ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம்.
மற்றொன்று கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருமலையாய் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி .
அகோபிலம் என்ற இந்த திவ்ய தேசம் ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'.
>> கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
>> இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.
>> திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
>> இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.
>> அகோபிலம் என்னும் திவ்ய தேசத்தில் நரசிம்மர், அகோ பலம் என்று சிறப்பித்து சொல்லும் விதத்தில் சேவை சாதிக்கிறார். இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் அகோ பலம்! அகோ பலம்! என்று சொல்லி வணங்கினர். அகோபிலம் என்பதற்கு சிங்க குகை என்பது பொருள். அகோ பலம் என்றால் ஆச்சரியம் மிக்க பலம் கொண்டவர் என்று பொருள்.
>> இரண்டு தளங்களாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆல்யமும் அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்று அழைக்கப்படுகின்றது. அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்று அழைப்படுகின்றது. மற்ற நவ நரசிம்மர் ஆலயங்கள் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
>> மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உண்மையான உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களையும் சேவிக்க முடியும். எனவே தான் திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!" என்று பாடியுள்ளார்.
>> நரசிம்மர் அவதாரம் எடுத்த தூணும், நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவாரக்கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை "ஜெயஸ்தம்பம்' அதாவது வெற்றித்தூண் என்கிறார்கள். இந்த தூணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலை நிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்த தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
>> ராமபிரான் சீதையை தேடி வரும் போது இந்த தூணின் முன்பு வழிபாடு செய்ததாகவும், வழிபாடு செய்தவுடன் சீதை கிடைத்து விட்டதைப்போன்ற உணர்வு ராமனுக்கு ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது
>> புகழ் பெற்ற இந்த அகோபிலம் தலம் அமைந்துள்ள மலைப்பகுதி ஆதிசேஷன் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. இம்மலைத் தொடரின் ஒரு பக்கம் திருமலை அமைந்திருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரீசைலம் விளங்குகிறது. கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே! அவை வருமாறு:-
1. அகோபில நரசிம்மர்: குரு
>> உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.
2. பார்க்கவ நரசிம்மர்: சூரியன்
>> மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)
3. யோகானந்த நரசிம்மர்: சனி
>> மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள் ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.
4. சத்ரவத நரசிம்மர்: கேது
>> கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.
5. க்ரோத (வராக) நரசிம்மர்:ராகு
>> பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ள னர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயரு டைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.
6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: சந்திரன்
>> மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.
7. மாலோல நரசிம்மர்: சுக்கிரன்
>> "மா' என்றால் லட்சுமி. "லோலன்' என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.
8. பாவன நரசிம்மர்: புதன்
>> பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.
9. ஜ்வாலா நரசிம்மர்: செவ்வாய்
>> மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.
>> மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இதனை "நவ நரசிம்ம க்ஷேத்ரம்' என்பர்.
>> இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
>> காலை முதலே கோவிலில் இருந்தால் மட்டுமே மாலைக்குள் ஒன்பது நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசிக்க முடியும் ..
>> மேலே அஹோபிலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது ..அதற்கு மேல் மலையேறிதான் மூன்று நரசிம்மர்களை தரிசிக்க முடியும்.
>> மலையேற்றம் கொஞ்சம் கடினம் தான் போக இரண்டு மணிநேரம் வர ரெண்டு மணி நேரம் ஆகும் ..ஊன்றுகோல் அங்கே கிடைகிறது ..
>> மீதி நரசிம்மர்களை தரிசிக்க வண்டி வசதி உள்ளது .அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவன நரசிம்மரை தரிசிக்க போகும் பாதை மிகவும் கடினமாக உள்ளது .வாழ்வில் மறக்க இயலாது ..
>> ஒவ்வொரு நரசிம்மரையும் தரிசிக்க தரிசிக்க அருமையான அனுபவங்களை என்னால் உணர முடிந்தது .
>> அவன் அருள் இருந்தால் மட்டுமே அகோபிலத்தை நம்மால் தரிசக்க இயலும் .ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் தரிசக்க வேண்டிய ஈரப்பு மிக்க திவ்ய -திருத்தலம் ..
>> மலை அடிவாரத்தில் உங்களை அழைத்து செல்ல கைடுகள் இருகிறார்கள்..சிறு குழுவாக சேர்ந்து ஒரு கைடு என வைத்து கொள்ளலாம் ..ஒருவர்க்கு சுமார் 500 போதுமானது ..
>> சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் . இக்கோவிலுக்கு கோயிலுக்கு ஆலகட்டா (23 கீ.மி.) மற்றும் கடப்பாவில் (70 கி.மீ) இருந்து பேருந்து வசதி உள்ளது. நந்தியால் மற்றும் கர்நூல் ரயில் நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன..ஒருமுறை சென்று வாருங்கள்...
ஓம்நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment