Friday, January 9, 2026

பட்டுக்கோட்டை சந்திரசேகரர் திருக்கோயில்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சந்திரசேகரர்  திருக்கோயில்  
பட்டுக்கோட்டை எனும்‌ பெயர்‌ பதினான்காம் ‌ நூற்றாண்டுக்கு முன்பே வழக்கத்தில்‌ இருந்துள்ளது. ஒரு தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தை  கோட்டை என அழைகின்றனர்,  இப்பகுதி பட்டு மழவராயர்  எனும்‌ கள்ளர் குழுத்தலைவரின் கட்டுப்பாட்டில் ‌இருந்த பகுதி என்பதால்   பட்டுக்கோட்டை எனப்‌ பெயர்‌ வரக்‌ காரணமாகியது.
 .இவ்வூரில் அக்காலத்தில் ஒரு கோட்டையும் இருந்துள்ளது. அக்காலத்தில் மராட்டிய படை தளபதி பாவாஜி பண்டிதர் என்பவர் பட்டுக்கோட்டையில் கோட்டை கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது கோட்டை அழிந்து பட்டாலும்  அக்கோட்டையின் மையமாகவே இந்த கோட்டை சிவன் கோயில் இருந்துள்ளது. இக்கோயிலை சுற்றி இன்றும் பெரிய வட்டமாக சில தெருக்கள் அமைந்துள்ளன. 
 ராஜராஜ சோழன் சோழ நாட்டை  13 வள நாடுகளாக பிரித்தார். அதில் ஒன்றான பரண்டையூர் நாட்டில் இருந்த செல்லூர் என்ற இன்றைய பட்டுக்கோட்டை என்கின்றனர். 

. 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும். 

கோட்டைத் தெருவில் அமைந்துள்ள சந்திரசேகர சுவாமி கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். 

பிரதான கோபுரத்தின் முன்னம் ஒரு விநாயகர் சிற்றாலயம் ஒன்று வடக்கு நோக்கி அமைந்துள்ளது. 
முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி கோவிலாகும். கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் நான்கு புறமும் சுற்றுமதில் சுவருடன் கூடிய திருக்கோயில். இக்கோவிலின் 3 அடுக்கு கோபுரத்தின் எதிரில் நந்தி மண்டபமும் பலிபீடமும் உள்ளது. அதனை  கடந்து ஆலயத்தின் உள்ளே இடது புறம் நாடியம்மன் ஐயனார் சன்னதி வடக்கு நோக்கி உள்ளது.
 இக்கோவில் திருமஞ்சன மண்டபம் 32 தூண்களை கொண்டது. தரை கருங்கற்களால் பரப்பப்பட்டது. தரைக்கல்லில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டில்

சோழர் காலத்தில் இவ்வூர் தலைவனாக இருந்தவர் ராஜேந்திர சுந்தர தோளுடையான் என்பவர். இவர் காலத்தில் ஒரு நிலம் குறித்த வழக்கு வருகிறது. மன்னரிடம் ஒருவர் நில உரிமை கேட்க நில உரிமைக்கான ஓலையை காட்ட வேண்டும் என்று மன்னர் ஆணை இடுகிறார்.

நில உரிமை கேட்டவரும் மன்னர் கேட்டபடியே நிலத்துக்கான உரிமை ஓலையைக்காட்ட நிலம் கேட்டவருக்கே என்று தீர்ப்பு கூறப்படுகிறது. 
இதிலிருந்து நில உரிமைக்கு அக்காலத்திலேயே உரிமை ஓலை(பத்திரம்) இருந்தது நன்கு விளங்குகிறது.

இறைவன் பெயர் பிறைசூடும் தம்பிரானார். பிற்காலத்தில் அதுவே வடமொழி ஆக்கமாக சந்திரசேகரர் என்று சூட்டப்பட்டது. 
அம்பிகையின் பெயர் மங்களாம்பிகை. 
திருமண வரம் தரும் அம்பிகை, கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையவும் திருமணம் நடைபெறாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கவும் மாங்கல்ய பாக்கியம் அருள்வார்
 இறைவன் சன்னதி வாயிலில் பெரிய அளவிலான இரு கருங்கல் துவார பாலகர்கள் உள்ளனர். 
மூலவர் தரிசனம் செய்து வெளியே வந்தால் இடதுபுற சுவரில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் சிலை புடைப்பு சிற்பமாக உள்ளது.

பிரகாரம் மூன்று புறமும் சுற்றாலை மண்டபம் அமைந்துள்ளது. கருவறை கோஷ்டங்களில் விநாயகர் தக்ஷ்ணமூர்த்தி, லிங்கோத்பவர் பிரம்மன் துர்கை உள்ளனர். இதுவன்றி  சுற்றாலை  மண்டபத்தில் விநாயகர் சப்தமாதர்கள், வீரபத்திரர், லக்ஷ்மி மனோன்மணியுடன் கூடிய லிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன்,  மற்றும் சுவற்றில் ஸ்ரீ சக்கரம் ஒன்றும் உள்ளது. 
இந்த வரிசையில் பரமசிவன் பேச்சியம்மன் என இருக்கும் மூர்த்திகள் சப்தமாதர் தொகுப்பில் வைக்கப்படும், செண்டாயுதம் ஏந்திய பெருஞ்சாத்தான் போலவும்  ஜேஷ்டாதேவி போலவும்  தெரிகின்றன. வஸ்திரம் களையும் போது  பார்த்தால் அடையாளம் கண்டுபிடிக்க இயலும்.   
சண்டேசர் சன்னதியும் வடகிழக்கில் பைரவர் நவகிரகம் சூரியன்  உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். 
கருவறை துவிதள விமானம் கொண்டுள்ளது, வட்ட சிகரம் அதன் மேல் அணிசெய்கிறது. இடைநாழி, அர்த்தமண்டபம் மகாமண்டபம் என உள்ளது. 
சோழர்களால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பாண்டிய, விஜயநகர மன்னர்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் பின்னர் முஸ்லிம் படையெடுப்பிற்குப் பின் சிதிலமடைந்த நிலையில் இருந்து நாயக்கர் காலத்தில் மீளுருவாக்கம் செய்யப்படுள்ளது. 
60 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்    குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பட்டுக்கோட்டை சந்திரசேகரர் திருக்கோயில்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சந்திரசேகரர்  திருக்கோயில்   பட்டுக்கோட்டை எனும்‌ பெயர்‌ பதினான்காம் ‌ நூற்றாண்டுக்கு முன்பே வழக்க...