சித்தர்கள் வழிபட்ட சனீஸ்வர தீபம்.
சனீஸ்வரர் நவகிரகங்களில் ஒருவர். இவருக்கு மந்தன் என்றும் சனைச்சரன் என்றும் பெயர்கள் உண்டு. எள்ளும் நல்லெண்ணெய்யும் இவருக்கு உகந்தவை. கணபதி, அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும். இவை நம்மில் பெரும்பாலானோர் அறிந்த தகவல்கள். ஜோதிடம் புராணம் சார்ந்து சனி பகவான் குறித்து இன்னும்பல அற்புதத் தகவல்கள் உண்டு.
நவகிரகங்களுள் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்ற பெருமைக்கு உரியவரும், நீதிமான் என்று போற்றப்படுபவருமான சனீஸ்வரரை வழிபடுவோரின் மன வாட்டங்களைப் போக்கும் வல்லமை படைத்தவர் ஆவார்.
சனிபகவான் என்றாலே, எல்லோருக்கும் ஓர் அச்சமும், தவிப்பும் ஏற்படும். இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி…எவராக இருந்தாலும் சரி…சனிபகவானின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம்.
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய நபர்களாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரியகுமாரனே சனி. இவர் யமதர்மராஜனின் சகோதரன்.
சனி பகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர் ஆதலால், இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார். ஆம்! நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரகன் சனி பகவான்தான்.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன். சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவர் எல்லாவித சௌக்கியங்களையும் பெற்று, உயரிய வாழ்க்கை வாழ்வார்.
ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் பகையாகவோ, நீசமாகவோ இருந்தால், அந்த ஜாதகர் ஒரு காலகட்டத்தில் எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்து, துன்பங்களை அனுபவிக்க நேரிடும். மற்ற கிரகங்கள் வலிமையாக இருந்தால், இந்தப் பலன்கள் சாதகமாக மாறும்.
இவர் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். ஒருவரது ஜன்ம ராசிக்கு முந்தைய ராசியில் இவர் சஞ்சரிக்கும் போது, அந்த ஜாதகருக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது.
அங்கிருந்து ஜன்ம ராசிக்கு வந்து, அதன் பின்பு ஜன்ம ராசிக்கு அடுத்த ராசியில் சஞ்சரித்து முடியும் ஏழரை வருடங்கள் இது. இதனை மங்கு சனி, தங்கு சனி, பொங்குசனி என்று பிரித்துப் பலன் சொல்வார்கள். ஜாதகத்தில் சனி அமர்ந்துள்ள நிலைப்படி அவரது ஆட்சி, உச்ச, நீசத் தன்மையை வைத்து ஏழரைச் சனி பலன்கள் ஏற்படும்.
சனி பகவானின் பத்தினியின் பெயர் நீலாதேவி. காகம் இவரது வாகனம். இவர் வாஸம் செய்யும் திசை மேற்கு. சனி பகவானுக்கு உகந்த நிறம் கருநீலம். மனித உடலில் பித்தம், நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஆள்பவர் இவர்.
சனீஸ்வரனால் தாங்க முடியாத இன்னல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சனீஸ்வரர் தீபம் ஏற்றி வழிப்பட்டால், சனியினால் ஏற்பட்ட இன்னல்களிலிருந்து விடுபடலாம்.
அதனால்தான்
‘சனியை போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.
எள் தீபம் ஏற்றக்கூடாது.:
சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். சனி பகவானுக்கு எள்ளைக் கொண்டு தீபம் ஏற்றுவது சிலருடைய வழக்கமாக இருக்கிறது. ஆனால், தானியங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கமுள்ளது.
சனீஸ்வரரின் ஆதிக்கமுள்ள எள்ளை எரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்றும் எள் எண்ணெய் கொண்டு போடப்படும் தீபமே சரியானதாகும். மேலும், மகாலட்சுமி வாசம் செய்யும் எள்ளை எரித்து விளக்கேற்றுவது நல்லதல்ல என்று ஆச்சார்ய பெருமக்கள் கூறுகிறார்கள்.
சனீஸ்வரர் தீபம்.:
சனீஸ்வரருக்கு ஆதிகாலத்தில் பயன்படுத்திய முக்கூட்டு எண்ணெய்யான நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் என்றழைக்கப்படும நீலசங்கு புஷ்பம், வன்னி இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும். முக்கூட்டு எண்ணெய்யால் விளக்கேற்றி சனீஸ்வரனை வழிபடுவோம் அனைத்து வளங்களையும் பெறுவோம்.
No comments:
Post a Comment