத்தின் தெற்கே, குங்குலியக் கலய நாயனாரின் சன்னிதி அமைந்துள்ளது.
ஒரு முறை பசியோடு இத்தலத்திற்கு வந்த காளமேகப் புலவருக்கு ஈசன், சிவாச்சாரியார் வடிவில் வந்து அன்னம் அளித்துப் பசி ஆற்றியுள்ளார். இதனை கவி காளமேகம் தனது பாடலில் போற்றிக் கூறியுள்ளார். எனவே இத்தல ஈசனை வழிபட்டால் வறுமை, பஞ்சம் அகலும்.நம் வாழ்வில் அன்னத்திற்கு குறை வராது.
பொய்யால் வந்த பாவம்
-----------------------------------------------
முன்காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது... அப்போது சிவபெருமான் "எனது அடி முடியை யார் அறிகிறார்களோ, அவர்களே பெரியவர்" என்று கூறினார். ஈசனின் அடிமுடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் புறப்பட்டனர். இருவராலும் சிவபெருமானின் சிரசையோ, பாதத்தையோ காண முடியவில்லை. லிங்கோத்பவராய் திருவண்ணா மலையில் தனது அடி முடி தெரியா வண்ணம் சிவராத்திரிப் பொழுதில் நள்ளிரவு 12 மணி அளவில் ஜோதி வடிவில் காட்சியளித்தார் சிவபெருமான்.அதுவே லிங்கோத்பவ காலம் (இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை) எனப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், இந்த லிங்கோத்பவர் காலத்தில் கண்டிப்பாக சிவாலயங்களில் வழிபாடு செய்ய வேண்டும்.
மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால் பிரம்மதேவர் தாழம்பூவை பொய் சாட்சி கூறவைத்து பொய்யுரைத்தார். இதனால் கோபமுற்ற ஈசன், பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும், தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்றும் சபித்தார்.
பிரம்ம தீர்த்தம்
__________________
பிரம்மதேவர் தன் தவறை உணர்ந்து ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். "பொய் சொன்ன பெரும் சாபம் தொலைய வேண்டும் என்றால் திருப்பனந்தாள் சென்று, அத்தல பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்" என்று வழி கூறினார்.பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்ற குற்றங்களும் அவரை விட்டு அகன்றன. அகமகிழ்ந்த பிரம்மதேவர், இத்தல அருணஜடேஸ்வரருக்கு, சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தி இன்புற்றார். இன்னும் ஒவ்வொரு வருடமும் இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவை பிரம்மதேவரே முன்னின்று நடத்துவதாக ஐதீகம் கூறப்படுகிறது.
பிரம்மதேவர் நீராடி சாப விமோசனம் பெற்ற பொய்கை தீர்த்தம், தற்போது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் ‘பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி’ பொய்கைக் குளத்தில் நடக்கிறது. தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதற்கும் பாவம் உண்டானது. திருப்பனந்தாளில் ஈசன் தாழம்பூவுக்கும் சாப விமோசனம் கொடுத்தார். சிவராத்திரியின் மூன்றாம் ஜாம பூஜையில் மட்டும் ஏற்றுக்கொள்வதாக சிவபெருமான், தாழம்பூவுக்கு விமோசனம் அளித்தார்.
பனை மரங்கள்
___________________
இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கலாம். இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார். இங்கு வழிபட்டால் சந்திர தோஷங்கள் அகலும். இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
தல மரமாக பனை உள்ளது. பிரகாரத்தில் இரண்டு ஆண் பனை மரங்கள் உள்ளன.
கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் சோழபுரத்துக்கும், அணைக்கரைக்கும் இடையில் திருப்பனந்தாள் உள்ளது. ஆடுதுறையில் இருந்து வடக்கே திருமங்கலக்குடி வழியாக 9 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் தலம் அமைந்துள்ளது.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
No comments:
Post a Comment