உத்தமசோழபுரம். இந்த ஊரில் இருக்கிறது ஆயிரமாண்டுகள் பழமைவாய்ந்த கரபுரநாதர் கோயில். தமிழகத்தில் சாய்ந்த கோலத்தில் சிவன் அருள்பாலிக்கும் ஒரே கோயில் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர், கரபுரநாதர். லிங்க வடிவில் உள்ள கரபுரநாதரின் தலை சற்று சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. ‘‘கரபுரநாதருக்கு அர்ச்சனை செய்துவந்தார் ஓர் அர்ச்சகர். ஒருநாள் அவர் நோயுற்ற காரணத்தால், அவரால் கோயிலுக்கு வர முடியவில்லை. ஆனாலும், இறைவனுக்கு வழக்கமான அர்ச்சனையை செய்ய வேண்டுமே! அதனால், தன் மகன் குணசீலன் என்ற சிறுவனை கோயிலுக்கு அனுப்பினார். குணசீலனும் கோயிலுக்கு வந்தான். சிவனுக்கு செய்ய வேண்டிய கைங்கர்யங்கள் அனைத்தையும் செய்தான். அர்ச்சனையையும் செய்து முடித்தான். பிறகு, கரபுரநாதருக்கு மாலை அணிவிக்க முற்பட்டான். ஆனால், உயரம் போதாத காரணத்தால், லிங்கத்தின் தலை அவனுக்கு எட்டவில்லை. பதறிப்போனான்.
`இறைவா! உனக்கு அனைத்து சேவைகளையும் செய்தேனே... இந்த மாலையை என்னால் அணிவிக்க முடியாமல் போய்விடுமோ... கருணை காட்ட மாட்டாயா? என்று மனமாற கண்ணீர்மல்க இறைவனை வேண்டினான். கருணைக்கடலான ஈசன், சிறுவன் குரலுக்கு மனம் இரங்கினார். லேசாக தலையை சாய்த்தார். குணசீலன், ஈசனுக்கு மாலையை அணிவித்தான். இந்த காரணத்தால் ‘முடி சாய்ந்த மன்னர்’ என்ற திருநாமம் கரபுரநாதருக்கு உண்டானது என்பதும் இதற்கான திருக்கதையாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் பெருமைகளை உணர்ந்த அன்றைய சோழ மன்னர்கள், இங்கு வந்து வழிபட்டு, திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதனால் இறைவனை ‘சோழேஸ்வரர்’ என்றும் திருநாமம் சூட்டி அழைக்கின்றனர் பக்தர்கள். சோழர்கள் மட்டுமல்ல சேர பாண்டியர்களும் இந்த ஈசனை வழிபட்டுள்ளனர். ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டு, பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே, இங்கு ராஜ கோபுரத்தை அடுத்துள்ள நுழைவாயிலின் மேற்புறத்தில் மூவேந்தர்களின் சிலைகளும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரது சிலைகளும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
முன் மண்டபத்தில் உள்ள கல்தூண் மற்றும் சுவர்களில் மூவேந்தர்களின் கொடிச்சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலின் பழமையை இங்குள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. ராஜகோபுரத்தின் முன்பாக நின்ற நிலையில் தமிழ்மூதாட்டி ஔவை காட்சி தருகிறார். இந்த தலத்துக்கு வரும் பக்தர்கள் ஔவையை மனம் உருகி வணங்கிச் செல்கின்றனர். பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை. தந்தை மற்றும் தாயை இழந்த இந்த இருவரையும் ஔவையார் இங்கு அழைத்து வந்து, மூவேந்தர்களின் முன்னிலையில் திருக்கோவிலூர் மன்னருக்கு திருமணம் செய்துவைத்தாராம். மூவேந்தர்களும் இங்கு வந்து இருந்தபோது சோழ மன்னர் உத்தமசோழபுரம் என்ற இடத்திலும், சேரமன்னர் சேலம் என்ற இடத்திலும், பாண்டியமன்னர் வீரபாண்டி என்ற இடத்திலும் தங்கி இருந்ததாக தகவல்கள் கூறுகிறது. திருமணத் தடையால் வருந்தும் ஆண்களும் பெண்களும் இந்த தலத்துக்கு வந்து, சுவாமிக்கும் அம்பாளுக்கும் நெய் தீபமேற்றி திருமண வரம் வேண்டி வழிபட்டு சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
No comments:
Post a Comment