*ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்? என்பது பற்றிய பகிர்வுகள்*
ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அதே சமயம் ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. ஏன் இந்த முரண்பாடு? அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக பார்க்கலாம்.
“பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாளிலேயே “உஷக்காலம்’ என்று கூறப்படும் காலைப் பொழுது ஆரம்பம். அதாவது சூரிய உதயம் முதல் பகல் பன்னிரண்டு மணி வரை “பூர்வாங்கம்’ எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல் (உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு.
“பூர்வாங்கம்’ என்பது ஏற்றத்தைக் குறிக்கும். “அபராணம்’ என்பது இறக்கத்தைக் குறிக்கும். இதேபோலத்தான், ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி மாத முடிவு வரை “உத்தராயணம்’ என்றும், ஆடிமாதப் பிறப்பு முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்’ என்றும் கூறப்படுகிறது. சூரியனின் சக்தியானது உத்தராயணத்தில் “பாசிடிவ் சார்ஜ்’ஜினைத் தருகிறது. தாமதகுணமான “நெகடிவ் சார்ஜி’ னை தட்சிணாயனத்தில் கொடுக்கிறது.
இது ஆடி மாதப் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. ஆடி மாதம் அந்தக் காலத்தில் மிக முக்கியமான மாதமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.
ஆடியில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் ஒருவருக்கு, பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும். அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் வர வாய்ப்பு இருக்கும். அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.
அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம்.
யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.
ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.
அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் பகவத் தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல சம்பத்துகளும் சேரும்.
No comments:
Post a Comment