கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூரிலுள்ள அர்த்தநாரீசுவரர் கோயில் தமிழகத்தில் எஞ்சி நிற்கக் கூடிய ஒருசில மாடக் கோயில்களில் (யானை ஏற முடியாத உயரத்தில் அமைக்கப்படும் கோயில்) ஒன்று. சுமார் 4 மீட்டர் உயரமுள்ள பீடத்தின்மீது கோயில் அமைந்துள்ளது. மலையைச் சுற்றிக் கருங்கல் சுவர் எழுப்பி அதையே பீடமாக மாற்றியிருக்கின்றனர்.
நீண்ட மதில்களுடனும், வானுயரக் கோபுரத்துடனும் காட்சிதரும் இக்கோயில், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தெய்வீகன் என்னும் மன்னனால் எழுப்பப்பட்டிருக்கலாம். சோழ, பாண்டிய, விஜயநகர வேந்தர்களின் அரியக் கல்வெட்டுக்கள், சிற்பங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது இக்கோயில்.
இக்கோயிலின் மீதுப்பாடப்பட்ட புராணம் ‘இறைவாசநல்லூர்த் தல புராண’மாகும். இதை இயற்றியவர் புராணத் திருமலைநாதர். இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவரும் மேற்கு நோக்கிக் காட்சித் தருகிறார். மூலவரை நோக்கி அமைந்திருக்க வேண்டிய நந்தீசுவரும் மேற்கு நோக்கியே அமைந்திருக்கிறார். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியுள்ளது.
ஊர்ப்பாகங் கொண்டருளிய மகாதேவர், ஊர்ப்பாகங் கொண்டருளிய நாயனார், ஊர்ப்பாகங் கொண்டருளிய தம்பிரானார், சிகரசிகாமணி நாதர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட மூலவர், இப்போது அர்த்தநாரீசுவரர் என்றழைக்கப்படுகிறார். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பள்ளியறை நம்பிராட்டியார் என்றழைக்கப்பட்ட அம்பாள், பிரஹன் நாயகி எனப்படுகிறார்.
No comments:
Post a Comment