Thursday, December 21, 2023

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஏன் வெள்ளை மீசையோடு காட்சி தருகிறார்?



திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஏன் வெள்ளை மீசையோடு காட்சி தருகிறார்?
சோணிதபுரத்தை ஆண்ட பாணாசுரனின் மகள் உஷா. பாணாசுரனின் அரண்மனைக்கு விருந்தாளிகளாகப் பரமசிவனும் பார்வதியும் வந்தார்கள். அப்போது பார்வதி உஷாவிடம், “நாளை விடியற்காலை உன் கனவில் ஓர் ஆணழகன் தோன்றுவான். நீ அவனையே மணம் புரிந்து கொண்டால் உன் வாழ்க்கை நன்றாக அமையும்!” என ஆசீர்வதித்தாள்.

அவ்வாறே உஷாவின் கனவில் ஆணழகன் ஒருவன் தோன்றினான். காலை எழுந்தவுடன் தன் தோழி சித்ரலேகாவிடம் நடந்தவற்றைக் கூறிய உஷா, “கனவில் வந்த ஆணழகனை எவ்வாறு கண்டுபிடித்து மணம்புரிவது?” என்று கேட்டாள். சித்ரலேகா ஓவியக் கலையில் வல்லவள். “உலக மகா அழகர்களின் படங்களை நான் வரிசையாக வரைகிறேன்.
அவர்களுள் உன் கனவில் வந்தவன் யார் என நீ சொல்!” என்று கூறிய சித்ரலேகா, ஒவ்வொரு அழகனாக வரையத் தொடங்கினாள். முதலில் மன்மத மன்மதனான கண்ணனின் உருவத்தை வரைந்தாள். “இவர் என் கனவில் வந்தவரை விட மிக மிக அழகாக இருக்கிறார். பேசாமல் இவரையே மணந்து கொள்வேன். ஆனால் கனவில் வந்தவரைத் தான் மணக்க வேண்டுமெனப் பார்வதி சொல்லி இருக்கிறாளே. எனவே அடுத்த அழகனின் உருவத்தை வரை! பார்க்கலாம்!” என்றாள்.

அடுத்தபடியாக, கண்ணனின் மகன் பிரத்யும்னனின் உருவத்தை வரைந்தாள். “என் கனவில் வந்தவர் இவரை விடக் கொஞ்சம் அழகு குறைவு!” என்றாள் உஷா. பிரத்யும்னனின் மகன் அனிருத்தனின் உருவத்தை வரைந்தாள். “இவரே தான் என் கனவில் வந்தவர்!” என்றாள் உஷா. 

துவாரகையில் துயின்றுகொண்டிருந்த அனிருத்தனைக் கட்டிலோடு சோணிதபுரத்துக்குக் கொண்டு வந்தாள் சித்ரலேகா. உஷாவின் அந்தப்புரத்தில் அனிருத்தன், பாணாசுரனுக்குத் தெரியாமல் வசித்து வந்தான். ஒரு நாள் அனிருத்தனை உஷாவின் அந்தப்புரத்தில் பார்த்த பாணாசுரன் அவனைச் சிறைப்பிடித்தான்.
இச்செய்தியைக் கேள்வியுற்ற கண்ணன், பெரிய யாதவ சேனையைத் திரட்டி வந்து பாணாசுரனைப் போரில் வீழ்த்தி, உஷாவையும் அனிருத்தனையும் துவாரகைக்கு அழைத்து வந்து அவர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தான். அந்தத் திருமணத்துக்கு வந்திருந்த சித்ரலேகா, ருக்மிணியைப் பார்த்து, “பார்வதியால் நீங்கள் பிழைத்தீர்கள்!” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?” என்று கேட்டாள் ருக்மிணி. “உஷாவுக்கு ஆணழகர்களின் படங்களை எல்லாம் வரைந்து காட்டினேன். அப்போது முதலில் உங்கள் கணவரான கண்ணனின் படத்தை வரைந்த போது, அவர் மிகவும் அழகாகவும் இளமையாகவும் இருப்பதாகவும், அவரையே தான் மணக்க விரும்புவதாகவும் உஷா கூறினாள். ஏற்கெனவே உங்கள் கணவருக்குப் பதினாறாயிரத்து எட்டு மனைவிகள்.

பதினாறாயிரத்து ஒன்பதாவது மனைவியாக இவள் வந்திருப்பாள். ஆனால் கனவில் வந்தவரையே மணக்க வேண்டுமெனப் பார்வதி சொன்னதால் தாத்தாவான கண்ணனை விட்டுப் பேரனான அனிருத்தனை மணக்க உஷா முடிவெடுத்தாள்!” என்றாள் சித்ரலேகா. "இதென்ன? நம் கணவர் பேரன் பேத்திகளை எல்லாம் பெற்ற பின்பும் இன்னும் மாறாத அழகோடும் இளமையோடும் இருக்கிறாரே! இவரது பேரனை மணக்க வேண்டிய பெண்கள் கூட இவரது அழகில் மயங்குகிறார்களே!” எனச் சிந்தித்த ருக்மிணி,
கண்ணனுக்கு வயதாகி விட்டது என்பதை உலகுக்குக் காட்டவேண்டுமெனத் திட்டமிட்டாள். அதனால் கண்ணனின் திருமுகத்தில் வெண்ணெயால் மீசையை வரைந்து விட்டாள். 

அதுதான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் முகத்தில் இருக்கும் வெள்ளை மீசை.
திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதிக்கு அருகே அவரது மகன் பிரத்யும்னன், பேரன் அனிருத்தன் ஆகியோர் இருந்தாலும், பார்த்தசாரதிதான் 
அவர்களைவிட இளமையாகத் தெரிகிறார். இவர் மற்றவர்களை விட மூத்தவர் என்பதைக் காட்டவே அந்த வெள்ளை மீசை ஏற்பட்டது. 

இவ்வாறு எப்போதும் மாறாத அழகோடும் பொலிவோடும் இளமையோடும் இருக்கும் திருமால் ‘பானு:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 126-வது திருநாமம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

“பானவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உடலும் மனமும் எப்போதும்
இளமையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மருதமலை முருகன் கோயில் கோவை...

*மருதமலை* *முருகன் கோயில்...*  கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக...