அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தென்குரங்காடுதுறை,
ஆடுதுறை அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612101
*மூலவர்:
ஆபத்சகாயேஸ்வரர்
*தாயார்:
பவளக்கொடியம்மை
*தல விருட்சம்:
பவள மல்லிகை
*தீர்த்தம்:
சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம்.
*இது பாடல் பெற்ற தலம்:
தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர்.
*ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் "ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர்.
*சுக்ரிவன் தென் குரங்காடுதுறையை அடைந்து சிவபெருமானை வழிபட்டு வரும் நாளில், பகைமை காரணமாகச் சுக்ரீவனைத் தேடிக் கொண்டு வாலி அங்கு வந்தான். மிகவும் வல்லமை படைத்த அந்த வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன், சிவனை அடைக்கலம் புகுந்து நின்று தன்னைக் காப்பாற்றியருளுமாறு வேண்டிக் கொண்டான். அப்போது சிவபிரான் சுக்ரீவனை அன்னப் பறவையாகவும் அவன் தேவியை பவள மல்லிகை மரமாகவும் வேற்றுரு கொள்ளச் செய்து காப்பாற்றியருளினார்.
*சுக்ரீவனுக்கு வந்த ஆபத்தைப் போக்கியருளி சகாயம் செய்தமையால், இறைவன் ஆபத்சகாயேசுரர் என வழங்கப்படுகின்றார். அம்மையின் திருநாமம் பவளக்கொடி என்று வழங்கப்படுகிறது
*வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால்,
இத்தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது.
*சுக்ரீவன், இத்தல இறைவனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான்.
*இவ்வாலய முருகப்பெருமான் அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர். சுவாமியின் கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையாரின் கண்களும், முருகப்பெரு மானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராக சந்திப்பது வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத காட்சியாகும்.
*ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த தந்தை - மகன், இவ்வாலயம் வந்து முருகப்பெருமானை வேண்டி பரிகார பூஜை செய்துக் கொண்டால், வினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
*நடராஜர் தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடிய ஆனந்த நடனத்தைக் கண்டுகளிக்க இயலாத அகத்தியரும் ஏனைய முனிவர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க இறைவன் குரங்காடுதுறையில் ஆனந்த நடனம் ஆடியருளினார்.
*அனுமார் முன்னொரு சமையம் திருக்கயிலை மலையில் இசைபாடிக் கொண்டிருந்தார். அவ்வழியே வந்த நாரதர் அந்த இசையைக் கேட்டு மெய்மறந்து அங்கே அமர்ந்திருந்தார். பிறகு அவர் புறப்படும் போது கீழே வைத்திருந்த "மகதி' என்னும் வீணை மீது பனி முடியதால் எடுக்க இயலாமல் புதைந்திருந்தது. அது கண்ட நாரதர் வெகுண்டு அனுமானை நோக்கி உன் இசையை நீ மறப்பாயாக என்று சபித்தார். மனம் வருந்திய அனுமான், சுக்ரீவன் வழிபட்ட தென்குரங்காடுதுறைக்கு வந்து ஆபத்சகாயேசுவரரை மனமுருகி வழிபட்டு மறந்து போன இசைஞானத்தை மீண்டும் பெற்றார்.
*அரதத்தர் நாள்தோறும் திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில்
இடம்பெறும் ஏழூர்த்தலங்களான கஞ்சனூர், திருக்கோடிக்கா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை, ஆகிய சிவத்தலங்களையும் தரிசித்த பின்னரே உணவு உட்கொள்ளும் வழக்கம் உடையவர். ஒரு நாள் வழக்கம் போல ஆடுதுறையை வழிபட்டு மீளும்போது இருள் சூழ்ந்து மழை பெய்தது. அவர் வழியறியாமல் திகைத்து நின்றார். ஆபத்சகாயேசுரர் வயோதிக அந்தண வடிவங் கொண்டு, கோல் தாங்கிய கையினராய் அவருக்கு வழித் துணையாகச் சென்று அவரது இல்லத்தில் அவரைவிட்டு வந்ததாகக் கூறுவர்.
*அகத்தியர் இத்தலத்தில் சுவர்ண பைரவர் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பல வரங்களைப் பெற்று மகிழ்ந்தார்.
*பவுர்ணமியில் 'அகத்தியருக்கு' சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
*சுவர்ண பைரவரைச் சிறப்போடு பூஜை செய்து அன்புடன் வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். தீராத நோய்கள் தீரும்; தனம் தானியம் பெருகும்; புகழ் உண்டாகும்.
*ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சுவாமி மீது படுகின்றன.
*சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும்சனி பகவானுக்கு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனை செய்துவழிபட்டால் தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்படும், நல்லதே நடக்கும் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
*அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாதம் ஒருமுறை தனது ஜன்ம நட்சத்திர நாளில், ராகு காலத்துக்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவருக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பிறகு, ராகு காலத்தில் சுவர்ண பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு செய்து வர இறையருளும், குருவருளும், பைரவ அருளும் சித்திக்கும்.
*சோழர் காலக் கல்வெட்டுகள் பதிமூன்றும், பாண்டியர் கால கல்வெட்டுகள் இரண்டும் இங்கு உள்ளன.
*ஸ்வாமியின் கருவறை அகழி அமைப்பை உடையது.
*கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாக கட்டுவிக்கப்பட்டது இந்த ஆலயம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment