Wednesday, April 24, 2024

மாணிக்கவாசகப் பெருமான் எழுப்பிய ஜகதீஸ்வரர் ஆலயம்


உலகெங்கும் இன்று சைவ நெறி தழைத்தோங்குவதற்குக் காரணம், நாயன்மார்கள். புற சமயங்களால் தன் புகழ் மங்கியிருந்த சைவ சமயம் மீண்டும் எழவும் நாடெங்கும் சிவ வழிபாடு தழைத்து ஓங்கவும், நாயன்மார்களின் ஒப்பற்ற தியாகமும் முயற்சியுமே காரணம். தமிழகத்தில், சைவ வழிபாட்டில் முக்கியமான தலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது மதுரை. ஈசன் தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க பல்வேறு திருவிளையாடல்கள் புரிந்து அருள்செய்ததும் இந்தத் தலத்தில்தான். அத்தகைய திருத்தலம், ஒரு காலத்தில் பிற சமயங்களின் ஆதிக்கத்தால் நிறைந்து விளங்கியது.

சிவ ஆலயங்கள் வழிபாடுகள் இன்றி மூடப்பட்டன. அப்படியே வழிபாடுகள் நிகழ்ந்தாலும் அதில் பெரும்பாலானோர் கலந்துகொண்டு வழிபட பயந்தனர். காரணம், அரசனை வழி நடத்திய பிற சமயத்தவர், கோயிலுக்கு வழிபட வரும் சைவர்களை அச்சுறுத்திவந்தனர். அந்த நிலையில்தான், 'நின்றசீர் நெடுமாறன்' என்னும் பாண்டிய மன்னனுக்கு அமைச்சராக வந்து சேர்ந்தார், குலச்சிறையார்.

குலச்சிறையார், மணல்மேல்குடி என்னும் தலத்தில் அவதரித்தவர். இந்தத் தலத்தில்தான் மாணிக்கவாசகப் பெருமான் எழுப்பிய ஜகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. குலச்சிறையார், இந்த ஆலயத்து இறைவனை வணங்கி பக்தியோடு வளர்ந்தார். சிவன் மேல் பக்தி பெருகியதுபோலவே அவருக்கு சிவனடியார் மீதும் பக்தி பெருகியது. அடியார்க்கு செய்யும் தொண்டே ஆண்டவருக்கு செய்யும் தொண்டு என்பதை அறிந்துகொண்டார்.

விபூதி, உருத்திராட்சம் தரித்து, ஐந்தெழுத்து மந்திரம் ஓதும் அனைத்து சிவனடியார்களையும் குலபேதம் பார்க்காது போற்றிவந்தார். நாள்தோறும் அமுது செய்விக்கும் திருத்தொண்டைச் செய்து, அவர்களுக்கு வேண்டியன செய்து அருளினார்.

மதுரையின் மன்னன் நின்றசீர் நெடுமாறப் பாண்டியன். சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதும், சமணர்களின் உபதேசங்களில் ஈடுபாடுகொண்டு, அவர்களின் சமயத்திற்கு மாறினார். இவரின் மனைவி மங்கையர்க்கரசியார். இவர், தீவிர சிவபக்தர். தன் கணவனின் சமய மாற்றத்தை நினைத்து மனம் வருந்தி, மீண்டும் சைவம் தழைக்க ஈசனை நாள்தோறும் வேண்டி வந்தார்.

இந்த நிலையில்தான் குலச்சிறையார், பாண்டியனின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் குலச்சிறையாரின் புத்திக்கூர்மையையும் குலபேதம் பாராட்டாத தன்மையையும் கண்டு, பாண்டியன் அவரை அமைச்சராக்கிக்கொண்டார். நல் அமைச்சருக்குண்டான இலக்கணங்களோடு விளங்கிய குலச்சிறையார், அரசனை மீண்டும் சைவ சமயம் தழுவச் செய்யும் நாளுக்காகக் காத்திருந்தார்.

ஒரு முறை திருஞான சம்பந்தர், பாண்டிய நாட்டுக்கு அருகில் இருந்த திருமறைக்காட்டுக்கு வந்ததாகத் தகவல் அறிந்தார் குலச்சிறையார். அன்னை உமையவளிடம் ஞானம் பெற்ற திருஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்துவந்தால், இங்கிருக்கும் அஞ்ஞான இருளை அழித்துவிடலாம் என்று அரசி மங்கையர்க்கரசியாரிடம் தெரிவித்தார். உடனே மனம் மகிழ்ந்த அரசியும், ஞானசம்பந்தரை மதுரை அழைத்துவர ஏற்பாடுகள் செய்யச் சொன்னார். அதன்படி ஞான சம்பந்தரும் மதுரை மாநகரம் வந்தார்.

குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியும் சென்று ஞானசம்பந்தரைப் பணிந்தனர். அப்போது சம்பந்தர், "புற சமயச் சூழலில் தொண்டராக வாழும் உங்களைக் காண வந்தோம்" என்று சொல்லி இருவருக்கும் ஆசி வழங்கினார். இருவரும் ஞான சம்பந்தர் வழங்கிய திருநீற்றைப் பெற்றுக்கொண்டு அரண்மனை சென்றனர்.

'ஞானசம்பந்தர், மன்னனின் உள்ளத்தையும் மாற்றிவிடலாம்' என்று அஞ்சிய சமணர்கள், சம்பந்தர் இருந்த மண்டபத்தைத் தீக்கிரையாக்கினர். இதனால் மனம் வருந்திய சம்பந்தர், " தீ எய்தவரையே சென்று சேரட்டும்" என்று கூறினார். உடனே தீயின் வெப்பம் மன்னனின் வயிற்றைச் சென்றடைந்தது. மன்னன் தீராத வெம்மை நோயினால் அவதியுற்றார்.

சமணர்கள், தங்களால் இயன்ற அனைத்து வைத்தியங்களையும் மந்திரங்களையும் செய்தும் மன்னனின் நோய் நீங்கவில்லை. அரசியாரும் குலச்சிறையாரும் மன்னரை அணுகி, சம்பந்தரின் பெருமைகளை எடுத்துச் சொல்ல, மன்னரும் சம்பந்தரை சந்திக்கச் சம்மதித்தார். சம்பந்தர் கைத் திருநீறு பட்ட கணத்தில் பாண்டியனின் நோய் குணமடைந்தது. அந்த நேரத்தில், மன்னனை நிறைத்திருந்த அஞ்ஞான இருளும் அகன்று சிவஞானம் உண்டாயிற்று. மீண்டும் மதுரையில் சைவம் தழைத்து ஓங்கியது. பாண்டியமன்னன், பல்வேறு திருப்பணிகளைச் செய்து மென்மேலும் சைவ சமயத்தைத் தழைக்கச் செய்தார்.

இவை அனைத்திற்கும் காரணமாகத் திகழ்ந்தது குலச்சிறையாரின் பக்தியே ஆகும். அதனால்தான், 'பெருநம்பி' என்று அழைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகளும், 'குணங்கொடு பணியுங் குலச்சிறை'  என ஞான சம்பந்தரும் குலச்சிறையாரைப் போற்றிப்படியுள்ளனர்.

ஓம் நமசிவாய

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...