Saturday, December 2, 2023

குழந்தை வரம் அருளும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில்- வேலூர்

குழந்தை வரம் அருளும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில்- வேலூர்


வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம்.
 ‘திருவிரிஞ்சை மதிலழகு’ என்பது சொல் வழக்கு.
இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயர், வழித்துணைநாதர்.

இறைவி : மரகதாம்பிகை.

தல மரம் : பனை மரம்

தீர்த்தம் : பாலாறு, சிம்மதீர்த்தம்

வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம். இங்கு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 'திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல் வழக்கு. திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் என்பது தல புராண சிறப்பாகும்.

பிரம்மா, இந்த ஆலயத்தின் அர்ச்சகரின் மகனாகப் பிறந்து, ஆலய இறைவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றாராம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் 'விரிஞ்சிபுரம்' என்றானது. அருணகிரிநாதர், திருமூலர், பட்டினத்தார், கிருபானந்த வாரியார், எல்லப்பா தேசிகர் உள்ளிட்டோர் பாடல் பெற்ற திருத்தலம் இது. விரிஞ்சிபுரம் ஈசனுக்கு பூஜை செய்து வந்த, சிவநாதன்- நயனாநந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், பிரம்மதேவன். சிவசர்மன் எனப் பெயரிடப்பட்ட அவர், தன் ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார்.

சிறுவனாய் இருந்ததால் ஆலயத்திற்கு பூஜை செய்யும் உரிமையை, உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார், இத்தல ஈசனிடம் வேண்டினார். அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, 'ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சிவசர்மனை நீராட்டிக் காத்திரு. நான் வந்து உனக்கான வழியைக் காட்டுகிறேன்' என்றார். நயனா நந்தினி கனவு கண்ட மறுநாள், கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும்.


அந்த நாளில் ஒரு முதியவர் உருவில் வந்த ஈசன், சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து வேத சாஸ்திரங்கள் புகட்டி, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்தார். பிரம்மனுக்கு, சிவபெருமானே சிவ தீட்சை அளித்த திருத்தலம் என்ற பெரும் சிறப்புடையதாக இந்த ஆலயம் திகழ்கிறது. பின்னாளில் சிறுவன் சிவசர்மன் பூஜை செய்யும் பொருட்டு ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவும் திறந்துகொண்டது. பின்பு சிறுவன் சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதருக்கு அபிஷேகம் செய்ய எண்ணினான். ஆனால் சிறுவனான அவனது உயரம் குறைவு என்பதால் வருந்தினான்.


சிறுபாலகனின் வருத்தம் அறிந்த ஈசன், சிவலிங்கத்தின் மேல் பகுதியான பாணத்தைச் சாய்த்து, சிவசர்மன் செய்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். ஆம்! சிருஷ்டி கர்த்தாவாக விளங்கும்போது, திருஅண்ணாமலையில் பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, அதே பிரம்மன் சிறுவனாக வந்து விரிஞ்சிபுரத்தில் வருந்தியபோது ஈசன் தலை சாய்த்து காட்டியருளினார். அந்த சிறப்பு மிக்க நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு ஆகும். பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

எனவே அடியவர்கள் சிவதீட்சை பெற இதனைக் விட உயரிய தலம் வேறில்லை எனலாம். இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம்.

அல்லது கனவில் மலர்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றைத் தாங்கியபடி முதியவர் காட்சி தந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு, மரகதாம்பிகை அம்பாள் சன்னிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். இங்கு கார்த்திகை கடை ஞாயிறு விழா, முதல் நாளான சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிறு இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. சிம்மக்குளத்தில் நீராட உள்ளவர்கள், சனிக்கிழமை மாலை மூன்று மணிக்குள் ஆலயம் வர வேண்டும். அப்போதுதான் அன்று நள்ளிரவில் நீராட வசதியாக இருக்கும்.

வழித்துணை நாதர் : மைசூரைச் சேர்ந்த ஒரு வணிகர், இத்தலம் வழியாக காஞ்சீபுரம் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வியாபாரத்திற்காகச் சென்றபோது, வணிகர் இந்த ஆலயத்தில் தங்க நேரிட்டது. அவர் திருடர்களிடம் இருந்து தன்னைக் காத்து உதவும்படி வேண்டினார். இறைவனும் வேடன் உருக்கொண்டு, வணிகருக்கு வழித்துணையாக வந்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தல இறைவனுக்கு 'வழித்துணை நாதர்' என்றும் பெயர் வந்தது.

போக்குவரத்து வசதி :

தொடர்வண்டி மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...