Sunday, September 24, 2023

ஏனாதிநாத நாயனார்‌

ஏனாதிநாத நாயனார்‌
சோழநாட்டிலுள்ள எயினனூரில்‌ ஈழகுலத்தில்‌ பிறந்தவர்‌ ஏனாதிநாத நாயனார்‌ ஆவார்‌. சிறந்த சிவபக்தராய்‌ விளங்கிய இவர்‌, அரச குலத்தவருக்கு வாள்வித்தைப்‌ பயிற்சி அளித்து வந்தார்‌. அதில்‌ கிடைக்கும்‌ வருமானத்தைக்‌ கொண்டு சிவனடியார்களுக்குத்‌ திருத்தொண்டு புரிந்து வந்தார்‌.

ஏனாதிநாதரின்‌ புகழ்‌ எங்கும்‌ பரவியது கண்டு அவ்வூரிலுள்ள அதிசூரன்‌ என்பவன்‌ ஏனாதியார்‌ மீது பொறாமை கொண்டான்‌. அதிசூரனும்‌ வாள்‌ வித்தையே கற்பித்து வந்தான்‌.

ஒருநாள்‌ தன்‌ மாணவர்களுடன்‌ புறப்பட்டு வந்த அதிசூரன்‌, ஏனாதிநாதரைப்‌ போருக்கு அழைத்தான்‌. ஏனாதிநாதரும்‌ தன்‌ மாணவர்களுடன்‌ போருக்குக்‌ கிளம்பி வந்தார்‌. அதிசூரன்‌ போரில்‌ தோற்றோடினான்‌.

அன்றிரவு அதிசூரனுக்கு உறக்கம்‌ வராது தவித்தான்‌. ‘ஏனாதிநாதரை போரில்‌ வெல்ல முடியாது, வஞ்சகத்தால்‌ தான்‌ வெல்ல முடியும்‌! என்று முடிவெடுத்தான்‌. மறுநாள்‌ காலையில்‌ ஓர்‌ ஒற்றனை அனுப்பினான். அவனிடம்‌, “ஏனாதிநாதரும்‌ நானும்‌ தனித்தனியாய்‌ப் போரிட வேண்டும்‌. இப்போரில்‌ அவர்‌ என்னை வெல்ல முடியுமோ?” என்று கேட்டு வரவேண்டும்‌ என்று கூறினான்‌. ஒற்றன்‌ அவ்வாறு போய்‌ கேட்க, ஏனாதிநாதரும்‌ உடன்‌பட்டார்‌.

ஏனாதியாரின்‌ அடியவர்‌ பக்தியை அறிந்த அதிசூரன்‌, தன்‌ நெற்றியில்‌ திருநீற்றைப்‌ பூசிக்‌ கொண்டான்‌. தன்‌முகத்தைக்‌ கேடயத்தால்‌ மறைத்தவாறு, வாளேந்தி போர்க்களம்‌ புறப்பட்டான்‌. ஏனாதியாரின்‌ முன்வந்து நின்றான்‌. அருகில்‌ வந்ததும்‌ தன்‌ கேடயத்தை அகற்றினான்‌.

அதிசூரனனின்‌ நெற்றியில்‌ திருநீற்றைக்‌ கண்ட ஏனாதிநாதருக்கு அதிசூரனும்‌ அடியவராகவேத்‌ தெரிந்‌தான்‌. உடனே அவர்தன்‌ கையிலுள்ள வாளை தரையில்‌ போட்டார்‌. அதிசூரனை வணங்கினார்‌. இதுதான்‌ சமயம்‌ என்று அதிசூரன்‌ வாளை வீசி ஏனாதியார்‌ முன்‌ பாய்ந்தான்‌.

ஏனாதியாரின்‌ மனதில்‌ அக்கணமே ஓர்‌ எண்ணம்‌ தோன்றியது. ஆயுதமின்றி நிற்கும்‌ தன்னை அதிசூரன்‌ கொன்றால்‌, ‘நிராயுதபாணியைக்‌ கொன்றவன்‌’ என்ற அவப்பெயர்‌ அவனுக்கு உண்டாகுமே! என்று எண்ணிய ஏனாதிநாதர்‌ தன்‌ வாளைக்‌ கையிலெடுத்தார்‌. எனினும்‌ திருநீறு அணிந்தவனுடன்‌ போர்‌ புரிய அவர்‌ மனம்‌ ஒப்பவில்லை. ஏதோ பெயரளவிற்கு அதிசூரனோடு போர்‌ புரிவதுபோல்‌ நடித்த ஏனாதிநாதரை, சீற்றமாய்‌ பாய்ந்த அதிசூரன்‌ வாளால்‌ வெட்டிச்‌ சாய்த்தான்‌.

ஏனாதிநாதரின்‌ அடியவர்‌ பக்தியை மெச்சிய சிவபெருமான்‌, அக்கணமே அவருக்குத்‌ இருக்காட்சி அருளினார்‌. ஏனாதிநாத நாயனாரை சிவபதம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...