Monday, December 18, 2023

பழமையான திருமறைக்காடு (வேதாரண்யம்)திருமறைக்காடர் சிவன் கோயில்.

திருநாவுக்கரசரும்
(அப்பர்) திருஞானசம்பந்தரும் பதிகம் பாடி திருக்கதவம் திறந்து மூடிய இந்த தலம் வேதங்கள் மனித உருவில் சிவனைப் பூஜித்த தலமான பழமையான இந்த திருமறைக்காடு (வேதாரண்யம்)
திருமறைக்காடர் திருக்கோயிலுக்குச் 
செல்லும் போது அடியேனுக்கு ஒரு இனம் புரியாத இறை உணர்வு 🙏🙇 என்னவென்று தெரியவில்லை இறைவனுக்கே வெளிச்சம் ❤️

#அப்பர் சுவாமிகள் திருக்கதவம் திறக்க பாடிய பதிகம்:

1."பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ

       மண்ணினார் வலம் செய்ம் மறைக்காடரோ

       கண்ணினால் உமைக் காண கதவினைத்

       திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே

விளக்கம்:

திண்ணம்=வலிமை;

யாழைப் பழித்த மொழியம்மை என்பது தலத்திலுள்ள இறைவியின் திருநாமம். வடமொழியில் அம்பிகையின் திருநாமம் வீணா விதூஷிணி என்று வழங்கப் படுகின்றது.  இந்த பெயர் வந்ததற்கான காரணம், ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் ஒரு சுவையான சம்பவமாக சொல்லப்படுகின்றது. அன்னை பார்வதி தேவிக்கு, சிவபிரானின் புகழை மற்றவர்கள் சொல்வதைக் கேட்க மிகவும் விருப்பம். ஒரு நாள், சரஸ்வதி, சிவபிரானின் புகழினை பாடலாக தனது வீணையில்`மீட்டிக்கொண்டு இருந்தபோது, அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் செவியுற்ற பார்வதி தேவி, சாது சாது (பிரமாதம், பிரமாதம்) என்று கூறினார். பார்வதி தேவியின் மதுரமான சொற்களைக் கேட்ட சரஸ்வதி, தான் வீணையில் மீட்டிய நாதம், பார்வதி தேவியின் குரலுக்கு முன்னால் எடுபடாது என்பதை உணர்ந்து, மிகவும் வெட்கத்துடன், தனது வீணையினை கீழே வைத்துவிட்டு தனது வாசிப்பினை நிறுத்தியதாக இந்த பாடலில் கூறப்படுகின்றது.

2."விபஞ்ச்யா காயந்தி விவிதம் அபிதானம் பசுபதேஸ்

       த்வயாரப்தே வக்தும் சலித சிரசா சாது வசனே

       ததீயைர் மாதுர்யைர் அபலபித தந்த்ரீ கலரவாம்

       நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம்

விபஞ்ச்யா=விபஞ்சி எனப்படும் பிரமனின் மனைவி; காயந்தி=பாடுதல்; விவிதம்=பலவகைப்பட்ட; அபிதானம்=திருவிளையாடல்கள்; பசுபதே=சிவபிரானின்; த்வயா=உனது தலை அசைப்பினால்; ஆரப்தே= ஆரம்பித்தபோது; வக்தும்=சொல்வதற்கு; சலித=ஆட்டுதல்; சிரசு=தலை; சாது வசனே=ஆமோதிக்கும் வார்த்தை; ததீயை=அதனுடைய; மாதுர்யை=இனிமையால்: அபலபித தந்த்ரீ=தந்திகளில் இருந்து எழுந்த அழகிய ஒலி: கல ரவாம்=அவமதிப்பு அடைந்ததைக் கண்டு; நிஜாம்=தன்னுடைய; வீணாம்=வீனையினை; நிசுலயதி=மூடுதல்; சோலேன=உரையினால்; நிப்ருதம்=வெளியில் தெரியாவண்ணம். பொதுவாக நாம்  சரஸ்வதியை வீணையுடன் காண்கின்றோம். ஆனால் திருமறைக்காட்டுக் கோயிலில், வீணை இன்றி சரஸ்வதி நின்ற நிலையில் இருப்பதை காணலாம்.

சுந்தரர், தனது திருமறைக்காட்டுப் பதிகத்தினை, யாழைப் பழித்த மொழியம்மை என்ற அம்பிகையின் திருநாமத்துடன் தொடங்குகின்றார். இவ்வாறு யாழைப் பழித்த மொழி மங்கை என்று எதிர்மறையாகச் சொல்வதற்கு அப்பர் பிரானுக்கு மனம் வரவில்லை போலும். அம்பிகையின் மொழிக்கு உவமையாக சொல்வதற்கு, யாழே தோற்ற பின்னர், வேறு எதனை உவமையாகச் சொல்வது. பண்ணுக்கு நேரான மொழி என்று கூறி தேவியின் குரலுக்கு பண்ணினை உவமையாக, மிகவும் அழகாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

"யாழைப் பழித்தன்ன மொழிமங்கை ஒரு பங்கன்

       பேழைச் சடை முடிமேல் பிறை வைத்தான் இடம் பேணில்

       தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத் தலை நுழைந்து

       வாழைக் கனி கூழைக் குரங்கு உண்ணும் மறைக்காடே 

யாழைப் பழித்த மொழியம்மை என்று இறைவியின் பெயர் மட்டுமல்லாமல், மறைக்காடர் என்று தலத்து இறைவனின் பெயரும் இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மண்ணினார் வணங்கும் மறைக்காடர் என்று குறிப்பிட்டு, தலத்தின் பெருமையை உணர்த்துவது மட்டும் அல்லாமல், மிகவும் அதிகமான மக்கள் வந்து வழிபடும் திருக்கோயில் கதவுகள் திறக்கப் பட வேண்டும் என்ற குறிப்பினையும் இங்கே இறைவனுக்கு உணர்த்தும் அழகினை நாம் உணரலாம்.

