Sunday, December 3, 2023

தடாகபுரிஸ்வரர் கோயில்-மடம் -வந்தவாசி ❤️

தடாகபுரிஸ்வரர் கோயில்-மடம் -வந்தவாசி 
🌺மடம் என்னும் சிற்றூர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வந்தவாசி அருகே அமைந்துள்ளது. பல்லவ அரசன் கம்ப விக்ரமன் காலத்தில் இவ்வூர் பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர்   குளத்தூர் என்றும்,  முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல்குன்றக்கோட்டத்து தென்னாற்றூர் நாட்டுக் குளத்தூர்எனவும், கண்டராக் கூளி மாராய நாயக்கன் பாடலில் குளந்தை வளம்பதி என்றும், கிபி 1363ம் ஆண்டு கல்வெட்டில் இக்கோயில் இறைவன் மடத்து உடையார் என்றும் குறிக்கப்படுவதில் இதற்கு பிறகே இவ்வூர் பெயர் மடம் எனவாயிற்று என்பது தெளிவாகிறது.
🌺இக்கோயில் இறைவன் கல்வெட்டில் திருவக்னீஸ்வரமுடையார் என்றும், இறைவி அறம் வளர்த்த நாச்சியார் என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இரண்டாம் இராஜராஜன் காலம் முதல் குளந்தை ஆண்டார் என்றும் விஜயநகர காலத்தில் மடத்து உடையார் என்றும் தற்போது தடாகபுரிஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.  தற்போது இக்கோயில் இறைவி பெயர் பெரியநாயகி ஆகும்.

🌺இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன் , இரண்டாம் ராசாதிராசன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன்,மாறவர்மன் விக்ரம பாண்டியன், சடாவர்மன் சுந்தர பாண்டியன், வீரபுக்கன உடையார், கம்பண்ண உடையார், ஹரியண்ண உடையார்,வீர பிரதாப உடையார் மற்றும் தேவரடியாரின் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன.

#கோயிலமைப்பு 

🌺கோபுரம், திருமண மண்டபம், மகாமண்டபம்,  கருவறை, முன்மண்டபம் மற்றும் பல்வேறு தனி சன்னதிகளை கொண்டு பெரியதாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில்  முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டு இருக்க வேண்டும்.

🌺கருவறையைச் சுற்றியுள்ள தேவகோட்டங்களில் வினாயகர், மிக அழகிய தட்சணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ,சப்தமாதர்கள் போன்ற சோழர் கால சிற்பங்கள் உள்ளது. மேலும் இக்கோயிலில் உள்ள வீணாதரர், மிக அழகிய பைரவர், சூரியன், சுப்பிரமணியர், துவாரகபாலகர்கள் உள்ளனர். சஹஸ்ர லிங்கம், சுயம்பு லிங்கம், அடியார் சிற்பம் போன்றவையும் உள்ளது. விநாயகர்,பாலசுப்பிரமணி, சந்திரசேகர், பள்ளியறை நாயகர்,அம்மன், வீரபத்ரர், காளியம்மன், ரிஷப வாகன மூர்த்தி, நந்தி வாகனம் போன்ற பல்வேறு செப்பு திருமேனிகள் உள்ளன.

🌺கோயிலின்   முன்பாக ஒரு பெரிய அழகிய திருமண மண்டபம்  மிக நுண்ணிய வேலைப்பாடுகள்  கொண்டதாய் உள்ளது. இங்குள்ள தூண்களில் பல்வேறு சிற்பங்கள் நிறைந்துள்ளது.இம்  மண்டபத்தை சம்புவராய மன்ன்ன்  இராசநாராயணன் காலத்தில் கி.பி. 1368 இல் குளந்தை ஆண்டார் கோயில் தேவரடியாள் சம்பர் மகள் அமராபதி காத்தார் மகள் காதலியார் என்பவர் இம்மண்டபத்தை செய்வித்தார் எனும் சிறப்பான   செய்தியை தெரிவிக்கும்  கல்வெட்டு இம்மண்டபத்தின் தென்புறசுவரில் உள்ளது.

🌺தடாகபுரிஸ்வர்ர் கோயிலைச்சுற்றி உயரமான மதில் சுவர் நான்கு புறமும் கட்டப்பட்டுள்ளது. இதன் தென்புறத்தில் மிக உயராமான இராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கி.பி. 1363 இல் கம்பண உடையார் காலத்தில் அவரின் படைத்தலைவன் சோமய்ய தண்டநாயக்கரின் மகன் கண்டர கூளி மாரய்ய நாயக்கர் என்பவர் வென்று மண்கொண்ட சம்புவராயனையும் அவனுடைய தலைநகராகிய படைவீட்டு இராசகம்பீர மலையையும் வெற்றி கொண்டதின் நினைவாக இந்த உயரமாக அழகிய இராஜகோபுரத்தை கட்டி அதற்கு கண்டர கூளி மாரய்ய நாய்க்கன் திருக்கோபுரம் என்று தன் பெயரை வைத்தார். இக்கோபுர வாயிற்கதவை  தூணாண்டார் ஆற்றுளார் என்பவர் செய்து கொடுத்துள்ளார். ஓராண்டிற்கு பின்னர் கி.பி. 1364 ல் இளங்காடு என்னும் ஊரைச்சேர்ந்த திருநல்லிக்கிழன் நல்ல கம்பன் தென்னவராயன் என்பவர் கோயிலைச்சுற்றி அழகிய திருச்சுற்று  மதிலை கட்டினார்.

 
🌺இக்கோயிலுக்கு பெரும்பாலும் கொடுத்த நிலக்கொடை,வரி நீக்கம், திருவிழாக்கள் நடக்க பல்வேறு ஊர்களை வரி நீக்கி தானமாக கொடுத்தது, விளக்கெரிக்க அளித்த தானங்கள் மற்றும் கட்டிடம் கட்டியது, மற்ற தெய்வங்களை பிரதிஷ்டை செய்தது போன்ற விவரங்கள் உள்ளது. திருமஞ்சன நீரை கொண்டு வர செய்யப்பட்ட ஏற்பாடுகள்,நந்தவனம் அமைத்தது, சந்தன காப்பு செய்ய ஏற்படுத்திய நிவந்தகளை பற்றியும் கல்வெட்டு செய்திகள் குறிப்பிடுகிறது.

🌺இச்சிறிய ஊரில் பிரமாண்டமாய் இருக்கும் இக்கோயில் பல்வேறு சிறப்பான சிற்பங்களையும் கல்வெட்டு செய்திகளையும் கொண்டு உள்ளது. இக்கோயில் கட்டாயம் காண வேண்டிய திருத்தலங்களில் ஒன்றாகும்,

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...