Monday, December 4, 2023

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழிக்குப் புதிய அர்த்தம்.

ஆலயங்கள் ஏன் கட்டபட்டன?
சோழர் கால வரலாற்றை ஆழ்ந்து படித்தவர்களுக்கு ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழிக்குப் புதிய அர்த்தமொன்று கிடைக்கும். அக்காலக் கோயில்கள் செயல்பட்ட விதம் குறித்து கி.பி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் நிறைய செய்திகளை அளிக்கின்றன.

கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். அடுத்து ஊரில் உள்ள எல்லாவித வீடுகள் மாளிகைகளை காட்டிலும் கோவிலானது அளவில் பெரியதாகவும், உயரமான கோபுரத்தோடும் அமைந்திருக்கும். 

இதனால் கன்னிமூலை பாரமாகவும் , உயரமாகவும் இயற்கையாகவே அமைந்து விடும். இப்படி அமைத்து விட்டாலே மற்றத் திசைகளுக்கு உரிய சக்தி தானாகவே வந்து விடும்.

ஒரு ஊரின் கன்னி மூலையில் கோவில் அமைவதால் மட்டும் அந்த ஊருக்கு சிறப்புக்கள் வந்து விடாது. அந்தக் கோவிலில் ஆறுகால பூஜைகள் நடைபெறவேண்டும். ஊர்முழுக்க கேட்கும்படி மணிச் சப்தம் ஒலிக்க வேண்டும் .அந்தக் கோயிலுக்கு என்று மரத்தால் ஆன தேர் ஒன்றும் கட்டாயம் இருக்க வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக கோயிலுக்கு ஈசான்ய பாகத்தில் திருக்குளம் அமைந்திருந்தால் அந்த ஆலயம் காலத்தால் நாளுக்கு நாள் அருள் அலைகள் பெருகி சிறப்பு மிகுந்த ஆலயமாக திகழும். அது மாத்திரமல்ல, அந்தக் கோவிலின் கோபுர கலசத்தில் தான் எல்லாவித சிறப்புகளும் ஒளிந்துள்ளன. அதன் வழியாகத்தான் ஊரில் அமைதியும் செல்வமும் பெருக்கெடுக்கச் செய்யும் சக்தி மிகுந்த அலைகள் பரவுகின்றன .

அந்த காலத்தில் அரசர்கள் தான் கிராமங்களை வடிவமைத்தனர். அப்படி வடிவமைக்கும் பொது ஆறு பாயும் இடமாகப் பார்த்து கிராமங்களை நிறுவினார்கள். அப்படி வடிவமைக்கும் போது வடக்கு பக்கம் ஆறு ஓடும் படி பார்த்துக் கொண்டு, ஆற்றுக்குத் தென் பக்கத்தில் ஊரை வடிவமைப்பார்கள் பெரும்பாலும் செவ்வகமாகவே வடிவமைப்பார்கள்.

இப்படி இருக்கும் போது தென் புறத்தில் மலையோ, காடோ இருந்தால் அந்த ஊரை மிக விஷேசமாக கருதுவார்கள். பெரும்பாலும் ஊரில் எல்லோருமே வளமோடு தான் இருப்பார்க்கள். அப்படி வடிவமைக்கப்படும் ஊரின் சிறப்பையும் ஏதாவது ஒரு விதத்தில் குறித்து வைப்பார்கள். எழுதி வைப்பது ஒரு விதம், கோவிலுக்குள் யாருக்கும் இலகுவில் புரியாத சங்கேத சொற்களில் அல்லது சிற்பங்கள் மூலமாகச் செதுக்கி வைப்பது இன்னொரு விதம். குறிப்பாக ஒரு ஊரின் கோவிற் கோபுரம் அந்த ஊரைப் பற்றிய நன்மை, தீமைகளைச் சொல்லும் விதமாக இருக்கும். இதைப் பார்த்து அறிந்துணர நமக்குப் பட்டறிவு வேண்டும்.

பொதுவில் ஊரின் கன்னி மூலையில் கோயிலைக் கட்டினால், அக்னி பாதத்தில் மயானம் வரும்படி பார்த்துக் கொண்டார்கள். அதே போல ஈசான்ய மூலையில் ஆறும் குளமும் அமையும் படியும் பார்த்துக் கொண்டனர். அது வழியாகவே ஊருக்குள் வந்து செல்லும் பாதையை வடிவமைத்து கொண்டனர். வாயு மூலையில் பெரிய தோட்டம் மற்றும் மைதானம் அமைத்து அங்கே உடற்பயிற்சிகள் செய்ய வழிவகை செய்தனர். 

ஊரின் நட்ட நடுவில் ஒரு பெரிய கல் மண்டபம் எழுப்பி அங்கிருந்து நான்கு புறமும் நான்கு திசை நோக்கிச் செல்லத் தெருக்களை உருவாக்கினார்கள். கல் மண்டபத்தை சுற்றி வேலி போட்டு அதன் நடுவில் பிரம்ம பாகத்தில் எவர்காலும் படாதபடி பார்த்துக் கொண்டனர்.

இப்படி மிக நுட்பமாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட எந்த ஒரு ஊரும் காலத்தால் வளராமல் போனதேயில்லை. இப்படிப் பட்ட ஊர்களில் வாழ்பவர்கள் ஒற்றுமையுடனும் நோய் நொடி இன்றியும் வாழ்ந்தனர். இந்த ஊரின் தேவையான ஆக்க சக்தியைக் கோயில் கலசம் தவறாமல் வளங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தும் காலத்தால் சில கோயில்கள் பாழ்பட்டுப் போயின. 

மின் விளக்குகள் இல்லாத காலத்து இரவுகளில், தஞ்சை பெரிய கோயில், 
ஸ்ரீ ரங்கம், சிதம்பரம், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் போன்ற பெரிய கோயில்கள் எப்படி இருந்திருக்கும்? 

எல்லாக் கோயில்களிலும் எண்ணெய் மற்றும் நெய் தீபங்களே இரவின் இருளை நீக்கி, பகல் போல் வெளிச்சம் தந்தன. அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு எனப் பல வகைகள் இருந்தன. இவற்றுக்கான எரிபொருள், பெரும்பாலும் மன்னர், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் தந்த தான தர்மங்களில் இருந்து வந்தவையே.

ஒரு நந்தா விளக்குக்கு 90 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த ஆடுகள், கோயில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்த ஆடு மேய்ப்பவர்களிடம் கொடுக்கப்பட்டது. இதற்குப் பதிலாக அவர்கள் நாள் தோறும் ஒரு ஆழாக்கு நெய்யை ஆலயத்துக்கு அளித்தல் வேண்டும்.

இப்படி ஒரு விளக்கிற்கு 90 ஆடுகள் எனில், ஆயிரக்கணகான தீபங்களுக்கு எத்தனை எத்தனையோ ஆடுகள் விடப்பட்டிருக்கும். இதன் மூலம் எண்ணிலடங்காத ஆடு மேய்ப்போர் பயன் பெற்றுள்ளனர். இந்த தீபங்களை ஏற்றும் பணி, நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தைத் தந்தது.

கோயிலில் நடக்கும் அபிஷேகம், பூ அலங்காரம், பிரசாதம், அன்னதானம் என அனைத்துப் பணிகளையும் சுற்றி அந்த ஊரைச் சேர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் பிணைக்கப்பட்டிருந்தது. தானங்களைப் பரிபாலனம் செய்பவர், கோயிலை அழகு படுத்துபவர், கோலமிடுபவர், மேளதாளம் வாசிப்பவர், வாய்பாட்டு வாசிப்பவர், நடனமாடுபவர் எனத் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் பணியாற்றிப் பயன்பெற்றனர்.

ஆலயத்திற்குத் தானமாக வரும் பணம், தங்கம் போன்றவற்றை கிராம சபைகளுக்கும், மக்களுக்கும் தேவையான காலங்களில் வட்டிக்குக் கடனுதவி செய்து நவீன கால வங்கிகள் போல் செயல்பட்டன கோயில்கள். முக்கியமாக, இயற்கைச் சீற்றங்களின் போது,
கிராமங்களின் மறுவாழ்விற்காகக் கோயில் சொத்து பயன்பட்டது.

மக்கள் கடவுளுக்கு அளித்த காணிக்கை அவர்களுக்கே பயன்பட்டது. இதற்கு ஆதாரமாகத் தஞ்சையின் ஆலங்குடியில் கிடைத்த சோழர் காலத்துக் கல்வெட்டுகளில், ‘பொதுமக்கள் கால தோஷம் காரணமாகக் கோவிலின் பண்டாரத்திலிருந்து எல்லா தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மொத்தம் 1011 கழஞ்சு தங்கம், 464 பலம் வெள்ளி கடனாக பெற்றுக் கொண்டனர்’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலகட்டத்தில் குடிமக்களில் ஒரு பகுதியினருக்கு வருவாயை உருவாக்கும் அரசாங்கம் போலவும், கல்வி நிலையங்களாகவும், வறியவருக்கு அன்னசாலையாகவும், யாத்ரீகர்களுக்கு உறைவிடமாகவும் ஆலயங்கள் திகழ்ந்துள்ளன என்பதைக் கல்வெட்டுப் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நட்சத்திரப் பிரதோஷம் என்றால் என்ன❓

1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த...