சைவ சமயம் தழைக்கச் செய்த அதிசய புருஷர்களுள் பெரும் நாவலராக 81 வயது வரை வாழ்ந்து அனைவருக்கும் நல்வழி காட்டிய சொல்லரசர் திருநாவுக்கரசர் ஆவார். திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து ஏராளமான அற்புதங்களைச் செய்த துறவிக்கரசு அவர்; பல்வேறு இன்னல்கள் வந்தாலும் கூட அவற்றையெல்லாம் சிவனருளால் சிதறச் செய்து கல்லோடு மிதந்த ஞானப் பெருந்தகை அவர். இன்னும் அவர் புகழை ஆர்கலியது கடந்தோன், சொல் வேந்தன், வாகீசர், தாண்டகச் சதுரர், மெய்ஞானம் பூத்தவன், தண்டமிழ் பாடினார் என்பன போன்ற 55க்கும் மேற்பட்ட புகழ் மொழிகளால் சிவபுண்ணியத் தெளிவு, பரமதி திமிர பானு, அம்பர்ப் புராணம், ஆதித்தபுரி புராணம், புலியூர்ப் புராணம், பழனித்தல புராணம், காசி ரகசியம், திருவிளையாடல் புராணம்,சிவ ரகசியம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.
அவர் வாழ்ந்த காலத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடித்தோர் சற்று பயந்து வாழ வேண்டிய காலமாக இருந்தது. திருநீறைத் தரித்தவரைக் கண்டால் தோஷம்; சிவாய நம என்ற நாமத்தை உச்சரிப்பவரைக் கண்டால் தீட்டு என்று இப்படி சமணர்கள் வாழ்ந்ததோடு விபூதி பூசியவரைக் கண்டபோது ‘கண்டு முட்டு’ என்றும் சிவ நாமத்தை உச்சரிக்கக் கேட்டால் ‘கேட்டு முட்டு’ என்றும் கூறுவது வழக்கம்.
அப்படிப்பட்ட காலத்தில் அந்த சமணர்களோடு வாழ்க்கையின் முற்பகுதியைக் கழித்துப் பின்னால் சிவனருளால் அவன் தாள் வணங்கித் தானும் உய்ந்து மற்றவரையும் உய்ய வழி வகுத்தார் அவர்.
பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளில் அவர் பாடிய சில பதிகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. திருமுறை கண்ட புராணத்தில் உமாபதி சிவாசாரியார் ‘கூற்றாயினவாறு’ என்பது தொடங்கி ‘புகலூர்ப் பதிகம்’ ஈறாக சுமார் 16000 பதிகங்களை நாவுக்கரசர் பாடி அருளியதாகக் குறிப்பிடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனார் ஏழ் எழுநூறு என்று கூறுவதால் 4900 பதிகங்கள் அவர் காலத்தில் கிடைத்திருந்ததை அறிகிறோம். இன்றோ நமக்கு கிடைத்துள்ளவை சுமார் 312 பதிகங்களே. 3066 பாடல்களே!
ஆனால் இவற்றைப் பாடிப் பரவினாலேயே போதும்- சிவனருள் சித்திக்கும்; தெய்வ நற்றமிழ் நம் உள்ளிருந்து ஊற்றெடுத்துப் பெருகும்.
ஏராளமான இனிய சொற்களை, அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை, நாவுக்கரசர் தனது பாடல்களிலே நமக்குத் தருகிறார். அந்தச் சொற்களில் பொதிந்திருக்கும் பொருளும், இன்பமும் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருக்கும். ஊன்றிப் படித்தாலேயே புரியும்!
ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு பார்க்கலாம். நிலா என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அதை அப்பர் சுவாமிகள் 34 இடங்களில் பயன்படுத்துகிறார்.
வெண்ணிலா, இள நிலா, தனி நிலா, பனி நிலா, ஒளி நிலா, முகிழ் நிலா, மணி நிலா, தெண் நிலா, மதி நிலா, நீள் நிலா, சில் நிலா என இப்படி பல நிலாக்களை அவர் நமக்குக் காண்பிக்கிறார். போழ் நிலா என்று ஒரு சொற்றொடர். அதாவது மறைந்து துண்டமாய்த் தோன்றும் சந்திரன் என்று இதற்குப் பொருள். இப்படி ஒவ்வொரு சொல்லாக எடுத்து அதன் சுவையைச் சொல்லப் போனால் தேனினும் இனிய சொல் என்று சொல்ல ஆரம்பித்து தேவர் தம் அமிர்தம் என்று சொல்லி முடித்து விடலாம்.
அவரது பாக்களில் உள்ள ஒரு சொல்லுக்குக் கூட நாம் ஆராய்ந்தே உரிய பொருளைக் காண முடியும். இதற்குத் தான் நாம் வல்லார் உதவியை – இதிலேயே ஊறித் திளைக்கும் சிவாசாரியர்களின் உதவியை, ஆதீனங்களின் உதவியை, அறிஞர்களின் உதவியை நாட வேண்டி வரும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment