தீராத நோய் தீர்க்கும்
திருமயேந்திரப்பள்ளி மகேந்திரப்பள்ளி...!
சிவஸ்தலம் பெயர்
திருமயேந்திரப்பள்ளி
இறைவன் பெயர்-
திருமேனியழகர்,
அந்தமிலா அழகர்
இறைவி பெயர்-
வடிவாம்பிகை
தல வரலாறு-
இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி முனிவரால் சபிக்கப்பட்டான்.
பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில்
ஒன்று தான் மகேந்திரப்பள்ளியாகும்.
சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி" என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டதாக ஒரு ஐதீகம் உண்டு. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
இன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்கப்படுகிறது. பண்டை நாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பகுதி கோயிலடிப்பாளையம் என்பது.
அருகில் உள்ள தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
இதை சம்பந்தரின் பதிகத்திலுள்ள 6-வது பாடலிலுள்ள "சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட" என்னும் பதிக அடிகள் புலப்படுத்தும்.
ஆலயத்தின் தீர்த்தம் இந்திர திர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவேர் தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். தலமரம் வில்வம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
சிறப்புகள்
ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கும், தீவுகோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது.
ஆண்டுதோறும் இன்றும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூரியஒளி சுவாமி மீது படுகிறது. இதைச் சூரிய வழிபாடாகக் கொண்டாடுகின்றனர்.
அமைவிடம்
சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் - முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம்.
அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்) 3 கி. மி. தொலைவில் உள்ளது.
சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1/2 கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில்
மயேந்திரப்பள்ளி, மயேந்திரப்பள்ளி அஞ்சல்
வழி ஆச்சாள்புரம்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment