Saturday, November 8, 2025

ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் திருவூறல் தக்கோலம்

அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், திருவூறல், தக்கோலம் அஞ்சல் -631 151
அரக்கோணம் வட்டம், 
ராணிப்பேட்டை மாவட்டம்.            

*மூலவர்:
ஜலநாதீஸ்வரர் / ஜலநாதேசுவரர், உமாபதீசுவரர்.

*தாயார்:
கிரிராஜ கன்னிகாம்பாள் (மோகன வல்லியம்மை)

*தீர்த்தம்:
பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், கல்லாறு.                            

*இது சம்பந்தர் தேவாரம் அருளிய "பாடல் பெற்ற தலம்".                      

 *இது தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். 
*இத்தலத்தின் புராணப்பெயர் "திருவூறல்". இது தற்போது தக்கோலம் என்று அழைக்கப்படுகிறது.                

*இறைவனான ஜலநாதீஸ்வரரின் திருவடியில் இருந்து நீர் ஊறி வந்ததால், இத்தலம் 'திருவூறல்' என்று அழைக்கப்பட்டது. 
தல இறைவனுக்கும் ஜலநாதீஸ்வரர் என்ற பெயர் அமைந்தது. 

*அகோர வீரபத்திரர் தக்கன் தலையைக் கொய்த தலம் இது. தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு ஓலமிட்டதால் (தக்கன் - ஓலம்) இப்பதி 'தக்கோலம்' என்று பெயர் பெற்றது. இதற்கு அரண் செய்வதுபோல தேரடிக்கு அருகில் வீரபத்திரர் கோயில் உள்ளது.        

*ஆட்டுத்தலை பொருத்தப்பட்ட தட்சன் "மே மே' என்று எழுப்பிய ஒலியே சிவனைப் போற்றும் ஸ்ரீ ருத்ரத்தின் ஓர் அங்கமாக "சமகம்' என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், சமகம் முதல் முறையாக உச்சரிக்கப்பட்ட ஊர் என்ற பெருமைக்கு உரித்தாகுகிறது தக்கோலம்.       

*மூலவர் - சிவலிங்கத் திருமேனி; பிருதிவி (மணல்) லிங்கம்; தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்; பழமையான மூர்த்தி. மூலவர் உத்தராயண காலத்தில் செந்நிறமாகவும், தக்ஷிணாயண காலத்தில் வெண்ணிறமாகவும் காட்சியளிக்கிறார். 

*இது பார்வதிதேவி வழிபட்ட திருமேனியாகும். ஆற்று வெள்ளத்தில் மணல் லிங்கம் கரைந்து விடுமோ என்ற அச்சத்தில் பார்வதி தேவி, லிங்கத்தை கட்டி  அணைத்த தடம் சிவலிங்கத் திருமேனியில் உள்ளது.              

*சுவாமி சந்நிதி எதிரில் சாளரம் உள்ளது.    
*சந்நிதிக்கு எதிரில் ஓரத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும் அது கல்லால் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

*அம்பாள் கிரிராஜ கன்னிகாம்பாள் வடக்கு நோக்கிய தனி சந்நிதியில்  நின்ற திருக்கோலம், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.

*கோஷ்டமூர்த்தங்களில்      விஷ்ணுதுர்க்கை நீங்கலாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா முதலிய மூர்த்தங்கள் "அமர்ந்த நிலையிலேயே" உள்ளது சிறப்பு.       

*இங்கு தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குற்றுக்காலிட்டு (உத்கடிகாசனம் )    அபூர்வ காட்சி தருகின்றார்.       
 பக்தர்களின் துன்பங்களை தலை சாய்த்து கேட்பது போல், தலையை ஒரு புறமாக சாய்த்தபடி தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.  இவருக்கு "ஒளர்வ" தட்சிணாமூர்த்தி என்பது சித்தர்கள் சூட்டிய பெயர் என சொல்லப்படுகிறது. இந்த நாமத்தை ஆண்கள் தியானித்து வந்தாலே பல பிறவிகளிலும் செய்த தவறுகள், பாவங்கள் பொடிப் பொடியாகும். இங்கு தட்சிணாமூர்த்தி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பவதாக நம்பிக்கை.

*குருத்தலமான இங்கு வியாழக்கிழமைகளில்  தட்சிணாமூர்த்தியின் அருள் வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.  குரு பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.  

*விஷ்ணு துர்க்கை அழகான வேலைப்பாட்டுடன் - இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்தும் ஒன்றால் கீழேயுள்ள மகிடத்தை ஊன்றியும், (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம்.

 *அருகில் ஓடும் கல்லாற்றின் கரையில் "நந்தி வாயிலிருந்து தீர்த்தம் வரும்" மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர்" கோயில் உள்ளது. 

*இங்கு உள்ள தீர்த்தம் சத்திய கங்கை தீர்த்தம்.           

*தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா,  யாகம் நடத்தும் சமயம் ஆசிரமத்திற்கு அருகே வந்த காமதேனுப் பசுவை தீர்க்கதா தனது யாகத்திற்கு வருவோரை உபசரிக்க உதவ வேண்டும் என்று கூற, அதற்கு காமதேனு, இந்திரனின் அனுமதி இல்லாமல் தான் இங்கு தங்க இயலாது என்று கூறி  மறுக்க, தீர்க்கதா அதனை கட்டிப்போட  முயன்றார். இதனால் கோபமுற்ற காமதேனு  சாபமிட்டது. 
தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர்
தனது மகன் பெற்றசாபத்திற்கு விமோசனம் பெற நாரதரிடம் உபாயம் வேண்டினார். நாரதரது அறிவுரைப்படி அவர் திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு மகனுக்கு சாபவிமோசனம் வேண்டினார்.

இறைவனார், தீர்க்கதா நந்தியை வழிபட்டு, அவரது வாயிலிருந்து தெய்வ கங்கையை வரவழைத்து, அத்தீர்த்தம் கொண்டு தம்மை வழிபட சாபவிமோசனம் கிட்டும் எனக்கூற, அதன்படி தீர்க்கதா வழிபாடுசெய்து சாபவிமோசனம் பெற்றார்.                

*நந்தி வாயிலிருந்து விழும் நீர், சிவலிங்கத்தைச் சுற்றிச் சென்று வெளியில் வந்து, மீண்டும் மற்றொரு நந்தி வாயிலிருந்து விழுந்து, குளத்தில் நிரம்பி பின்னர் ஆற்றில் ஓடும் அமைப்பில்  அமைந்துள்ளது.

 *தக்கோலம் (திருவூறல்) அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.       

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் திருவூறல் தக்கோலம்

அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், திருவூறல், தக்கோலம் அஞ்சல் -631 151 அரக்கோணம் வட்டம்,  ராணிப்பேட்டை மாவட்டம்.             *...