#திருஞானசம்பந்தர் 
கதவு அடைக்கப் பாடிய பதிகம் :

1."சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் 
மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் 
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே.

பாடல் விளக்கம்‬:

இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே! உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்ல வண்ணம் விடை அருள்வாயாக.

2.சங்கம் தரளம் அவைதான் கரைக்கெற்றும் 
வங்கக் கடல்சூழ் மறைக்காட்டுறை மைந்தா
மங்கையுமை பாகமுமாக இது என்கொல்
கங்கை சடைமேல் அடைவித்த கருத்தே.

பாடல் விளக்கம்‬:

சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால் கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச் சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ?.

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன்
 மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
 சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
_திருஞானசம்பந்தர்

#அருணகிரிநாதர் அருளிய #திருமறைக்காடு திருப்புகழ் :

"சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ்

சோரமி தற்குச் சிந்தை நினைந்துறு ......   துணையாதே

ஏழையெ னித்துக் கங்களு டன்தின ......    முழல்வேனோ

ஏதம கற்றிச் செம்பத சிந்தனை ......       தருவாயே

ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை ...... யெழுநாளே

ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் ...... மருகோனே

வேழமு கற்கு தம்பியெ னுந்திரு ...... முருகோனே

வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே.

#திருமறைக்காடு என்ற வேதாரண்யம்
#திருமறைக்காடர்: (வேதாரண்யேஸ்வரர்)

திருமறைக்காடர் கோயில் என்பது சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 125ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர்; தாயார் வேதநாயகி ஆவர். இத்தலத்தின் தல விருட்சங்கள் வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.

இத்தலம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது.

ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாக உள்ள தலமிது. கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.

இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும் இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அறியப்படுகிறது. "வேதாரண்யம் விளக்கழகு" என்று இக்கோயிலுக்குப் பெருமை உண்டு.

#வழிபட்டோர்:

அகத்தியர், வசிஷ்டர், கௌதமர், விசுவாமித்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்கரவர்த்தி, ஸ்ரீராமர்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறும் ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூசை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்தல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.

நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்தனர்.

தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு். இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.

இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று.

கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.

இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோசம் நீங்கும்.

இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும்,திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி திருப்பதிகம் பாடியருளினார்.

இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில்  வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது.அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர். இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம். 

இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம். திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம்.

இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் விசேஷமாக கருதப்படுகின்றது.

தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. பிரம்மகத்தி போன்ற பாவங்களும் நீங்கும்.பல ஆண்டுகள் யோகம் , தானம், தவம் செய்த பலன்களை அடையலாம்.

தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார்.

அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.

இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது. இராமர் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால் இத்தலத்திலுள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி கோவிலின் மேற்கு வெளிப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சந்நிதிக்கு கொடிமரமும் உள்ளது. இதற்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் உள்ள இந்த முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர்.

இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.

#சிந்தாமணி விநாயகர்:

சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் சிந்தாமணி எனும் மணியைத் தரித்துக் கொண்டதால் ஏற்பட்டதாகும். அபிஜித் என்பவனுக்கும், குணவதி என்பவளுக்கும் பிறந்தவனான கணன் எனும் அசுரன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது சிந்தாமணியின் உதவியால் கபிலர் தனக்களித்த விருந்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு கபிலரிடமிருந்து அம் மணியைப் பறித்துக் கொண்டு வந்துவிட, கபிலர் விநாயகரை நோக்கி யாகம் புரிந்து அம் மணியை மீட்டுத்தர வேண்டினார். சித்தி, புத்தி தேவிகளுடன் சிங்க வாகனத்தில் தோன்ற விநாயகர் தனது திருக்கைப் பாசத்தினால் கணனின் சிரசை அறுத்து சிந்தாமணியை கபிலரிடம் கொடுத்தார். இதனாலேயே இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் ஏற்பட்டது. திருமறைக் காட்டில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சிந்தாமணி விநாயகர் ஆவார்.

வேதாரண்யம்‌ சப்த விடங்கத்‌ தலங்களுள்‌ ஒன்று. கருவறை கிழக்கே நோக்கியது. கருவறை அதனையொட்டி அர்த்தமண்டபம்‌ மகாமண்டபம்‌. தியாகேசர்‌ மண்டபம்‌ முதலியன உள்ளன. கருவறையைச்‌ சுற்றி திருச்சுற்று மாளிகை உள்ளது. இத்திருச்சுற்றில்‌ கருவறைக்கு நேர்‌ கிழக்காகச்‌ சிறிய கோபுரம்‌ ஒன்று உள்ளது. இக்கோபுரத்தை ஒட்டி நீண்ட தூண்‌ மண்டபம்‌ ஒன்று உள்ளது. பின்னர்‌ இரண்டாம்‌ திருச்சுற்றில்‌ வடக்கே அன்னை ஆலயமும்‌ உள்ளது. இறுதியாகக்‌ கோவிலைச்‌ சுற்றி பெருமதிலும்‌, கிழக்கும்‌, மேற்கும்‌ இரண்டு கோபுரமும்‌ இருக்‌கின்றன. இவை தவிர பரிவார ஆலயங்களும்‌, தீர்த்தங்களும்‌ பிற மண்டபங்களும்‌ ஆங்காங்கு உள்ளன.

#அமைவிடம் :

மாநிலம் : தமிழ் நாடு திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவிலும் வேதாரண்யம் உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

இராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் : இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்...