Tuesday, June 18, 2024

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள்....



சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருவாகியுள்ளன. இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலாம்.
பிரம்மாவின் புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடம் 'பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்' வரமாகப் பெற்றான். மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான். இப்படி எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான்.
தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான். ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்னும் தலத்தில் யாகம் தொடங்கப்பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி.... யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான்.

சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.
இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதாக சிவபுராணம் தெரிவிக்கின்றது.

சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.

51 சக்தி பீடங்கள் எங்கு அமைந்துள்ள என்று பார்க்கலாம். இந்த சக்தி பீடங்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் மனதார நினைத்து வணங்கலாம். அவரவர்கள் வசிக்கும் ஊருக்கு அருகில் உள்ள சக்தி பீடங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சென்று வரலாம்.

1 மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை-
(திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி- (விரஜாபீடம்) உ.பி
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள் உடனுறை அருணாசலேஸ்வரர் கோயில், அருணை சக்தி பீடமாக போற்றப்படுகிறது. விநாயகருக்கான அறுபடை வீடுகளில் இத்தலம் முதலாம் படை வீடாகும். பஞ்ச பூதத் தலங்களுள் அக்னி தலமாகக் கருதப்படும் இத்தலம் சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களுள் 233-வது தலமாகும்.

“உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே”

திருவண்ணாமலை குறித்து திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறை திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் உண்ணாமுலை அம்பாளின் திருப்பெயருடன் தொடங்குகிறது.

பார்வதி தேவி சிவபெருமான் தேகத்தில் பாதியைப் பெற்று அர்த்தநாரியாக வரம் வேண்டினார். சிவபெருமானின் வழிகாட்டுதலின் படி காஞ்சிபுரம் வந்து அங்கு மணலால் ஒரு லிங்கம் அமைத்து தவம் இருந்தாள்.

பின்னர், அக்னி ஸ்தம்பமாக சிவபெருமான் காட்சி கொடுத்த திருவண்ணாமலையில் கெளதம ரிஷியின் ஆச்ரமத்துக்கு வந்தாள். மலை வடிவமாக லிங்கம் காட்சிதரும் திருவண்ணாமலையில் தவத்தை தொடருமாறு முனிவர் கூற தேவியும் தனது தவத்தை தொடர்ந்தாள். அங்குதான் மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் அக்னி ஸ்வரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்து, தனது இடதுபாகத்தை அன்னைக்கு அளித்தார்.

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை நாளில் அர்த்தநாரீச்வரராக சிவபெருமான் எழுந்தருள்வதையும், தொடர்ந்து மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதையும் இப்போதும் நாம் தரிசிக்கிறோம்.பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னித்தலமாகும். அண்ணாமலையார் சன்னதிக்கு இடதுபுறம் தனிக்கோயிலில் ஸ்ரீ உண்ணாமுலை அம்பாள் வீற்றிருக்கிறார். அபிதகுஜாம்பிகை, திருக்காமக்கோட்ட நம்பிராட்டி என்ற பெயர்களும் அம்பாளுக்கு உண்டு.திருமுறைப் பாடல் பெற்ற 275 சிவன் கோயில்கள் திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து திருவெம்பாவை பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றினார். திரு அண்ணாமலையார் குறித்து ஏராளமான பதிகங்கள் பாடப்பட்டது போல், இத்தலத்து அம்பாள் குறித்தும் உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம் ஆகியவை பாடப்பட்டுள்ளன.

#தல வரலாறு:

ஒருமுறை, பிரம்மதேவருக்கும் திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். இருவரில் யார் தனது அடியையும் முடியையும் கண்டு வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று சிவபெருமான் அறிவித்துவிட்டு, ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியில் உள்ள திருவண்ணாமலையாகும்.

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று அர்த்தம். பிரம்மதேவர், திருமால் இருவராலும் சிவபெருமானின் அடியையும் முடியையும் நெருங்கவே முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் கிட்டியது.

பிருங்கி முனிவர் எப்போதும் பார்வதிதேவியை வணங்காமல், சிவபெருமானை மட்டுமே வணங்கி, வலம் வருவார். அவருக்கு சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக, சிவபெருமான், அம்பிகையைப் பிரிந்தார். பார்வதிதேவி, சிவபெருமானுடன் இணைவதற்காக, இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு நேரில் காட்சியளித்த சிவபெருமான், அவரை தனது இடது பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். உண்மையை உணர்ந்த பிருங்கி முனிவர், தனது செயலுக்காக வருந்தினார். இச்சம்பவம் சிவராத்திரி நாளில் நடைபெற்றது. சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்தது இத்தலத்தில்தான் என்பதால், இத்தலம் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது.

#மலைச் சிறப்பு:

லிங்கமே மலையாக அமைந்த திருவண்ணாமலையை கீழ் திசையிலிருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தைக் குறிக்கும். கிரிவலப் பாதையிலிருந்து பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை உணர்த்துகிறது. மலையின் பின்னால் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவுபடுத்தும். கிரிவலம் முடிக்கும்போது 5 முகங்கள் காணப்படும். இது சிவபெருமானின் திருமுகங்களைக் குறிக்கும்.

திருவண்ணாமலை, அருணகிரியார் பிறந்து வளர்ந்து முக்தி அடைந்த தலமாகும். வாழ்க்கையை வெறுத்து தன்னுயிர் மாய்த்துக்கொள்ள அருணகிரியார் துணிந்தபோது, முருகப் பெருமானே வந்து அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்டார். இத்தலம் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தலமாக உள்ளது. சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார், இடைக்காட்டுச் சித்தர், அம்மணி அம்மாள், அண்ணாமலை சுவாமிகள், அப்பைய தீட்சிதர், ஈசான்ய ஞானதேசிகர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், தம்பிரான் சுவாமிகள், மூக்குப் பொடி சித்தர், விருப்பாட்சி முனிவர், மங்கையர்க்கரசியார், ராதாபாய் அம்மை போன்றோர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவர், இவர்களில் பலர் இங்கேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள்.

#கிரிவலச் சிறப்பு:

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை என்று சிறப்பு பெற்ற தலத்தில் ‘நான்’ என்ற அகந்தை அழிந்தது. உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. பௌர்ணமி நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும் மலையிலுள்ள மூலிகைச் செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அன்றைய தினத்தில் மலையைச் சுற்றி வந்தால் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது.

கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் பார்வதி தேவிக்கு சிவபெருமான் இடப்பாகம் அளித்ததால் அன்றைய தினத்தில் கிரிவலம் செய்வது சிறப்பு என்று கூறப்படுகிறது. முனிவர்கள் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷ தினங்களில் கிரிவலம் வந்தார்கள். அக்னி தலமாக இருப்பதால், அக்னிக்கு உரிய செவ்வாய்க்கிழமையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்தால் சிவபதவிகள் கிடைக்கும். திங்கள் – இந்திரபதவி கிடைக்கும். செவ்வாய் – கடன், வறுமை நீங்கும். புதன் – கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும். வியாழன் – ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிடைக்கும். வெள்ளி – விஷ்ணு பதம் அடையலாம். சனிக்கிழமை – நவக்கிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அமாவாசை தினத்தில் கிரிவலம் வந்தால் மனக்கவலைகள் தீரும். தம்பதியர் 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் நீராடி கிரிவலம் வந்தால் மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்டு திருவண்ணாமலை அமைந்துள்ளது, இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியன கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன. இந்த மலையின் சுற்றளவு 14 கிமீ ஆகும்.

#கோயில் அமைப்பு:

கோயிலில், 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சந்நிதிகள், 22 விநாயகர், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், பால ரமணர் தவம் செய்த இடமான பாதாள லிங்கம், 43 செப்புச் சிலைகள், திருமண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் உள்ளே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தக் குளங்கள் உள்ளன.

கிளிக்கோபுரம் அருகில் உள்ள தீப தரிசன மண்டபம், மங்கையர்கரசி அம்மையாரால் 1202-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. தீபத் திருநாளில் இங்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வது வழக்கம்.

