திருநீறும் ருத்திராட்சமும் அணிந்து
சிவனடியார் வேடத்தில் தன்னைக் கொல்லக் கத்தியால் குத்திய பகைவனைக் காப்பாற்றிய ,
63 நாயன்மார்களில் ஒருவரான #மெய்ப்பொருள்_நாயனார் குருபூஜை இன்று: (முக்தி நாள்)
(#கார்த்திகை_உத்திரம்)
மெய்ப்பொருள் நாயனார் – கொன்றவனைக் காத்தவர்
மெய்ப்பொருள் நாயனார், சிவனடியார் வேடத்தில் தன்னைக் கொல்லக் கத்தியால் குத்திய பகைவனைக் காப்பாற்றிய குறுநில மன்னர். நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவர். அவரின் கதையை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரைத் தலைமையாகக் கொண்டு, பழங்காலத்தில் சேதி நாடு என்ற சிற்றரசு ஒன்று இருந்தது.
சேதியர் என்ற இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்ததால் இது சேதி நாடு என்று வழங்கப்பட்டது. இது தொண்டை நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையில் அமைந்திருந்ததால் நடு நாடு என்றும் அழைக்கப்பட்டது.
இச்சிற்றரசை மலையமான் என்ற குலத்தினர் ஆண்டு வந்தனர். இக்குலத்தினர் மாதொரு பாகனாக விளங்கும் சிவபெருமானை வழிவழியாக வழிபட்டு வந்தனர்.
சேதி நாட்டுக் குறுநில மன்னர் பரம்பரையில் தோன்றியவர் மெய்ப்பொருள் நாயனார். இவரும் சிவனாரிடம் பேரன்பு கொண்டிருந்தார்.
திருநீறு பூசி, உருத்திராக்கம் அணிந்த சிவனடியார்களின் திருவேடமே உண்மையான மெய்ப்பொருள் என்று இவர் எண்ணினார். ஆதலால் மெய்ப்பொருள் நாயனார் என்று அழைக்கப்பட்டார்.
மெய்ப்பொருளார் வீரத்தில் சிறந்து விளங்கியதோடு, அறநெறி தவறாது குடிமக்களைக் காத்து நல்லாட்சி புரிந்து வந்தார். சிவனடியார்கள் வேண்டியதை கொடுக்கும் தாரள குணத்தவராகத் திகழ்ந்தார். சிவாலயங்களுக்கு பல திருத்தொண்டுகள் புரிந்தார்.
மெய்ப்பொருளார் மீது முத்தநாதன் என்ற அரசன் பகைமை கொண்டிருந்தான். அவன் பலமுறை மெய்ப்பொருளாளருடன் போரிட்டு தோல்வி கண்டவன். அவன் தன்னுடைய தோல்விகளுக்கு காரணமான மெய்ப்பொருளாரைத் தண்டிக்க எண்ணினான். அவனுடைய மனதில் வஞ்சகத் திட்டம் ஒன்று உதித்தது.
முத்தநாதனுக்கு, மெய்ப்பொருள் நாயனாரின் சிவனடியார் பக்தி பற்றி தெரியும். ஆதலால் சிவனடியாராகச் சென்று அவ்வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்டான்.
திட்டமிட்டபடி முத்தநாதன் ஒருநாள் உடலெங்கும் வெண்ணீறு பூசி, உருத்திராக்கங்களை அணிந்து சிவனடியாராக உருமாறினான். குத்துவாளை ஓலைசுவடிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு சுவடியுடன் மெய்பொருளாரின் அரண்மனையை அடைந்தான்.
இரவானதால் வாயில் காவலர்கள் அவனை அரண்மனைக்குள் செல்லவிடாமல் தடுத்தனர். உடனே அவர்களிடம் மன்னருக்கு ஆகமம் உரைக்கவே வந்ததாகக் கூறினான். ஆதலால் அவர்கள் அவனை அரண்மனைக்குள் விட்டனர்.
முத்தநாதன் அரசரின் பள்ளியறையை நெருங்கினான்.
அங்கிருந்த தத்தன் என்னும் மெய்க்காப்பாளன் அரசர் உறங்கும் நேரம் ஆதலால் சிவனடியார் தற்போது உள்ளே செல்லக் கூடாது என்று கூறி தடுத்தான்.
சிவனிடம் பெற்ற ஆகமத்தை இப்போதே மன்னருக்கு தெரிவிக்க வேண்டும் என்று சிவனடியார் கூறியதும் அரைகுறை மனதுடன் மன்னரின் பள்ளியறைக்குள் அனுமதித்தான் தத்தன்.
தூங்கிக் கொண்டிருந்த மன்னருக்கு அரசியார் விசிறிக் கொண்டிருந்தார். சிவனடியார் சிவ ஆகமத்தை அரசருக்கு விளக்க வந்திருப்பதாக் கூறியதும் அரசியார் மன்னரை எழுப்பினார்.
கண் விழித்த மெய்ப்பொருளார் சிவனடியாரைக் கண்டதும் கைகூப்பி வணங்கினார். சிவனிடமிருந்து பெற்ற ஆகமத்தின் பொருளை உடனே மன்னருக்கு கற்பிக்க இருப்பதாகக் கூறினார் சிவனடியார்.
அதனைக் கேட்ட மன்னரும் மகிழ்ந்தார். சிவஆகம விளக்கத்தை மன்னருக்கு மட்டுமே விளக்க முடியும் என்று சிவனடியார் கூறியதும் மன்னர் அங்கிருந்த எல்லோரையும் அனுப்பி வைத்தார்.
பின்னர் சிவனடியாருக்கு தகுந்த ஆசனம் அளித்து தான் கீழே அமர்ந்து சிவஆகம விளக்கத்தை கேட்கத் தயாரானார்.
சிவனடியாராக வேடமிட்ட முத்தநாதன் ஓலைச்சுவடியைப் பிரித்து உள்ளே இருந்த குத்துவாளை எடுத்து மெய்ப்பொருளார் அறியாதபோது மார்பில் குத்தினான்.
குத்துப்பட்ட நிலையிலும் சிவனடியாரை வணங்கியபடியே மெய்ப்பொருளார் தரையில் சாய்ந்தார்.
அப்போது சந்தேகமடைந்த தத்தன் உள்ளே எட்டிப் பார்த்தான். அரசன் குத்துவாளால் குத்துப்பட்டு கிடப்பதைப் பார்த்ததும் உடைவாளை உருவி சிவனடியாரை நோக்கிப் பாய்ந்தான்.
உடனே மெய்ப்பொருளார் தத்தனைப் பார்த்து “தத்தா, அவர் நம்முடைய சிவனடியார்; வேண்டாம்” என்று தடுத்தார்.
அதிர்ச்சி அடைந்த தத்தன் “தற்போது யான் செய்யும் பணி யாது?” என்று கேட்டான்.
“இந்த சிவனடியாரை யாரும் தாக்காத வண்ணம் பாதுகாத்து, இவ்வூரின் எல்லையில் விட்டுவிட்டு வா” என்றார் மெய்ப்பொருளார்.
அரசனுடைய ஆணையைப் பின்பற்றி, தத்தன் சிவனடியாரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். விவரம் அறிந்தோர் சிவனடியாரைத் தாக்க முற்பட்டனர்.
சிவனடியாரைத் தாக்கக் கூடாது என்பது அரசனுடைய ஆணை என்று தத்தன் கூறியதும் அவர்கள் விலகினர்.
எல்லையில் சிவனடியாரைப் பாதுகாப்பாக விட்டதும், வேகமாகத் தத்தன் அரண்மனை திரும்பி அரசனிடம் விவரத்தைச் சொன்னான்.
“நீ எனக்கு செய்த பேருதவியைப் போல, எனக்கு யாரும் செய்ய முடியாது” என்று மனமகிழ்ச்சியுடன் கூறினார் மன்னர்.
அரண்மனையில் கூடியிருந்தோரிடம் “திருநீற்று நெறியைக் காப்பீர்” என்றபடி சிவனடியை நினைத்தார்.
அப்போது சிவபெருமான் உமையம்மையுடன் இடப வாகனத்தில் காட்சியளித்தார். மெய்ப்பொருள் நாயனார் சிவபதத்தைப் பற்றி பெரும் பேறு அடைந்தார்.
மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
உயிர் பிரியும் நிலையிலும் சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் என்று விளக்கினார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment