Wednesday, April 24, 2024

அப்பர் ( எ) திருநாவுக்கரசர் சதய விழா

அப்பா் சுவாமிகள்
ஐக்கிய விழா
முக்தி தலம்:
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்க்கு சொந்தமான அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்.

#பாண்டிநாட்டுத்_தலயாத்திரை :

திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியினின்றும் புறப்பட்டுத் திருப்புத்தூர் சென்று பணிந்து பாடி திருவாலவாய்க்குச் சென்றார். செந்தமிழ்ச் சொக்கனையும் அங்கயற்கண்ணியையும் பாடி வணங்கி னார். பாண்டியமன்னன் நெடுமாறனும் மங்கையர்க்கரசியாரும் குலச் சிறையாரும் அடிபணிந்துபோற்ற மதுரையில் சிலநாள் தங்கினார். பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருப்பூவணம் இராமேச்சுரம் நெல்லை கானப்பேர் முதலிய தலங்களைத் தரிசித்துச் சோணாடு திரும்பினார்.
பல பதிகளையும் மீண்டும் தரிசித்துக்கொண்டு திருநாவுக் கரசர் திருப்புகலூரை அடைந்தார். நாடோறும் இறைவனைப் பல பதிகங்களால் பாடியும் உழவாரப்பணி செய்தும் திருப்புகலூரில் தங்கி யிருந்தார்.

#திருப்புகலூரில்_திருவடிப்பேறு :

இறைவன் திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகிற்குக் காட்டத் திருவுளங்கொண்டான். ஆண்டஅரசு உழவாரப்பணி செய் யும் இடங்களில் பொன்னும் நவமணிகளும் கிடக்கும்படிச் செய்தான். திருநாவுக்கரசர் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இயல்பு உடையாராதலின் அவற்றை ஏனைய கற்களோடு வாரித் தடாகத்துள் எறிந்தார். அப்பரின் தூய துறவற நிலையை மேலும் உலகிற்கு விளக்க எண்ணிய இறைவன் அரம்பையர் பலரை அங்குவரச் செய்தனன். அரம்பையர் ஆடல் பாடல்களால் பல்லாற்றானும் திருநாவுக்கரசரை மயக்க முற்பட்டனர். ஒன்றினாலும் மனம் திரியாத அப்பர் அவர்களைநோக்கி `உம்மால் இங்கு எனக்கு ஆகவேண்டியகுறை யாதுளது? நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளாயினேன்` என்னும் கருத்தமைந்த `பொய்மாயப் பெருங்கடலில்` என்று தொடங்கும் திருத் தாண்டகத்திருப்பதிகத்தால் தெரிவித்தருளினர். அரம்பையரும் சோர்ந்து அரசை வணங்கி அகன்றனர்.

இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக் கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். முன்னுணர்ச்சியால் "புகலூர்ப்பெருமான் சேவடிக்கீழ்த்தம்மைப் புகலாகக்கொள்வான்" என்ற கருத்துப்பட திருவிருத்தங்கள் பலவும் பாடினார்.

எல்லாவுலகமும் போற்ற #எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ" என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட அரசு ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...