24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவண்ணாமலை கோயிலை கட்டி முடிக்க 1,000 ஆண்டுகள் ஆனதாக கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ், கன்னடம், சம்ஸ்கிருத மொழிகளில் இக்கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இதிகாச காலத்தில் மகிழ மரத்தடியில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்குத் திருப்பணி செய்தவர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் குறிப்பிடத்தக்கவர்கள். வல்லாள மகாராஜா மீது கொண்ட தனிப்பட்ட பாசத்தால், அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்ட அண்ணாமலையார், அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் அண்ணாமலையார், அவருக்கு ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து கடமைகளை செய்து (திதி கொடுப்பது) வருகிறார்.

#கார்த்திகை மகாதீபம்:

கார்த்திகை மகாதீபம் இக்கோயில் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவு நாளில் சுவாமி, அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது, 10 தீபங்களை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று கொடிக்கம்பம் அருகே தீபக் கொப்பரையில் ஒன்று சேர்த்து எரியவிடுவது வழக்கம். இத்தத்துவம் ‘ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாதல்’ எனப்படுகிறது. பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக அருள்கிறார் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது. அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வராக சுவாமி அருள்பாலிப்பார். உடனே மலையில் உள்ளவர்களுக்கு சைகை காண்பிக்கப்பட்டு அங்கு மகாதீபம் ஏற்றப்படும்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3 டன் பசு நெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றப்படுகிறது, தீபத்தின் ஒளி, 30 கிமீ தொலைவில் இருப்பவர்களுக்கும் தெரியும். இறைவன் ஜோதி வடிவானவன். அவனுடன் நாம் இரண்டறக் கலப்பதால் அவரவர் முன்வினைப் பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்கும் என்பதை விளக்குவதே கார்த்திகை தீபத் தத்துவம் ஆகும்.

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். தீபம் என்பது திருமகளின் வடிவத்தையும் (சுடர்) கலைமகளின் பிம்பத்தையும் (ஒளி), மலைமகளின் சக்தியையும் (வெப்பம்) ஒன்று சேர்த்தது. தீபச்சுடரில் முப்பெரும்தேவியரின் வடிவத்தை காணலாம். தீப ஒளி, தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

தீபத்தின் அடிப்பாகத்தில் பிரம்மதேவர், தண்டு பாகத்தில் திருமால், நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் புரிகிறார்கள். எல்லா நாளும் தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்று கூறப்பட்டாலும், கார்த்திகை மாதத்தில் கோயில்களிலும் இல்லங்களிலும் விளக்கேற்றுவது அனைத்து மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் என்பது ஐதீகம்.

#நூல்கள்:

திருவண்ணாமலை தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாச்சல புராணம், அருணைக் கலம்பகம், குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா ஆகியன திருவண்ணாமலையின் பெருமையை உரைக்கும் நூல்களாகும். கார்த்திகை தீப வெண்பா, அருணாசலேசுவரர் பதிகம், உண்ணாமலையம்மன் சதகம், உண்ணாமுலையம்மன் வருகைப் பதிகம், அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணாசல அட்சரமாலை, அருணாசல நவமணி மாலை, திருவண்ணாமலைப் பதிகங்கள் ஆகியனவும் இத்தலத்தின் புகழைப் பாடும் நூல்களாகும்.

#நேர்த்திக் கடன்:

மனத் துயரம் நீங்க, வேண்டும் வரம் பெற, குழந்தை பாக்கியம் பெற, திருமணத் தடை நீங்க, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, வியாபாரத்தில் மேன்மை அடைய, வேலையில் முன்னேற்றம் பெற, வழக்கில் வெற்றி பெற இத்தலத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். தொட்டில் கட்டுவது, துலாபாரம் எடுப்பது, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது, திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் முதலானவற்றை செய்து வருடம் முழுமைக்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

#திருவிழாக்கள்:

கார்த்திகை மாத பிரம்மோற்சவம், கார்த்திகை தீபத் திருவிழா, மாசி சிவராத்திரி, தை மாத மாட்டுப் பொங்கல் திருவூடல் உற்சவம், தை மாத ரதசப்தமி, மாசி மக தீர்த்தவாரி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், ஆடிப்பூர தீமிதி விழா ஆகியவை இங்கு சிறப்பாக நடைபெறும். தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு, பிரதோஷ தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...