Thursday, November 6, 2025

பெரியபாளையம் பவானிஅம்மன் திருவள்ளூர்.


தமிழகத்தின்
தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ள 
#திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 
புகழ்பெற்ற 
சக்தி தலமான ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 
#பெரியபாளையம்
#பவானிஅம்மன் என்ற #பெரியபாளையத்தம்மன் திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அல்லது பாளயத்தம்மன் கோயில் சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில், குண்டூர் செல்லும் வழியில், பெரியபாளையம் என்ற ஊரில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

கிருஷ்ண பரமாத்மா பிறந்ததை கம்சனுக்கு அறிவித்தவள் துர்கை. இவளே கண்ணின் சகோதரி என்று துதிக்கப்படுபவள். வடபுலத்தில் துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, பெரிய பாளையத்தில் பவானியாக அமர்ந்தாள் என்கிறது திருத்தல வரலாறு.. 

மூலவர்: பவானி அம்மன்

ஊர்: பெரியபாளையம்

மாவட்டம்: திருவள்ளூர்

மாநிலம்: தமிழ்நாடு

*அம்மனின் திருக்கோலம்:
பவானி அம்மன் தனது முன்புற வலது கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம் ஏந்தியுள்ளது. இந்தக் கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.

*தலபுராணம்:

யதுவம்சத்துப் போசகுலத்தவனாகிய உட்திரசேனனுக்கு குமாரனாகத் தோன்றிய காலநேமி என்ற அரசகுல கம்சனுக்கு தங்கையாகத் தோன்றிய தேவகியை கம்சன் வாசுதேவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஒரு நாள் மிக வினோதமாய் கம்சன் வாசுதேவரையும் தேவகியையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தத் தேரை தானே செலுத்தி சென்றான். அவ்வாறு செல்லுங்கால் தெய்வக் சக்தியால் அசரீரி ஒன்று உண்டாயிற்று அதாவது உன் தங்கை வயிற்றில் பிறக்கும் எட்டாவது சிசு உன்னை கொல்லும் என்றது.

இச்சொல்லைச் செவி மடுத்த கம்சன் தேரை நிறுத்தி தன் தங்கையைக் கொல்ல முற்பட்டான். அதைக் கண்டு வாசுதேவர் கம்சனை தடுக்க கம்சன் மறுத்து தேவகியை கொன்றேத் தீருவேன் என்று நின்றபோது வாசுதேவர் உன் தங்கை பெற்றெடுக்கும் சிசுக்கள் எல்லாவற்றையும் உன் முன் கொண்டு வந்து தருவேன் என்று உறுதிமொழி கூறினார். ஆனால் சினங்கொண்டு நின்ற கம்சன் வாசுதேவரின் உறுதிமொழியைச் செவிமடுக்காமல் வாசுதேவரையும், தேவகியையும் விலங்கிட்டு அழைத்துச் சென்று சிறையிலடைத்தான். 

சிறைக்குள் தேவகி பெற்றெடுத்த ஒவ்வொரு சிசுவையும் வாசுதேவர் தன் சொல் காக்கும் நிலையில் கம்சன் முன் கொண்டு வந்து வைப்பார். கம்சன் அந்த சிசுக்களை துன்புறுத்தி அழித்தான். எட்டாவது கருவை கம்சன் எதிர்பார்த்திருந்த பொழுது கண்ணன் பிறந்தான். அந்தக்கண்ணனே நந்தகோபன் மனைக்குமாறி நந்தகோபால் மனையிலிருந்த மாயாதேவியை தேவகியிடம் சிசுவாக விடப்பட்டார். முன்னர் வசுமதியென்றும், தாரா என்றும் இருந்தவள், அஸ்தியின் தேவியாகத் தோன்றிய இரப்பி அரசனது மந்திரியின் குமாரியாக விளங்கி நந்தகோபனை மணந்த யசோதை மாயையைப் பெண் மகளாகப் பெற்றெடுக்க, தேவகி கண்ணனைப் பெற்றெடுத்தாள்.

பிறந்த கண்ணன் தமது பஞ்சாயுதத்துடன் வாசுதேவருக்கும், வேதகிக்கும் காட்சி தந்து, அவ்விருவரின் முற்பிறப்பின் சிறப்பை எடுத்துக் கூறித் தன்னை துஷ்டநிக்ரகம் செய்து நிஷ்ட பரிபாலனம் செய்ய நந்தகோபர் மனைவியான யசோதையிடம் கொண்டுபோய் விட்டு , அங்குள்ள அதர்மத்தை ஒழிக்க, அகில உலகில் குமரியாக வடிவெடுத்து வந்துள்ளவரும் விஷ்ணுவின் நாபிக்கொடியில் பிரம்மன்னுடன் உதித்த ஆன்மாக்களை மயக்கும் கோவம் கொண்டவரும் திருமாலினுடைய கட்டளைப்படி இராணியின் புத்திரர் அறுவரையும், தேவகி வயிற்றில் விட்டுச் சிசுவாகப் பிறக்கச் செய்து தான் மட்டும் யசோதையின் வயிற்றில் பிறந்து, தேவகியிடம் சென்று இருந்தபொழுது, தன்னைப் பற்றிக் கொல்ல முற்பட்ட கம்சனை மார்பிலுதைத்து ஆகாசம் அடைபவள் அங்குள்ள அவளை இங்கு கொண்டு வந்து வளர்ப்பீர்களாக என்று உடன் வழிநின்று கட்டளையிட்ட கருணை கடலாம் கண்ணபிரான்.

உலகுய்யப் பிறந்த கண்ணன் உற்றமுறையில் யசோதையிடம் வளர்ந்து வருங்கால் தன்னைக் கொல்லும் நோக்குடன் பால்தர முற்பட்ட பூதகியையும் அவள் கணவன் பூதனையும் கொன்று, சகடா சூரனையும் திருவாவர்த்தனைக் கொன்று பெருந்தவ முனிவரும் சாக்கியரால் தமக்கு நாமகரணம் செய்யப் பெற்றும் , ஆயர்பாடியிலுள்ள கோபியர்களின் நவநீதம் உண்டும், அங்கு விளையாடும் குழந்தைகளைபோல் கண்ணன் மண் உண்ட காட்சியை யசோதை கண்டார்.

கண்ணனை அச்சுறுத்த நிலையில் கண்ணன் தன் தாய்க்குத் தான் மண் சாப்பிடவில்லை என்பதைக் காட்டும் முறையில் தனது வாயைத் திறந்து தன் முன் அடங்கிய அண்டங்கள் அனைத்தையும் அன்னை யசோதை அறியக்காட்டியவன் கண்ணன், அதே நேரத்தில் மாயையானவன்.

வாசுதேவரால் கண்ணன் என்ற குழந்தை இரவோடு இரவாக ஆயர்பாடிக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது பெரும் மழைக்கும் பேரிடிக்குமிடையே ஆதிசேசன் படம் எடுத்துக் குடைபிடிக்க, கங்கையாறு விலகி வழி விட கிருஷ்ணன் என்ற குழந்தை யசோதை இல்லத்தில் விடப்பட்டு அங்குள்ள மாயை என் குழந்தையைப் பரமாத்மாவின் அசரீரி சொற்படி தேவகியிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது.

தனது வாக்குறுதியை காப்பாற்ற வாசுதேவர் எட்டாவது குழந்தை பிறந்ததை பற்றி கம்சர்க்கு தகவல் கொடுத்தார். அதைக்கேட்ட கம்சன் சினங்கொண்டு சுடுசொல் பேசி என்னைக் கொல்லத் தோன்றிய அற்ப சிசுவே உன்னை கண்ட துண்டமாக்கி மீள்வேன் என்று கூறி, சிறைச்சாலை நோக்கிச் சென்ற கம்சன் தேவகி கையிடத்து வைத்துள்ள குழந்தையைப் பறித்தான். பெண் சிசுவாக இருந்ததைக் கண்டு ஆண்மையற்ற ஒரு சிசு என்னைக் கொள்வதா? அதனை நான் விட்டு வைப்பதா? என்று அங்கம் முழுவதும் பொங்கும் சினத்தால் அச்சிசுவை ஆகாயத்தில் எறிந்து பாறையில் மோதவிடமுற்பட்டான் அதிகாலை சூரபத்மன் வெற்றிவேல் முருகனிடம் போரிட்டு, படைபலமிழந்து தவித்து நின்ற காலத்தில் அவனுக்கு உதவும் நோக்கோடு சிறந்த சைனியங்களை எழுப்ப மிரகசஞ்சீவி இருக்கும் இடம் கூறி மறைந்தவளும், சம்பரனின் தேவியாக விளங்கியவளும் சக்தியின் குணவடிவம், தவம், மோகம், அவித்தை அனித்தம், ஆகியவற்றால் உண்டாகின்ற பல்வேறு ஆற்றலையும் உயிரினங்களுக்கு வரும் தீமையை நீக்குகின்ற ஆற்றலை பெற்றவளுமான அந்த மாயவான் வழியிருந்து கம்சனை நோக்கி பாவத்தின் திருவுருவே உன்னைக் கொல்ல உதித்தவன் என்னை ஒத்த பேராற்றல் மிக்கவன் ! நந்தகோபன் மனையில் வளர்ந்து வருகிறான். உன்னையும் உன்னால் உருவாகும் தீமை அனைத்தையும், நீ செய்யும் தவறுகள் பலவற்றையும் அவன் அழித்தே தீருவான் என வான்வழி நின்று கூறி ஆன பல்லுயிரும் காக்க, அவ்விடம் விட்டு அகன்று இங்கு வந்து அமர்ந்தவளே அன்னை பவானி.

இங்கு கருவறையில் வீற்றிருக்கும் அம்மனும், உற்சவ மூர்த்தி அம்மனும்,  அம்மன் தலை மட்டுமே இங்கு காட்சி அளிக்கின்றது.  ரேணுகாதேவிதான் இப்படி சிரசு மட்டுமே காட்சியளிக்கும் கோலத்தில் இருப்பாள். மேலும் கோவிலினுள் இருக்கும் பரசுராமன் சிற்பமே சாட்சி என்கின்றனர். ரேணுகாதேவி பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகாதேவிக் காயங்களுடன், இப்பகுதிவாழ் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் நம்ம பக்கம் ஒரு நம்பிக்கை உண்டு.  

உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்று உருவில் அமர்ந்தாள் அன்னை ஆதிசக்தி, அவளோடு பரசுராமரின் அன்னையான ரேணுகாதேவியும் வந்து அமர்ந்து இத்தலத்தைப் புனிதப்படுத்தினார்கள் என்கிறது தல புராணம்.

நீண்ட காலம் புற்று வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த பவானி அம்மா, ஒருமுறை வளையல் வியாபாரி வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். வளையல் வியாபாரியின் கனவில் வந்த அன்னையின் ஆணைப்படி அந்த புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதில்தான் ரத்தம் வடிந்தது. இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.

ஆந்திராவிலிருந்து பலிஜா நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்து வியாபாரம் செய்து வந்தனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார். (திருவண்ணாமலை மாவட்ட ஆரணி இல்ல. ஆரணின்ற ஆறு ஓடுவதால் அந்த ஊருக்கு ஆரணின்னு பேரு. எங்க ஊரில் ஓடுவது கமண்டலநாகநதி

ஓய்வெடுத்த பின்,  அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சியடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகாதேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள்.

வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு  ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரகம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர். 

மூலவரான பவானி அம்மன் வலது கையில் கத்தி, வலது மேல் கையில் சக்கரமும், இடது கையில் அமுத கலசத்தையும், இடது மேல் கையில் சங்கும் கொண்டு காட்சி அளிக்கிறாள். சங்கு சக்கரம் கொண்ட வைஷ்ணவியாக அன்னை அமர்ந்திருக்கிறாள். இந்த அன்னையின் மடியருகே தலை மட்டுமே கொண்ட சுயம்புவாக ரேணுகா தேவி அம்சமாக மற்றொரு அன்னை காட்சி தருகிறாள். இவளே தொன்மையான தேவி என்கிறார்கள். பவானியின் அருகில் கிருஷ்ணர், நாகதேவர் திருவுருவங்கள் உள்ளன.

இங்கு பவானி அன்னையோடு தனித்தனி சந்நிதிகளில் கணபதி, மகா மாதங்கி (ரேணுகாதேவிக்கு அடைக்கலம் தந்த தேவி) ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர், நாகர், புற்றுக்கோயில் தேவி, ஆகியவர்களையும் தரிசிக்க முடியும்.

இக்கோயில் பல வருசங்களுக்கு முன் வரை மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும்தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். 

வெளிப் பிரகாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கென தனித்தனி சந்நிதி உண்டு.  நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர்.

*பிரார்த்தனைகள்:

உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம்.
பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
அம்மனுக்கு உகந்த வேப்பிலைகளை உடலில் கட்டிக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

மீனவக்குலப் பெண்களின் தாயாக இருப்பவள் பவானி. கடலுக்குச் சென்ற தங்கள் கணவன்மார்கள் பாதுகாப்பாகத் திரும்பி வர பவானியை துணை நிற்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை. பெரும் போராட்டத்துக்குப் பின்பு உயிர் பிழைத்து கணவன் திரும்பி வந்ததும், இந்த கோயிலுக்கு வந்து தங்களது திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக வழங்குவது அந்த பெண்களின் வேண்டுதல். இது இன்றும் நடக்கும் வழக்கம். மழை பொழியவும், காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் தாக்காமல் இருக்கவும் இவளே காவல் என்கிறார்கள் மக்கள்.

விரைவில் திருமணம் நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரகம் சுமந்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். இளைஞர்களும் இளம் பெண்களும் பட்டாடை உடுத்தி, சந்தனக் குங்குமம் பூசிக் கொண்டு, தலையில் கரகத்தைச் சுமந்தபடி, அம்மனுக்குப் பிரியமான இசைக் கருவிகள் முழங்க, கரகம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது ‘குடைக் கல்யாணம்’ என்று அழைக்கப்படுகிறது.

நேர்த்திக்கடனுக்கு என்று ஒரு ஆலயத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால் அது பெரிய பாளையம் தான் என்று சொல்லலாம். எத்தனை விதமான நேர்த்திக்கடன்கள் தான் இங்கு! தீச்சட்டி ஏந்தல், வேப்பம் சேலை உடுத்தல், கோழி சுற்றி விடுதல், உப்பு மிளகு கொட்டுதல், தேங்காய் உருட்டல், அங்கப் பிரதட்சம், மாவிளக்கு-அகல் விளக்கு ஏற்றுதல், துலாபாரம் கொடுத்தல், வேப்பிலையால் மந்திரித்தல், சேலை சாத்துதல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், திருமாங்கல்ய காணிக்கை அளித்தல் என ஆலயம் எங்கும் பக்தி அலை பரவிக் கிடப்பதை காணலாம்.

அங்கப்பிரதட்சணம் காலை 5 மணி முதல் 9 மணி வரையும், வேப்பஞ்சேலை நேர்த்திக்கடன் காலை 5 மணி முதல் 12 மணி வரையும், மீண்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், கல்யாண கரகம் காலை 5 மணி முதல் 12 மணி வரையும் இங்கு நடைபெறுகின்றது.

இங்குள்ள வேப்பமரம் பிள்ளையில்லாத பெண்களின் பெருந்துயரை நீக்கும் சிறப்பு கொண்டது. இங்கு தொட்டில்கட்டி வழிபட்டால், பிள்ளை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையோடு இங்கு வந்து பலன் பெற்றவர்கள் இன்றும் சத்திய சாட்சியாக அம்பிகையைக் கொண்டாடி வருகிறார்கள்.

ஆடி மாதம் தொடங்கி 14 வாரங்களும், சித்திரா பௌர்ணமி திருநாளும் இங்கு விசேஷம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 முதல் 12.30 மணி வரையும்; பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரையும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 முதல் தொடர்ந்து இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

தினமும் காலை 8 மணி, நண்பகல் 11 மணி, மாலை 5 மணி என மூன்று வேளைகளும் பவானி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. குங்குமமும் மஞ்சளும் கலந்த இந்த தீர்த்தம் தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் என்பதால் இது பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அமைவிடம்:
 
பாளையம் என்றால் படை வீடு என்ற பொருளாகும். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். சென்னையில் இருந்து செங்குன்றம் ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ தொலைவில் பெரியபாளையம் உள்ளது. சென்னை கோயம்பேடு, வள்ளலார் நகர், பிராட்வே, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ரயில் மூலம் வரவேண்டுமானால், சென்னை சென்ட்ரல், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பெரியபாளையம் வரலாம். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பெரியபாளையம் பவானிஅம்மன் திருவள்ளூர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ள  #திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள  புகழ்பெற்ற  சக்தி தலமான ஆரணி ஆற்றங்கரையில் அமைந்து...